II இராஜாக்கள் 10

1 12 2Ki 10 1 ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரலேன் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
2 12 2Ki 10 2 அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே.
3 12 2Ki 10 3 இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.
4 12 2Ki 10 4 அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
5 12 2Ki 10 5 ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
6 12 2Ki 10 6 அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.
7 12 2Ki 10 7 இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
8 12 2Ki 10 8 அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்துவையுங்கள் என்றான்.
9 12 2Ki 10 9 மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும், இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
10 12 2Ki 10 10 ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
11 12 2Ki 10 11 யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.
12 12 2Ki 10 12 பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,
13 12 2Ki 10 13 யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
14 12 2Ki 10 14 அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டு பேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
15 12 2Ki 10 15 அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
16 12 2Ki 10 16 நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
17 12 2Ki 10 17 அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.
18 12 2Ki 10 18 பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
19 12 2Ki 10 19 இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.
20 12 2Ki 10 20 பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
21 12 2Ki 10 21 யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.
22 12 2Ki 10 22 அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.
23 12 2Ki 10 23 பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
24 12 2Ki 10 24 அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்தபின்பு, யெகூ வெளியிலே எண்பது பேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
25 12 2Ki 10 25 சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சோர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,
26 12 2Ki 10 26 பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
27 12 2Ki 10 27 பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.
28 12 2Ki 10 28 இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
29 12 2Ki 10 29 ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரோபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
30 12 2Ki 10 30 கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
31 12 2Ki 10 31 ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
32 12 2Ki 10 32 அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
33 12 2Ki 10 33 யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனோசேயர், இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.
34 12 2Ki 10 34 யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
35 12 2Ki 10 35 யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
36 12 2Ki 10 36 யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.