எசேக்கியேல் 32

1 26 Eze 32 1 பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 26 Eze 32 2 மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
3 26 Eze 32 3 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
4 26 Eze 32 4 உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின்மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
5 26 Eze 32 5 உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
6 26 Eze 32 6 நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
7 26 Eze 32 7 உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.
8 26 Eze 32 8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 26 Eze 32 9 உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும், நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
10 26 Eze 32 10 அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
11 26 Eze 32 11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல்வரும்.
12 26 Eze 32 12 பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
13 26 Eze 32 13 திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகஜீவன்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனுஷனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
14 26 Eze 32 14 அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 26 Eze 32 15 நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
16 26 Eze 32 16 இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
17 26 Eze 32 17 பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18 26 Eze 32 18 மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
19 26 Eze 32 19 மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.
20 26 Eze 32 20 அவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டவர்களின் நடுவிலே விழுவார்கள்; பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய ஜனத்திரள் யாவையும் பிடித்திழுங்கள்.
21 26 Eze 32 21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய்ப் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
22 26 Eze 32 22 அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
23 26 Eze 32 23 பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச்சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
24 26 Eze 32 24 அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதன மில்லாதவர்களாய்ப் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
25 26 Eze 32 25 வெட்டுண்டவர்களின் நடுவிலே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன்வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
26 26 Eze 32 26 அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச்சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.
27 26 Eze 32 27 ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
28 26 Eze 32 28 நீயும் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பாய்.
29 26 Eze 32 29 அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள்.
30 26 Eze 32 30 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்தில் இறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
31 26 Eze 32 31 பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32 26 Eze 32 32 என்னைப்பற்றிய கெடியை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டுபண்ணுகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.