உபாகமம் 28

1 5 Deu 28 1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2 5 Deu 28 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
3 5 Deu 28 3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
4 5 Deu 28 4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
5 5 Deu 28 5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
6 5 Deu 28 6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
7 5 Deu 28 7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
8 5 Deu 28 8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
9 5 Deu 28 9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
10 5 Deu 28 10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
11 5 Deu 28 11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
12 5 Deu 28 12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
13 5 Deu 28 13 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,
14 5 Deu 28 14 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
15 5 Deu 28 15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
16 5 Deu 28 16 நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
17 5 Deu 28 17 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
18 5 Deu 28 18 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
19 5 Deu 28 19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20 5 Deu 28 20 என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
21 5 Deu 28 21 நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
22 5 Deu 28 22 கர்த்தர்உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
23 5 Deu 28 23 உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
24 5 Deu 28 24 உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
25 5 Deu 28 25 உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
26 5 Deu 28 26 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள்.
27 5 Deu 28 27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28 5 Deu 28 28 கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
29 5 Deu 28 29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
30 5 Deu 28 30 பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31 5 Deu 28 31 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும், விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
32 5 Deu 28 32 உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்ததுப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
33 5 Deu 28 33 உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
34 5 Deu 28 34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
35 5 Deu 28 35 உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
36 5 Deu 28 36 கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
37 5 Deu 28 37 கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
38 5 Deu 28 38 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
39 5 Deu 28 39 திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும்.
40 5 Deu 28 40 ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
41 5 Deu 28 41 நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
42 5 Deu 28 42 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
43 5 Deu 28 43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
44 5 Deu 28 44 அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலைவனாயிருப்பான்; நீ வாலாயிருப்பாய்.
45 5 Deu 28 45 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,
46 5 Deu 28 46 உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
47 5 Deu 28 47 சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,
48 5 Deu 28 48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
49 5 Deu 28 49 கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
50 5 Deu 28 50 உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.
51 5 Deu 28 51 நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.
52 5 Deu 28 52 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.
53 5 Deu 28 53 உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
54 5 Deu 28 54 உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு உன்னை நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
55 5 Deu 28 55 தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
56 5 Deu 28 56 உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயந்த செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
57 5 Deu 28 57 உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங் காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
58 5 Deu 28 58 உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,
59 5 Deu 28 59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
60 5 Deu 28 60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
61 5 Deu 28 61 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
62 5 Deu 28 62 திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.
63 5 Deu 28 63 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.
64 5 Deu 28 64 கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
65 5 Deu 28 65 அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
66 5 Deu 28 66 உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
67 5 Deu 28 67 நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
68 5 Deu 28 68 இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள், உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.