1 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நீர் இதற்கு முன்பு செய்த மகத்தான கிரியைகளை நாங்கள் கேள்விப்பட்டு, மிகுந்த எதிர்பார்க்குதலுடன் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம். அது எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்து, இன்றிரவு ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்கள் அருளப்படும் என்று விசுவாசிப்பதற்கு எங்களை அபிஷேகிக்கிறது. (விண்ணப்பங்கள் ஏறெடுத்த) ஒவ்வொருவரையும், நீர் தனித்தனியே அறிந்திருக்கிறீர். முக்கியமாக கர்த்தாவே, மரணத் தருவாயிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் ஆத்துமாவில் ஏற்கனவே சமாதானம் இல்லாதிருந்தால் அவர்களுக்கு சமாதானத்தை அளித்து அவர்களுடைய சரீரங்களுக்கு சுகத்தை அளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, இதை அருளும். இந்த புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டத்துக்காக நாங்கள் ஒன்று கூடி வந்துள்ளதை ஆசீர்வதிப்பீராக. எங்கே இரண்டு அல்லது அதிகம் பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களுடன் நீர் இருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். இன்றிரவு உமது வார்த்தையை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மைக் கேட்கிறோம். கர்த்தாவே எங்களுடனே பேசி, எங்கள் இருதயங்களை அனல் மூட்டி, எங்களுக்கு முன்பாக உள்ள அந்த மகத்தான நேரத்துக்காக எங்களை எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்வதென்று அறிந்து கொள்ளும்படி செய்யும். ஏனெனில் நாங்கள் கர்த்தருடைய வருகைக்கு அருகில் உள்ளதாக விசுவாசிக்கிறோம்.
2 இந்த ஜனங்களுக்காக இப்பொழுது உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களுக்கு அருமையாயுள்ள விசுவாசத்தை அவர்கள் கண்டு கொள்ள ஆரம்பித்து, விசுவாசம் எதைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளனர். நடக்கவிருக்கும் ஆராதனைகளுக்காக உமக்கு நன்றி செலுத்தி, விசுவாசத்துடன் காத்திருக்கிறோம். கர்த்தாவே, நீர் பழைய காலங்களில் செய்தது போல ஏதாவதொன்றை செய்வீர் என்னும் மிகுந்த எதிர்பார்த்தலுடன் காத்திருக்கிறோம். நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, தேவன் இக்கடைசி காலத்திற்கென வாக்களித்துள்ளவைகளை ஊற்றுவதற்கு நேரம் நெருங்கிவிட்டதென்று விசுவாசிக்கிறோம்.
தேசங்கள் அனைத்திலும் உள்ளவர்களுடன் நீர் இருக்க வேண்டுமென்று உம்மைக் கேட்கிறோம். இன்றைக்கு உலகத்தின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களின் தேவைகளைக் குறித்து கேள்விப்பட்டோம். கர்த்தாவே, அவர்களுடைய விண்ணப்பங்களை அருளிச் செய்து உலகின் பல்வேறு பாகங்களில் இந்த மகத்தான காரியத்தை எதிர் நோக்கியுள்ளவர்கள், உமது மகத்தான கரம் உலகம் முழுவதும் அசைவதைக் காண அருள்புரியும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே, உமது ஆவியினாலும் உமது வார்த்தையினாலும் எங்களை சிட்சித்து, நாங்கள் தேவனுடைய சித்தத்துக்கு கீழ்படியும் ஊழியக்காரராக எங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளும்படி செய்யும். ஆதி கிறிஸ்தவர்கள் செய்ததை சிந்தித்து எங்கள் இருதயங்களில் நினைவுபடுத்திக் கொள்ளும்படி அருள் புரியும்… உம்மோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டிருந்தவர்களை நாங்கள் சந்திக்கும்போது, நாங்கள் எத்தகைய மக்களை சந்திக்கிறோம் என்று நாங்கள் நினைத்துக் கொள்ளட்டும். அவர்களுடைய முகங்கள் விசுவாசத்தினாலும் களிப்பினாலும் எவ்வளவு பிரகாசமாயிருந்திருக்கும்! அவர்கள் ஜனங்களின் மத்தியில் நடந்து சென்ற போது, அவர்களுடைய வாழ்க்கை ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையாக (எல்லா மனிதராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிரூபங்களாக) இருந்திருக்கும். தேவனே, அதை மறுபடியும் அருளுவீராக.
3 கர்த்தாவே, எங்கள் அநேகருடைய வாழ்க்கை உமக்கு அர்ப்பணிக்கப்பட்டு, பரிசுத்த ஆவி எங்களில் வாசம் செய்து எங்கள் மூலம் பேசுவாராக. நாங்கள் தெருக்களில் நடந்து உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களைப் போல் நாங்கள் இருக்கக் கூடாது என்பதை எங்கள் மனதில் நினைவுபடுத்திக் கொள்வோமாக. கர்த்தாவே, நாங்கள் வழி விலகி, இவ்வுலகில் அவர்களுக்குரிய இடத்தை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். நாங்கள் வேறொரு உலகத்திலிருந்து இங்கு வந்துள்ள பிரநிதிகள் என்பதை உணர்ந்தவர்களாய், பின்னிடத்தை எடுத்துக் கொள்கிறோம். கர்த்தாவே, அதிகாரத்துக்கு வரவிருக்கும் ஒரு ராஜ்யம் எங்களுக்குள்ளது. எங்கள் மகத்தான ராஜா விரைவில் வந்து, அவருடைய அதிகாரத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் எடுத்துக் கொள்வார். நாங்கள் இந்த பூமியில் அவருடன் ஆயிரம் வருடம் அரசாண்டு, அவருடன் சதா காலங்களிலும் இருப்போம்.
கர்த்தாவே, இதை நாங்கள் மனதில் கொண்டவர்களாய், எங்கள் ஜெபத்துக்கு பதிலை உம்மிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எங்கள் செய்கையில், எங்கள் பேச்சில், எங்கள் சிந்தையில், உமது சித்தத்துக்கு விரோதமாக நாங்கள் ஏதாகிலும் தவறு செய்திருப்போமானால், அதை இப்பொழுது அறிக்கையிடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்களைக் கழுவி சுத்திகரிப்பதாக.
இன்றிரவு அந்த சகோதரி தன் கணவன் சிக்காகோவுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினாள். கர்த்தராகிய தேவனே, அவர்களை நீர் உபயோகிக்கச் சித்தமுள்ள இடத்துக்கு கொண்டு சென்று, எங்கள் கர்த்தராகிய இயேசுவை அறியாமல் இருளில் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் வெளிச்சமாக அமைந்திருக்கும்படி செய்வீராக. இப்பொழுது ஆராதனையை உம்முடைய கரங்களில் ஒப்படைகிறோம். திருத்தும், உம்முடைய வார்த்தைக்கு நாங்கள் செவி கொடுத்து, அந்த மகத்தான நேரத்துக்கென நாங்கள் எப்படி ஆயத்தப்படுவது என்று அறிந்து கொள்ளச் செய்வீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென்.
4 (ஒலிநாடாவில் காலியான இடம் - ஆசி) இங்கு சிறிது எதிர்பாராத விதமாக வந்திருக்கிறேன். நான்… வீட்டில் இருந்த காரணத்தால் வர வேண்டுமென்று தோன்றினது. அவசரமாக வெளியே எங்காவது போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலொழிய, ஜெபக் கூட்டத்துக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. என் குடும்பத்துக்கும் அது எதிர்பாராததாயிருந்தது. நான் காரில் ஏறிக் கொண்டு, "ஜெபக் கூட்டத்துக்கு போகிறேன்" என்று சொல்லி புறப்பட்டுவிட்டேன். அவள் வருவதற்கு ஆயத்தப்பட நேரமில்லாமல் போனது. ஏனெனில் நான் இங்கு வரப் போகிறேன் என்று அவளுக்குத் தெரியாது.
