1 10 2Sa 18 1 தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,
2 10 2Sa 18 2 பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
3 10 2Sa 18 3 ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி, நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
4 10 2Sa 18 4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த்தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
5 10 2Sa 18 5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜாஅப்சலோமைக் குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
6 10 2Sa 18 6 ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
7 10 2Sa 18 7 அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப் பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
8 10 2Sa 18 8 யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம்.
9 10 2Sa 18 9 அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறுகழுதை அப்பாலே போயிற்று.
10 10 2Sa 18 10 அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக் கண்டேன் என்றான்.
11 10 2Sa 18 11 அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.
12 10 2Sa 18 12 அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என்கையை நீட்ட மாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
13 10 2Sa 18 13 ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்வேனாவேன்; நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
14 10 2Sa 18 14 ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
15 10 2Sa 18 15 அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.
16 10 2Sa 18 16 அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
17 10 2Sa 18 17 அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
18 10 2Sa 18 18 அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்கு தன் பேரைத் தரித்தான்; அது இந்நாள் வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19 10 2Sa 18 19 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டு போக, நான் ஓடட்டுமே என்றான்.
20 10 2Sa 18 20 யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டாம் என்று சொல்லி,
21 10 2Sa 18 21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
22 10 2Sa 18 22 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
23 10 2Sa 18 23 அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமி வழியாயோடிக் கூஷிக்கு முந்திக்கொண்டான்.
24 10 2Sa 18 24 தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
25 10 2Sa 18 25 கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது,
26 10 2Sa 18 26 ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
27 10 2Sa 18 27 மேலும் ஜாமங்காக்கிறவன்: முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
28 10 2Sa 18 28 அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
29 10 2Sa 18 29 அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது. ஆனாலும் அது இன்னதென்று எனக்குத் தெரியாது என்றான்.
30 10 2Sa 18 30 அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
31 10 2Sa 18 31 இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயம் செய்தார் என்றான்.
32 10 2Sa 18 32 அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.
33 10 2Sa 18 33 அப்பொழுதுராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.