எசேக்கியேல் 10

1 26 Eze 10 1 இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
2 26 Eze 10 2 அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின்கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண் காண உள்ளே பிரவேசித்தான்.
3 26 Eze 10 3 அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிரகாரத்தை நிரப்பிற்று.
4 26 Eze 10 4 கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிரகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
5 26 Eze 10 5 கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிரகாரமட்டும் கேட்கப்பட்டது.
6 26 Eze 10 6 அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்துச் சக்கரங்களண்டையிலே நின்றான்.
7 26 Eze 10 7 அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கிதரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
8 26 Eze 10 8 கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
9 26 Eze 10 9 இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.
10 26 Eze 10 10 அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
11 26 Eze 10 11 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலுபக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
12 26 Eze 10 12 அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
13 26 Eze 10 13 அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
14 26 Eze 10 14 ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன் முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.
15 26 Eze 10 15 கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
16 26 Eze 10 16 கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
17 26 Eze 10 17 அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
18 26 Eze 10 18 கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
19 26 Eze 10 19 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காணப் பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
20 26 Eze 10 20 இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
21 26 Eze 10 21 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நாலு முகமும், ஒவ்வொன்றுக்கும் நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
22 26 Eze 10 22 அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.