5 இந்த சகோதரியின் சாட்சியைக் கேட்டது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அந்த சகோதரன்… தென் கரோலினாவில் கண்ட அந்த ஒளி, அல்லது வடக்கு கரோலினாவில், எங்கோ ஓரிடத்தில், அது கிரீன்வில்லா? தென்பைன்ஸ், ஆம், சகோ. லீ வேயில் இங்கு வந்திருந்தார். ஞானஸ்நான ஆராதனையில் இன்று அவருக்கு நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். சகோ. லீ வேயில் உங்களுக்குத் தெரியும், அங்குள்ள ஊழியக்காரர்களில் ஒருவர். சகோ. பார்க்கர் தாமஸ்…
அந்த சகோதரி நிழலிடப்பட்ட நேரம் என் நினைவுக்கு வருகிறது. சகோதரியே, அது பெரிய உறுதிப்படுத்துதல். பரிசுத்த ஆவியானவர் சில சமயங்களில், நமது விசுவாசத்தை சோதித்து நாம் என்ன செய்கிறோம் என்று காண நம்மை போக அனுமதிக்கிறார்… மற்றவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறார். நீங்கள் நோக்கி, ஒன்றைக் கண்டுக் கூறும் போது… மற்றவர்கள் நோக்கி, அதை காணாமல், அது அங்கில்லை என்கின்றனர். பாருங்கள்? ஆனால் அது அங்குள்ளது.
6 பவுலுக்கு மேலேயிருந்த ஒளியை வேறு யாரும் காண முடியவில்லை. ஆனால் அது அங்கிருந்தது. வானத்திலிருந்து புறாவைப் போல் இறங்கி, ஒளி உருவில் இயேசுவின் மேலிருந்ததை யோவானைத் தவிர வேறு யாரும் காண முடியவில்லை. ஆனால் அது அங்கிருந்தது. பாருங்கள்? அதற்கு பின்பு நான் ஜனங்களிடம் அக்கினி ஸ்தம்பத்தைப் போலுள்ள இந்த ஒளியைக் குறித்து சொன்னபோது, யாருமே நம்பவில்லை. ஆனால் புகைப்படக் கருவின் இயந்திரக் கண் அதை அடையாளம் கண்டது.
பொல்லாத ஆவி கறுப்பாயிருக்கும். நமது வாழ்க்கை நிழலிடப்பட்டிருந்தது போன்றது அது. நாம் ஒளியாயிருந்தால்… நம்முடைய வாழ்க்கை இந்நாளின் ஒளியுடன் ஒத்துப் போனால், நாம் ஒளியில் நடந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் பகல் நேரத்தில் வெளியே எட்டி பார்த்து, ''நான் சூரியனைக் காண்கிறேன்" என்று சொல்வது போன்றது அது. நீங்கள் சூரியனின் நிழலைத்தான் காண்கிறீர்கள். அது சூரியனின் பிரதிபலிப்பே அல்லாமல் சூரியன் அல்ல. ஆனால் சூரியன் உள்ளதை அது நிரூபிக்கிறது.
7 நீங்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை, அல்லது நின்று கொண்டு யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பதை நான் காணும் போது நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. ஆனால் அது ஜீவனின் நிழல் மாத்திரமே. நிழல் உண்டாக வேண்டுமென்றால், அதற்கு இருள் அவசியம். பாருங்கள், நிழலுக்கு இவ்வளவு இருள், இவ்வளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் நிழல் உண்டாகும். அது முழுவதும் இருளாயிருக்காது, முழுவதும் வெளிச்சமாயிருக்காது. அது இருளாயிருந்தால், அது உண்மையில் இருளாகிவிடுகிறது. அது வெளிச்சமாயிருந்தால், நிழலாயிருக்காது. நிழல் உண்டாக அங்கு ஒன்றும் இருக்காது. ஆனால் இருளும் வெளிச்சமும் கலந்தால் நிழல் உண்டாகிறது. ஆகவே நாம் உண்மையில் வெளிச்சத்தின் நிழல்களாயிருக்கிறோம்.
நீங்கள் எங்கோ உள்ள ஒளியை பிரதிபலிக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால் (இது உங்கள் நிழலாயிருக்குமானால்), நீங்கள் மரிக்க முடியாத ஒரு வாழ்க்கை உள்ளதை அது நிரூபிக்கிறது. ஏனெனில் இந்த வாழ்க்கை மரணத்தைக் கொண்டது. பாருங்கள், ஆனால் அது ஒரு நிழல். ஏனெனில் நீங்கள் உயிர் வாழ்ந்து நடமாடி, பார்த்தல், சிந்தித்தல், அசைதல், பேசுதல் போன்ற தன்மைகளைப் பெற்றிருக்கிறீர்கள்… (சரீரத்தின் ஐம்புலன்கள்). இருப்பினும் நீங்கள் மரிக்க வேண்டியவர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள் அதிகமான தொல்லை உள்ளது. அது ஒரு பிரதிபலித்தல் மாத்திரமே என்று உங்களுக்குத் தெரியும், பாருங்கள். அதில் ஜீவனும் மரணமும் கலந்துள்ளது.
8 சரீரம் மரிக்கவேண்டும். ஆனால் மரிக்க வேண்டிய உங்கள் வாழ்க்கை பரலோக ஒளியை பிரதிபலிக்குமானால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய நித்திய ஜீவனைப் பிரதிபலிக்கிறவர்களாயிருப்பீர்கள். அப்படியானால் நீங்கள் மரிக்கும்போது, நீங்கள் அந்த ஒளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் அதைத்தான் நீங்கள் பிரதிபலித்தீர்கள் நீங்கள் இருளின் உலகில் இருந்து கொண்டு, அதை தவிர வேறு வழியேயில்லை. பாருங்கள், எனவே நாம் ஒரு பிரதிபலிப்பில் இருக்கிறோம். பரிசுத்தஆவி ஒளியையும் ஜீவனையும் பிரதிபலிப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக மரணம் தேவனுக்கு முன்பாக இருளைப் பிரதிபலிக்கிறது.
9 அவை இரண்டும் இங்கே இருக்கிறது.
இந்த வார முடிவில், ஒருக்கால் ஞாயிறன்று, சிறிய புகைப் படத்தை பெரிதாக்கி அதை உங்கள் படம் தொங்கவிட்டிருக்கும் அறிக்கை பலகையில் தொங்கவிட உத்தேசித்துள்ளோம். அந்த சிறு புகைப்படம் தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தீர்களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வாரத்துக்கு முன்பு, நான் ஊழியம் செய்த ஜமய்காவில், ஒலிநாடாக்களை அனுப்பினோம். நாங்கள் ஒலிநாடாக்களை உலகம் முழுவதும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஏழு முத்திரைகள் செய்தியைக் கொண்ட ஒலிநாடாக்கள் ஜமய்காவின் உட்பிரதேசங்களை அடைந்தன. மிகவும் உள்ளில் உள்ள பகுதியில் அந்த நீல மலைகளில் குடியிருப்பவர்கள் பழங்குடியினர். இவர்களிடம் ஒரு பழைய ஒலிப்பதிவு கருவி உள்ளது. அதை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்தோம் - அது பழைய விக்ட்ரோலோ ஒலிப்பதிவுக் கருவி போன்ற ஒன்று. அதை அடிக்கடி இயக்கிவிட வேண்டும். அது நின்றுவிடும். அதை மறுபடியும் யாராவது இயக்கிவிட வேண்டும்.
10 இந்த சிறு குழுவினிடம் ஆறு வோல்டு பாட்டரியினால் இயங்கும் ஒலிப்பதிவு கருவி இருந்தது. அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து (இன்றிரவு இங்குள்ளவர்களின் எண்ணிக்கை அளவிற்கு) முத்திரைகளின் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த செய்தி தான் என்று நினைக்கிறேன். நான் ஒலிநாடாவில் பேசிக் கொண்டிருந்த போது, அதே அக்கினி ஸ்தம்பம் அறைக்குள் வருவதை அவர்கள் கவனித்தனர். அது ஒலிப்பதிவுக் கருவி வைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்து அதன் மேல் நின்றது. அவர்கள் புகைப்படக் கருவியைக் கொண்டு வந்து புகைப்படம் எடுத்தனர். அந்த படம்தான் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் நன்றாக காண்பதற்கென அதை பெரிதாக்கி அறிக்கை பலகையில் தொங்கவிடப் போகிறோம்.
11 இந்நாளில் அவருடைய சமூகத்தில் நம்மைக் கொண்டு வந்துள்ள தேவனுடைய கிருபைக்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நாம் அநேக காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நான் ஏற்கெனவே பிரசங்கித்ததன் பேரில் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன். இங்கு ஒரு புத்தகத்தில் அநேக நாட்களுக்கு முன்பு எழுதி வைத்த பிரசங்கத் தலைப்புகள் உள்ளன. எனக்கு ஒன்று கிடைத்தால் நாம் ஜெபிக்கும்போது, அதன் பேரில் ஏதாவதொன்றைப் பேச கர்த்தர் அருளுவார்.
ஞாயிற்றுக் கிழமைக்காக நாம் அதிக எதிர் நோக்குதலுடன் காத்திருக்கிறோம்.
12 நான் செய்திகளை அளித்து வருகிறேன். சென்ற ஞாயிற்றுக் கிழமை "நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டு போங்கள் என்று ஜனங்களுக்குச் சொல்" என்னும் செய்தியின் பேரில் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன்.
வரும் ஞாயிற்றுக் கிழமையன்று சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். அப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்படும். நீங்கள் வியாதியஸ்தரை அணுகி, அவர்களுக்கு ஜெபம் செய்து, அவர்கள் குணமாகவில்லை என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கும். கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறு பிரசங்கம் செய்து விட்டு… சுகமளிக்கும்ஆராதனை ஒன்றை நடத்தி, வியாதியஸ்தர் அனைவருக்காகவும் ஜெபிக்கப் போகிறேன். பில்லிபால் அல்லது வேறு யாராவது வந்து, 8 மணிக்கு சபை திறக்கப்படும் போது, உள்ளே வருபவர்களுக்கு ஜெப அட்டையை விநியோகிப்பார்கள் - அவர்கள் எப்பொழுது உள்ளே வந்தாலும்.
13 இப்பொழுது… நான் இணைக்க விரும்புகிறேன். சிலர் ஏன் வியாதியிலிருந்து குணமாவதில்லை என்பதைக் குறித்து எனக்கு எப்படியோ சிறிது ஆழ்ந்த அறிவைத் தந்திருக்கிறார் என்று நம்புகிறேன். அது புரிந்து கொள்ள இயலாமை என்பது என் கருத்து. கர்த்தருக்கு சித்தமானால், அதை குறித்து நாம் ஞாயிறன்று காலை பேசுவோம்.
புதன் இரவு ஜெபக் கூட்டம் ஒரு சுருக்கமான கூட்டம், இங்கு நாம் அப்பொழுது ஒன்று கூடி ஜெபித்து ஒன்றாக தொடர்பு கொள்கிறோம்.
14 சில நேரங்களில் நான் காணும் ஒரு தவறான காரியம் என்னவெனில், நாம் விசுவாசிப்பதில் நமக்குள்ள உத்தமக் குறைவே. இந்நாளில் தேவன் செய்து வருவதை வெஸ்லியின் நாட்களில் செய்திருந்தால், அது அவர்களுக்கு என்ன செய்திருக்கும்?
மார்டின் லூத்தரின் காலத்தில் அல்லது வேறெந்த காலத்தில், இன்று நாம் காண அவர் செய்யும் கிரியைகள் செய்யப்பட்டிருந்தால், அது சபையினாலும், ஆவியினாலும் விஞ்ஞானத்தினாலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்ச்சியாக சென்று கொண்டேயிருக்கிறது. அதை நாம் அடையாளம் கண்டு கொள்ளத் தான் வேண்டும், ஒன்று நிறைவேறுதற்கு முன்பு தேவனுடைய வார்த்தை அதை முன்னுரைக்கிறது. இவ்விதமாய் தொடர்ச்சியாக நடந்து தீர்க்கதரிசினம் உரைத்து, அவர் கூறியுள்ளது அப்படியே நிறைவேறி வருகிறது என்பதைக் காண்பித்த பிறகும் கூட, நமக்கு சந்தேகம் உள்ளது போல அதைக் குறித்து சிரத்தையற்றவர்களாய் இருக்கிறோம்… "ஒருக்கால் அது என்னைக் குறிக்கிறதா? அல்லது சபை முழுவதையும் குறிக்கிறதா? அதில் நான் உண்மையாக சேர்க்கப்பட்டிருக்கின்றேனா?" என்று வியக்கிறோம். ஞாயிறன்று காலை நமக்கு சிறிது உற்சாகமூட்டும் சில கொள்கைகளைக் குறித்து பேசலாம் என்றிருக்கிறேன்.
15 இன்றிரவு இந்த ஒன்றை நான் கண்டு, அதில் என் கவனத்தை செலுத்தினேன். இங்கு நான் வருவதற்கு முன்பு, "சகோ. நெவில் என்னைக் கண்டவுடன், 'நீங்கள் பேசுங்கள்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டால் என்ன செய்வது?" என்று எண்ணி, ஒரு சில வேத வாக்கியங்களை எழுதி வைத்துக் கொள்வது நல்லதென்று கருதினேன். அவர் மிகவும் அருமையான சகோதரன், அவரை நாம் பாராட்டுகிறோம்.
16 வார்த்தையின் மேல் நாம் ஜெபிப்பதற்கு முன்பு, ஒரு சகோதரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன். அவருடைய பெயர் எனக்கு இந்நேரத்தில் மறந்துவிட்டது (இரண்டு பேர்) அவர்கள் எனக்கு அருமையான நண்பர்கள். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சுவிசேஷ ஊழியத்தைச் செய்கின்றனர். அவர்கள் இந்த செய்திகளை ஒலிநாடாக்களில் கேட்டு, வெவ்வேறு ஸ்தாபன சபைகளை விட்டு வெளிவந்தனர். இரு இளைஞர்கள். ஒருவர் மிகவும் சிரத்தை கொண்டு, அண்மையில் கூட்டம் முடிவு பெறும் தருணத்தில் விமானம் மூலம் டூசானை வந்தடைந்தார். அப்பொழுது நான் வர்த்தகரின் காலை உணவு கூட்டத்தில் இருந்தேன் என்று நினைக்கிறேன். இந்த இளைஞர் - மிகவும் அருமையான இளைஞன் - அங்கு வந்தடைந்தார்.
இவர்கள் கான்சாஸ் நகரத்தை சேர்ந்தவர்கள். நான் விவாகத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தொலை தூரத்திலிருந்து வந்துள்ளனர். அதை நான் மெச்சுகிறேன் - தேவன் என் ஜெபத்தைக் கேட்டு அதற்கு உத்தரவு அருளுகிறார் என்னும் விசுவாசத்தை ஜனங்கள் போதிய அளவு பெற்றுள்ளதற்காக, இல்வாழ்க்கையை இவ்வாறு தொடங்கவிருக்கும் இந்த இளைஞர்கள், அவர்களுக்கு நான் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று அவர்கள் நேற்று வந்தபோது, அவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டிருந்த போதிலும், இந்தியானா நாட்டு சட்டத்தின்படி, அவர்கள் விவாகமாவதற்கு முன்பு மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டனர். எனவே வெள்ளி காலை வரைக்கும் அவர்கள் விவாகம் செய்து கொள்ள முடியாது.
17 அங்கு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சகோதரன் எழுந்து நின்று, அவர் யாரென்று நமக்கு கூறும்படி கேட்டுக் கொள்கிறேன் - அவருக்கு பக்கத்திலுள்ள அவருடைய அழகிய பெண்ணும், அதற்கு பக்கத்திலுள்ள சகோதரனும்.
(மேலும் குறிப்பிட்ட சகோதரன் சாட்சி கொடுக்கிறார் - ஆசி)
மிக்க நன்றி. கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தில் உள்ள இந்த இளம் பிரதிநிதிகளை தேவன் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் எப்பொழுது வருவாரென்று வியந்து அவருடைய வருகைக்காக நான் காத்திருக்கும் நேரத்தில், இளைஞர்களும் இளம் பெண்களும் கிறிஸ்துவை சேவிக்க வேண்டும் என்னும் நோக்கத்தை தங்கள் இருதயத்தில் கொண்டவர்களாய் இப்படி எழும்புவதைக் காணும் போது, என்னை மேய் சிலிர்க்க வைக்கிறது. கர்த்தர் உங்களைஅபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே, சகோதரியே.
18 என் வாழ்க்கையில் நான் இதுவரைக்கும் பிரசங்கம் செய்யாத சிறு நிரூபத்துக்கு நாம் வேதாகமத்தை திருப்புவோம்… ஒரே ஒரு அதிகாரம் - பிலேமோனுக்கு எழுதிய நிரூபம். என் உச்சரிப்பு சிறிது அயர்லாந்து நாட்டினரின் உச்சரிப்பு. அது மட்டுமல்ல, என் கீழ்பற்கள் கம்பியைக் கொண்டு கட்டப்பட்டு அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே சில நேரங்களில்… இந்த பெயர்கள் எப்படி உச்சரிக்கப்பட வேண்டுமென்று நான் அறிந்திருந்தும் கூட, என்னால் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. சில நேரங்களில் கல்விக் குறைவின் காரணமாக அவைகளை சரியாக உச்சரிப்பதில்லை. எனவே 'பிலேமோன்' என்று பின்னால் உள்ள யாரோ ஒருவர் கூறினார். அதுதான் சரியான உச்சரிப்பாயிருக்கும்.
முதலாம் வசனத்திலிருந்து ஓரிரண்டு வார்த்தைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுல்… (ஆங்கில வேதாகமத்தில் Paul, a Prisoner of Christ அதாவது கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுல் என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்),
கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு கட்டப்பட்டவன் என்பதை தான் என் பிரசங்கத்தின் பொருளாக உபயோகிக்க விரும்புகிறேன்.
19 பவுல் தன்னைக் கட்டப்பட்டவனாக கருதுகிறான் என்று நீங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. அவன் சுயாதீனமாகப் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவன். இருப்பினும் அவன் தன்னைக் கட்டப்பட்டவன் என்று அழைத்துக் கொள்கிறான். அவன் கொரிந்தியருக்கு நிரூபத்தை எழுதினபோது… "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்…" மற்றொரு சமயம், தீமோத்தேயுவுக்கும், பிலிப்பியருக்கும் மற்றவர்களுக்கும் எழுதும் போது, தேவனுடைய சித்தத்தினாலே "இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பவுல்…" இங்கே பிலேமோனுக்கு எழுதும் போது, "கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாகிய பவுல்…" ஒரு இரவு நான் "அப்போஸ்தலனாகிய பவுல்" என்பதைக் குறித்து பேச விரும்புகிறேன். பிறகு "ஊழியக்காரனாகிய பவுல்" அதன் பிறகு "கட்டப்பட்டவனாகிய பவுல்" என்னும் பொருளை எடுத்துக் கொண்டு பேச விரும்புகிறேன். சற்று நேரம் நாம் தலைவணங்குவோம்.
20 கர்த்தராகிய இயேசுவே, சரீர பெலன் உள்ள எவரும் இந்த வேதாகமத்தின் பக்கங்களைப் புரட்ட முடியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே அதன் உண்மையான அர்த்தத்தை எங்களுக்கு விளக்கிக் காண்பிக்க முடியும். இந்த மகத்தான தீர்க்கதரிசியான பவுல் தன்னை ஏன் கட்டப்பட்டவனாக அழைத்துக் கொண்டான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள நீர் வந்து எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவருக்காக நாங்கள் காத்திருக்கும் இந்நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.
21 இந்த நிரூபத்தை பவுல் பிலேமோனுக்கு எழுதினபோது, அவன் அந்த நகரத்தின் சிறைக்குள் ஒரு இருட்டறையில் காவல் பண்ணப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது… அவன் இருந்த காவல் பண்ணப்பட்டவன் என்னும் சொல்லின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருப்பான். அவன் இரும்புக் கம்பிகளால் சூழப்பட்டிருந்தான். எவராகிலும் அவனை விடுதலையாக்கினாலொழிய அவன் விடுதலையடைய முடியாது. ஒரு சிறைவாசியாயிருப்பது எப்படிப்பட்டது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த அப்போஸ்தலன் சிறிது… தன் உடல் சிறையில் அடைப்பட்டிருந்த அந்த நிலையைக் குறிப்பிடவில்லையென்றும் அவனுடைய ஆவி, மனம் இவைகள் இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டிருந்ததையே அந்த நிரூபத்தில் குறிப்பிடுகிறான் என்பதே என் கருத்து.
22 நாம் அனைவரும் நமது விருப்பப்படி தீர்மானம் செய்ய சுயாதீனம் அளிக்கப்பட்டுள்ளோம். தேவன் தமது நீதியின்படி அப்படி செய்திருக்கிறார். ஏனெனில் அவர் ஒவ்வொருவனையும் அதே அடிப்படையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் முதலாவது மனிதனுக்கு சுயாதீனம் அளித்த போது, அவர் தவறான அடிப்படையை கடைபிடித்ததாக ஆகிவிடும்.
பாருங்கள், இன்றிரவு நாம் ஆதாம் ஏவாள் வைக்கப்பட்டிருந்த அதே அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு வித்தியாசமும் இல்லை. நமது ஒவ்வொருவர் முன்னிலையிலும் நன்மையும் தீமையும் - ஜீவனும் மரணமும் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எதைத் தெரிந்து கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்தது. பாருங்கள்? ஆதாமும் ஏவாளும் அதைத்தான் செய்தனர். ஆனால் பாருங்கள், அவர்கள் தவறானதை தெரிந்து கொண்டனர்.
அதன் விளைவாக மனித குலம் முழுவதுமே மரண ஆக்கினைகுட்பட்டது. அதன் பிறகு தேவன் மனித உருவில் இறங்கி வந்து, மரணத்தை தம் மேலே ஏற்று, மரணத்துக்கான கிரயத்தை செலுத்தி, மரணத்துக்கு கீழ்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுதலையாக விரும்பினால், அவர்கள் விடுதலையாகும்படி செய்தார். அவர் ஆதாமையும் ஏவாளையும் கொண்டு சென்று, "நீங்கள் இரட்சிக்கப்பட விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களை நான் இரட்சிப்பேன்" என்று கூறினால், அவர் ஆதாமையும்; ஏவாளையும் தவறான அடிப்படையில் வைத்தவராகிவிடுவார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் ஜீவன், மரணம் இவைகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் அப்படி செய்தே ஆக வேண்டும்.
23 நான் சற்று முன்பு கூறினது போல், உங்கள் வாழ்க்கை நிரூபிக்கும்… நீங்கள் எந்த பக்கத்தில் இருப்பதாக உரிமை கோரினாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒவ்வொரு நாளும் புரியும் செயல்கள் நீங்கள் யாரென்பதை நிரூபிக்கும். "உங்கள் வாழ்க்கை உரக்க சத்தமிடுவதால், உங்கள் சாட்சியை என்னால் கேட்க முடியவில்லை" என்னும் பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாருங்கள், உங்கள் செயல்கள் அதிக சத்தமாயுள்ளன.
நான் கூச்சலிடுவதிலும் குதிப்பதிலும் நம்பிக்கை கொண்டவன். ஆனால் ''நீங்கள் வாழும் நிலைமையை காட்டிலும் அதிக உயரம் குதிக்க வேண்டாம். ஏனெனில் உலகம் அதைக் கவனித்துக் கொண்டிருக்கும்" என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. பாருங்கள்? நீங்கள் வாழும் நிலைமையின் மட்டத்துக்கு தான் குதிக்க வேண்டும். ஏனெனில் யாராவது ஒருவர் உங்களை கவனித்துக் கொண்டிருப்பார்.
24 நாங்கள் சபைக்கு வராவிட்டால்… அநேகர் அதைச் செய்வதில்லை. அவ்விதம் வராதவர்களில் அநேகர் உண்மையானவர்கள். சபையில் அவர்கள் அதிக சீர்கேட்டைக் காண்பதால் அதேனோடு அவர்கள் தங்களைக் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. நாம் அதைக் குறித்து அநேக முறை பேசியிருக்கிறோம்; நீங்கள் அவர்களைப் பழிக்க முடியாது (பாருங்கள்?) ஏனெனில் - தங்களைக் கிறிஸ்தவர் என்றழைத்து ஆனால் அவர்கள் செயல்படும் முறைகள்… உலகம் பெற்றுள்ள மிகப் பெரிய இடையூறுகள் அவர்களே. அவர்கள் யார்?… மனிதரும் ஸ்திரீகளும் தங்களைக் கிறிஸ்தவர் என்றழைத்துக் கொண்டு, அதற்கு மாறாக ஜீவிக்கும் மக்கள். அது முற்றிலும் சரி.
25 நியாயத்தீர்ப்பு நாளில் ஏமாற்றங்கள் வரவிருக்கின்றன… என்றென்றைக்குமான அக்கினிக்குள் போகும்படியான நியாயத்தீர்ப்பு வாசிக்கப்படுகையில், பாவியோ, கள்ளச் சாராயக்காரரோ, சூதாடியோ, விபச்சாரரோ (பாருங்கள்) அவர்கள் ஏமாற்றமடையப் போவதில்லை. ஆனால் எவனொருவன் ஒரு சபையின் பின் ஒளிந்துக் கொண்டு, தன்னைக் கிறிஸ்தவன் என்று பாசாங்கு செய்கிறானோ அவன் மட்டுமே நியாயத்தீர்ப்பின் நாளிலே ஏமாற்றமடைவான். அவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லியும், வேறு வழியில் ஜீவிப்பவன். அவன் இவ்விதம் பாசாங்கு செய்து ஜீவிப்பதைக் காட்டிலும், அவன் அதைத் துவங்காமலிருந்தால் அதுவே அவனுக்கு மேலனாதாயிருந்திருக்கும். தான் கிறிஸ்தவன் என்று கூறி வேறு வழியில் ஜீவிப்பவனே, உலகத்திற்கு மகா பெரிய இடையூறாயிருக்கிறான்.
26 உனக்கு அற்புதங்கள் செய்ய எவ்வளவு வல்லமையுள்ளது என்று அளவைக் கொண்டு முடிவு செய்யாதே, வார்த்தையிலுள்ள நம் அறிவின் அளவைக் கொண்டு நாம் நம்மை மதிப்பிடுவதில்லை. ஆனால் எப்பொழுதுமே… ஆனால் நீ இப்பொழுது எவ்விதமான ஜீவிய கனியைத் தருகின்றாய் என்பதைக் கணக்கெடுத்துப் பார். பாருங்கள்? நான் சிறிது காலத்திற்கு முன்பு அரிசோனா, பீனிக்ஸ் வர்த்தகக் குழுவின் கூட்டத்தில் பேசியதைப் போன்று… கிறிஸ்துவின் ஜீவியத்திற்கு நாம் பிரதிபலிப்பாயிருக்க வேண்டும்.
நான் கென்டக்கியில் பிறந்தேன் என்று கூறியுள்ளேன். நான் சிறுவனாயிருந்த போது அது பழங்கால… நான் குறிப்பிட்ட அந்த சிறுவனுக்கு நம்மைப் போன்ற வசிக்கும் வீடு கிடையாது. இன்றைக்குள்ள வீடுகளில், எல்லா இடங்களிலும் நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டு, அழகுள்ள ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை அழகுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் அங்கே ஒரே ஒரு சிறிய கண்ணாடி வெளியே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. அங்கே தான் அவனுடைய தாயும் தகப்பனும் தங்கள் தலை மயிரைக் சீவிக் கொள்வார்கள்.
27 வெளிப்படையாகக் கூறினால், அப்படிப்பட்ட வீடுதான் எங்களுக்கும் இருந்தது. நாங்கள் நிலைக்கண்ணாடியில் காண வேண்டுமென்றால், ஒரு பெட்டியைப் போட்டு முகம் கழுவும் இடத்திலிருந்து பலகையின் மேலேறி பார்க்க வேண்டும். அது குப்பையிலிருந்து நான் பொறுக்கின ஒரு உடைந்த நிலைக் கண்ணாடி. அது கென்டக்கியில் அல்ல, நாங்கள் தங்கியிருந்த இந்தியானாவிலுள்ள ஊடிகா பைக் என்னுமிடத்தில்.
இந்த சிறுவன் தன் உருவத்தை சரியாக நிலைக் கண்ணாடியில் கண்டதில்லை. அவன் தன் பாட்டியைக் காண நகருக்கு வந்திருந்தான். பாட்டியின் வீட்டிலிருந்த ஒரு அறையில் ஒரு முழுநிலைக் கண்ணாடி கதவில் இணைக்கப்பட்டிருந்தது. சிறுவன் அறைக்குள் ஓடினபோது… அவனுக்கு முன்னால் வேறொரு சிறுவன் அவனைப் போலவே ஓடுவதைக் கண்டான். இவன் சற்று நேரம் நின்றால் அந்த பையன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என்று நினைத்தான். இவன் நின்ற போது அவனும் நின்றான். இவன் தலையைத் திருப்பினபோது, அவனும் தலையைத் திருப்பினான். இவன் தலையை சொறிந்தபோது, அவனும் தலையை சொறிந்தான். முடிவில், இது என்னவென்று கண்டு பிடிக்க அவன் அருகில் சென்றான் (அவனுடைய தாயும் பாட்டியும் அவனை அதிசயத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள்) அவன் திகைப்புற்று, "அம்மா, அது நான்" என்றான்.
28 ஆகவே, "நாமும் கூட ஏதோ ஒன்றைப் பிரதிபலிக்கிறோம்" என்று அந்த வர்த்தகர் கூட்டத்தில் கூறினேன். பாருங்கள், நமது வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. நாம் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், யார் பக்கம் இருந்திருப்போம்? நோவா வாழ்ந்த அந்த மகத்தான நாட்களில், நாம் எந்த பக்கம் சேர்ந்திருப்போம்? மோசேயின் நாட்களில், நாம் எந்த பக்கம் சேர்ந்திருப்போம்? தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களில், உலகமே நவீனத்தில் விழுங்கப்பட்டு - நவீன யேசபேலைப் போல் தேவனுடைய உண்மையான ஊழியக்காரரை சுழல் காற்றுக்குள் துரத்திவிட்டு, சபையும் ஆசாரியர்களும் யேசபேலுக்கு தலைவணங்கியிருந்த காலத்தில் நீங்கள் எந்த பக்கம் இருந்திருப்பீர்கள்? புகழின் பக்கத்தில் சேர்ந்திருப்பீர்களா? அல்லது எலியாவுடன் நின்றிருப்பீர்களா?
29 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய நாட்களில் ஜனங்களால் வெறுக்கப்பட்டவராயிருந்தார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது! அவர் உலகில் கல்வி கற்கவில்லை. அவர் எந்த பள்ளிக்கும் செல்லவில்லை, எந்த வேதாகமக் கல்லூரி அனுபவமும் அவருக்குக் கிடையாது. முறை தவறிப் பிறந்தவர் என்னும் பெயருடன் அவர் வளர்ந்து வந்து, அதன் பிறகு அவர்கள் போதிக்கப்பட்டவைகளுக்கு மாறான ஒரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
அவர் போதகர்களையும் ஸ்தாபனங்களையும் குற்றப்படுத்தினார். தீர்க்கதரிசி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க செல்பவர் எவரும் ஜெப ஆலயத்திலிருந்து புறம்பே தள்ளப்படுவார்கள் என்னும் அறிக்கையை ஸ்தாபனங்கள் விடுத்தனர். அது மரணத்துக்கேதுவான பாவமாக கருதப்பட்டது. அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டியவர்களாயிருந்தனர். ஆராதனை செய்ய ஒரு வழி ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் கீழ் மாத்திரமே. அவர்கள் இந்த பலியினிடத்தில் வந்த பிறகும், புறம்பே தள்ளப்படுவது எவ்வளவு பயங்கரமான செயல்!
30 ஆனால் அவர் இதையெல்லாம் அசட்டை செய்தார். அவர் வார்த்தையில் பரிபூரணமாக நிலைத்திருந்தார். ஆயினும் அவர்கள் அறிந்திருந்த முறையில் அல்ல.
இயேசுவின் காலத்தில் நீங்கள் யார் பக்கத்தில் இருந்திருப்பீர்கள்? பாருங்கள், இப்பொழுது… இப்பொழுது நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை, அக்காலத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை பிரதிபலிக்கிறது. ஏனெனில் இப்பொழுது நீங்கள் அதே ஆவியைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது யார் பக்கத்தில் இருக்கிறீர்களோ, அதே பக்கத்தில் அப்பொழுதும் இருந்திருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது உங்களுக்குள் இருக்கும் அதே ஆவிதான் அன்று ஜனங்களுக்குள் இருந்தது.
பாருங்கள், பிசாசு தன் ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு மனிதனிலிருந்து வேறொரு மனிதனுக்குள் செல்கிறது. தேவனும் தமது ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு மனிதனிலிருந்து வேறொரு மனிதனுக்குள் செல்கிறது. எனவே எலியாவின் மேலிருந்த அதே ஆவி எலிசாவின் மேல் வந்தது. அது யோவான் ஸ்நானனின் மேல் வந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மேலிருந்த பரிசுத்த ஆவி சீஷர்களின் மேல் வந்து, இப்படி வழிவழியாக, இப்பொழுதும் ஜனங்களின் மேல் தங்கியுள்ளது.
பாருங்கள், தேவன் தமது ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. எனவே நாம் தெரிந்து கொள்ளும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.
31 பவுல் தன் சிறைவாசத்தைக் குறித்து வருத்தமடைந்தவனாய், "நான் காவலில் இருப்பதைக் குறித்து வருந்துகிறேன்" என்று சொன்னதாக எனக்குப் படவில்லை. ஆனால் அவன் தன்னை கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாக… பவுல் இந்த நிரூபத்தை இறகினால் எழுதினபோது, பரிசுத்த ஆவியானவரே அவன் அப்படி எழுதும்படி செய்தார் என்று நினைக்கிறேன். அதன் விளைவாக இன்றிரவு வரைக்கும் அந்த பொருளை நாம் தெரிந்து கொண்டு, பவுல் ஏன் அப்படி எழுதினான் என்பதைக் காண்பிக்க முடிகிறது. ஏனெனில் அது வேத பூர்வமானது. வேத பூர்வமான எதுவும் நித்தியமானது. அந்த பழைய சிறையின் இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு அவன் இயேசுவினால் கட்டப்பட்டவன் என்று தன் சகோதரனுக்கு எழுதினதன் மூலம், அவனை சுற்றிலுமிருந்த சூழ்நிலையை அவனால் வெளிப்படுத்த முடிந்தது.
அவன் சிறையிலிருந்தான். அவனால் அவன் அதைக் குறித்து இந்த கிறிஸ்துவின் ஊழியக்காரனிடம் (தன் உடன் ஊழியக்காரனிடம்) கூறவில்லை. அவன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கட்டப்பட்டவன் என்பதையே குறிப்பிடுகிறான். ஏனெனில் கிறிஸ்துவே வார்த்தை.
32 பவுல் தன் காலத்தில் சிறந்த அறிவாளியாக இருந்தான். அவனுக்கு பெரியவனாக வேண்டும் என்னும் ஆவல் குடிகொண்டிருந்தது. அவன் சிறந்த மேதைகளிடம் கல்வி பயின்றான்.
கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு சிறந்த ஆசான் இருந்தான். அவன் அக்காலத்தில் மிகச் சிறப்பாக விளங்கிய பள்ளிக்கு சென்றான் என்று நான் கூற முடியும். உதாரணமாக இன்று நாம் பெற்றுள்ள வீடன், பாப் ஜோன்ஸ் போன்ற சிறந்த பள்ளிகள் போல் அவன் வார்த்தையின் ஊழியக்காரனாவதற்கு பயின்றான். அவன் நன்கு கல்வி கற்றவன், சமார்த்தியமுள்ளவன், மிகவும் புத்திசாலியான ஒரு இளைஞன். அவன் பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் அவனுக்குள் இருந்தது. என்றாவது ஒரு நாள் அவன் பிரதான ஆசாரியனாக வேண்டுமென்று விரும்பினான்.
33 அவனுக்கு பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவன் பயிற்சி பெற்றான். அவன் தன் வாழ்நாள் முழுவதையும் அதற்கென்று கழித்தான் - ஒருக்கால் 8 அல்லது 10 வயது தொடங்கி 30 அல்லது 35 வயது வரைக்கும் பயின்று, கல்லூரி படிப்பை முடித்து பட்டங்களை பெற்றிருப்பான். அவன் அக்காலத்து குருமார்களின் சார்பில் இருந்தான். அவன் எருசலேமிருந்த பிரதான ஆசாரியனிடமிருந்து தனிப்பட்ட கட்டளை பெற்றான். அது எழுதப்பட்டு, நம்பத்தகுந்த இந்த சவுலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் தமஸ்குவுக்குச் சென்று அவனுடைய கருத்துக்கு மாறான விதத்தில் தேவனை ஆராதிப்பவர்களைக் கட்டி, சிறையிலடைத்து, அவனுக்கு விருப்பமானால் அவர்களைக் கொல்லவும் அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
அவன்… அவனுக்கு பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் இருந்தது. அதற்காக அவன் பெற்ற பயிற்சி அனைத்தும் - தேவன் எல்லாவற்றையும் அவனை விட்டு எடுத்துப் போட்டார். அவனுடைய நோக்கம், அதை நிறைவேற்ற அவன் தந்தை அவனுக்கு செலவு செய்த தொகை, அவன் பெற்றோர் அவன் பெரியவனாக வேண்டுமென்று கொண்டிருந்த நோக்கம். இவையெல்லாம் அவனை விட்டு நீக்கப்பட்டது. ஏனெனில் தேவன் அவனுக்காக வேறொன்றை வைத்திருந்தார். எனவே அவன் வாழ்க்கையில் கொண்டிருந்த குறிக்கோளுக்கு கட்டப்பட்டவனாக இருப்பதை தவிர்த்து, வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக மாறினான்.
34 தமஸ்குவுக்கும் போகும் வழி பவுலை மாற்றினது.
பகல் வேளை சுமார் 11 மணிக்கு அவன் போய்க் கொண்டிருந்தபோது, அவன் கீழே வீழ்த்தப்பட்டான். அப்பொழுது, "சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?'' என்று தன்னுடன் சொல்லுகிற ஒரு சத்தத்தை கேட்டான். அவன் அண்ணாந்து பார்த்து, அவன் யூதனாயிருந்தபடியால், அந்த அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின கர்த்தர் என்பதை அறிந்து கொண்டான்.
இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த யூதன் வேறொருவரையும் 'ஆண்டவரே' ஏலோகிம் என்று அழைத்திருக்க மாட்டான். அவன் பயிற்சி பெற்ற அறிவாளியானதால் அவர் யாரென்று திருப்தி கொள்ளாமல் அப்படி அழைத்திருக்கவே மாட்டான். அவன் அண்ணாந்து பார்த்தபோது, தன் ஜனங்களை வனாந்திரத்தில் வழி நடத்தின இந்த ஒளியை அக்கினி ஸ்தம்பத்தை - அவன் கண்டான். அவன் உடனே 'ஆண்டவரே' ஏலோகிம் 'ஆண்டவரே' ஏலோகிம் "ஆண்டவரே, நீர் யார்?" என்றான்.
35 அவர், "…இயேசு நானே…" என்று கூறினபோது, வேத சாஸ்திரம் படித்திருந்த இவனுக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும்! அவன் யாருக்கு விரோதமாயிருந்தானோ அவர். என்ன ஒரு திருப்பம்!
ஓ, உயரிய குறிக்கோள்களைக் கொண்டிருந்த இந்த மனிதனுக்கு, அவன் யாரைத் துன்பப்படுத்துகிறான் என்று கேட்டபோது, எவ்வளவு பயங்கரமான அதிர்ச்சியாய் இருந்திருக்கும்! அவனுடைய ஆசைகள் அவன் செய்ய வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்த முக்கியமான காரியத்திலிருந்து அவனைத் தூர விலக்கியிருந்தன. அவர், "…இயேசு நானே…" என்று கூறினதைக் கேட்டபோது, இந்த அப்போஸ்தலனுக்கு அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருந்திருக்கும்! அவன் துன்பப்படுத்தின அவர்! "நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?"
இங்கு ஒரு முக்கியமான காரியத்தை நாம் உணரவேண்டும்… அதாவது, சபையை பரியாசம் செய்கிறவர்கள் உண்மையில் சபையைப் பரியாசம் செய்யவில்லை, அவர்கள் இயேசுவைப் பரியாசம் செய்கின்றனர். "…என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" நுண்ணறிவு படைத்த பவுல்… அவன் இந்த கூட்டத்தினரை துன்புறுத்தினதின் மூலம் அவன் சேவிப்பதாக உரிமை கோரின அந்த தேவனை துன்புறுத்தினான் என்பதை அவனால் எப்படி நம்ப முடிந்திருக்கும்?
இதை அதிகமாக விளக்க அவசியமில்லை என்று எண்ணுகிறேன். நான் கூறுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள நாம் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறோம். அதுவே இன்றைக்கும் நடக்கிறது.
36 பவுல் அறியாமையின் காரணமாக - இருப்பினும் அவன் மிகவும் புத்திசாலி, சமார்த்தியமுள்ளவன். அவன் துன்பப்படுத்தின படிப்பில்லாத கலிலேயர்களைக் காட்டிலும் மிகவும் சமார்த்தியமுள்ளவன். இவர்கள் தங்கள் தாழ்மையில் பெருமளவில் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பவுலோ அதிகம் படித்தும் நுண்ணறிவு படைத்திருந்தும் கூட, அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தமஸ்குவுக்குப் போகும் வழியில் அது அவனுக்கு எத்தகைய திருப்பமாயிருந்திருக்கும்… ஒளி அவனைத் தாக்கியதால் அவன் பார்வையிழந்தான். எனவே அவனால் தன் பணியை நிறைவேற்ற முடியவில்லை. அவன் நேர்த்தெரு என்னப்பட்ட தெருவுக்கு அழைத்து செல்லப்பட்டான். அது ஒரு தீர்க்கதரிசியின் வீடாயிருந்தது. அப்பொழுது அனனியா என்னும் பெயருடைய ஒரு தீர்க்கதரிசி அவனை அங்கு சந்தித்தான். பவுல் வருவதை அவன் ஏற்கெனவே தரிசனத்தில் கண்டு, அவன் இருந்த இடத்தை அடைந்து, "சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியில் உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் உன் மேல் கைகளை வைக்கும்படி என்னை அனுப்பினார்" என்றான்.
37 அது எங்கு வந்து விட்டதென்று பார்த்தீர்களா?
அது பவுலுக்கு எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும்! பாருங்கள், அவன் செய்வதற்காக பெற்ற பயிற்சி அனைத்தும் வீணாய் போனது. அவனுடைய கல்வி அனைத்தும் ஒன்றுமில்லாமல் போனது. அவனுக்கு ஒரு அனுபவம் உண்டானதென்று அவன் அறிந்து கொண்டான். இது நமக்கு மற்றுமொரு பாடம். அதாவது அனுபவம் மாத்திரம் போதாது, அது தேவனுடைய வார்த்தையின்படி உள்ள அனுபவமாக இருத்தல் அவசியம்.
எனவே, அவன் ஒருமுறை அதை கண்டு, அது அவனுக்கு முன்பு இருந்த மற்றவர்கள் பெற்ற மகத்தான ஒன்று என்பதை அறிந்து, அப்பொழுது இருந்த வேதாகமத்தை (பழைய ஏற்பாட்டை) கையிலெடுத்துக் கொண்டு, அரபிதேசத்து பாலைவனத்தில் மூன்று வருடம் ஆறு மாதங்கள் செலவழித்து, அவனுடைய அனுபவம் வேத பூர்வமானதா என்று அதனுடன் ஒப்பிட்டு பார்த்தான்.
38 அவன், "அது ஒரு சிறு விபத்து. நான் அறிவாளிகளையே பின்பற்றுவேன்" என்று கூறியிருந்தால்! அவன் கட்டப்பட்டவனாக ஆக வேண்டியிருந்தது. எனவே அவன் ஒப்பிட்டு பார்த்த பிறகு… முன்னடையாளங்களை உபயோகித்து எபிரெயர் நிரூபத்தை எழுதினான்.
பாருங்கள், மூன்றரை வருட காலமாக அவன் அங்கு வார்த்தையில் கிடந்திருந்து, அவனை அழைத்த அதே தேவன் அவனுடைய அறிவு அனைத்தும் மாற்றுவதைக் கண்டான் - அவனுடைய சிந்தனை அனைத்தும், அவன் எதுவாக இருக்க பயிற்சி பெற்றானோ அது அனைத்தையும், அவனுடைய நோக்கம் அனைத்தும் அவனை விட்டு எடுத்துப் போட்டார். அவன் கட்டப்பட்டவனானான்.
தேவனுடைய அன்பு மிக அதிகமாக இருந்து, வெளிப்பாட்டை பெற்றபோது, அவனால் அதிலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை. தேவனை சந்திக்கும் ஒவ்வொரு உண்மையான விசுவாசியின் அனுபவமும் அதுவே. நீங்கள் பெரிய ஒன்றுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது… நீங்கள் மற்றெல்லாவற்றையும் விட்டு அதற்கு கட்டப்பட்டவர்களாகிவிடுகிறீர்கள். பாருங்கள், மற்றெல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விலகி, இதற்கு கட்டப்பட்டவர்களாகிவிடுகிறீர்கள். பாருங்கள், மற்றெல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விலகி, இதற்கு கட்டப்பட்டவர்களாகிவிடுகிறீர்கள்.
39 ஒருமுறை இயேசு, "பரலோக ராஜ்யம் ஒரு விலையுயர்ந்த முத்தை வாங்கும் வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது" என்றார். அவன் அந்த விலையுயர்ந்த முத்தைக் கண்டு தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த முத்தைக் கொள்கிறான். அதுதான் இங்கு நடக்கிறது. உங்களுக்கு அறிவில் விளைந்த கருத்து உள்ளது. உங்களுக்கு வேத சாஸ்திர அனுபவம் உள்ளது. ஆனால் நீங்கள் உண்மையானதை கண்டு கொள்ளும் நேரம் வரும்போது, நீங்கள் எல்லாவற்றையும் அறுத்தெரிந்து, அதற்குள் நுழைந்து கொள்கிறீர்கள்.
40 அது என்னவென்று பவுல் அறிந்திருந்தான். அவன் ஏதோ ஒன்றுக்குள் சேணம் பூட்டி கொண்டு வரப்பட்டதை உணர்ந்தான்… நாம் குதிரைக்கு சேணம் பூட்டி கொண்டு வருவது போல் ஏதோ ஒன்றை இழுக்க, பவுல் தான் பெற்ற அனுபவத்தை மூன்றரை வருட காலமாக வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, தேவன் அவனைப் பரிசுத்த ஆவியின் மூலம் தெரிந்து கொண்டார் (அவனுக்கு சேணம் பூட்டினார்) என்பதை உணர்ந்தான். அவனுடைய அனுபவத்தின் மூலம் புறஜாதிகளின் முன்னால் சுவிசேஷத்தை இழுத்துக் கொண்டு வர வேண்டுமென்று. பரிசுத்த ஆவியானவரே அவனுக்கு சேணம் பூட்டினார்.
41 இன்றைக்கு கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்னும் முறையில் நாமும் கூட சேணம் பூட்டப்பட்டு அடக்கி உள்ளே கொண்டு வரப்படுகிறோம். நாம் வார்த்தைக்கு சேணம் பூட்டப்பட்டுள்ளோம். யார் என்ன கூறினாலும் கவலையில்லை. நீங்கள் அதற்கு சேணம் பூட்டப்பட்டிருக்கிறீர்கள். அதில் ஏதோ ஒன்றுள்ள காரணத்தால், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியினால் அதனுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அது வார்த்தையுடன் உங்களை நுகத்தில் பிணைத்தது. யார் என்ன கூறினாலும் வார்த்தை உங்களுடன் வருகிறது. அதற்குள் சேணம் பூட்டப்பட்டு கொண்டு வரப்பட்டு அதனுடன் நுகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு வார்த்தைக்கு அடக்கிக் கொண்டு வரப்பட்டான்.
அவன் அரபி தேசத்து பாலைவனத்தில் மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய பழைய காரியங்கள், அனுபவங்கள், குறிக்கோள்கள் அவனிலிருந்து களையப்பட்டன. அவ்வாறே நாமும் களையப்பட வேண்டுமென்று இன்று நாம் காண்கிறோம். ஜனங்கள் களையப்பட விரும்புவதில்லை. மெதோடிஸ்டு சகோதரன் தன் மெதோடிஸ்டு போதகத்தை சிறிது பற்றிக் கொள்ள விரும்புகிறான். அது போல பாப்டிஸ்டு சகோதரனும் தன் பாப்டிஸ்டு போதகத்தை சிறிது பற்றிக் கொள்ள விரும்புகிறான். பாருங்கள், ஆனால் நீங்கள் முற்றிலுமாக அவைகளிலிருந்து களையப்பட்டு, புதிதாக மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவி உங்களை வழி நடத்துவது போல அங்கிருந்து தொடங்க வேண்டும். "என் தகப்பனார் போதகருடன் சபையில் கைகுலுக்கின போது இதை பெற்றுக் கொண்டார். அவர் விசுவாசமுள்ள சபை உறுப்பினர்" என்று நீங்கள் சொல்ல முடியாது. அது அவருடைய இனத்துக்கு சரியாயிருந்திருக்கும். ஆனால் நாமோ வேறு இனத்தை சேர்ந்தவர்கள்.
இக்காலத்தில் நாம் வேதாகம நாட்களுக்கு திரும்பி வர வேண்டியவர்களாயிருக்கிறோம்.
42 போதகரும் சேணம் பூட்டப்பட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் வேறொரு யுகத்தை அடைந்தபோது, பழைய சேணத்தை களைந்து புது சேணத்தை பூட்டிக் கொள்ள அவர்கள் தவறினர். அதைதான் இன்று நாம் காண்கிறோம். நாம் சபை காலங்களைப் பற்றி பேசின போது நிரூபித்தபடி, நாம் ஸ்தாபனங்களின் காலத்தை கடந்து வந்தோம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவரே இறங்கி வந்து, தம்மை உறுதிப்படுத்தி, தம்மை தெரியப்பண்ணி, அவர் வாக்களித்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.
ஓ, என்னே! என்ன ஒரு மகத்தான நேரம்! அவன் அறிந்திருந்தான்… வேறொரு காரியம்… அவன் சேணம் பூட்டப்பட்ட இதற்கு கொண்டு வரப்பட்ட பிறகு, அவனால் வேறெங்கும் செல்ல முடியாது என்பதை அறிந்திருந்தான்… அவன் போக விரும்பினாலும் கூட அவன் பெரியவனாக வேண்டுமெனும் குறிக்கோள் அவனுக்கு அழைப்பு கொடுத்த சகோதரரிடத்தில் போகத் தூண்டினாலும், அவன் வேறொன்றைச் செய்ய ஆவியில் நெருக்கப்பட்டான். அவன் தனக்குச் சொந்தமானவன் அல்ல.
43 யாராவது ஒருவர் அவனிடம், "சகோ. சவுலே, சகோ. பவுலே, எங்கள் சபைக்கு வாருங்கள். எங்களுடையது மிகப் பெரிய சபை. எங்கள் சபையோர் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். உங்களுக்கு நிறைய காணிக்கை…" என்று கூறினாலும் அவன் ஆவியில் நெருங்கி ஏவப்பட்டு, "இங்கு ஒரு சகோதரன் இருக்கிறார். நான் அவரிடம் சென்று அவரை இரட்சிப்புக்குள் கொண்டு வர வேண்டும். அவரை கர்த்தரிடத்தில் கொண்டு வரவேண்டும்" என்று நினைத்திருப்பான். வேறெங்கோ செல்லும்படி ஆவியானவர் அவனை நெருக்கி ஏவினார். அவன் கட்டப்பட்டவன் என்பது சரியே.
ஓ, தேவனே, நாங்களும் அவ்வாறே கட்டப்பட்டவர்களாயிருக்கும்படி செய்யும் - எங்கள் சுயநல குறிக்கோள், எங்கள் சொந்த தீர்மானம், எங்கள் சொந்த கருத்துக்கள் இவைகளிலிருந்து விடுபட்டு இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாயிருக்க நான் நினைக்கிறேன், நான் இயேசு கிறிஸ்துவுக்காக கட்டப்பட்டவன் என்பது மிகப் பெரிய வாக்குமூலம்.
ஞாபகம் கொள்ளுங்கள், அவரே வார்த்தை. யார் என்ன நினைத்தாலும் அவர் வார்த்தை என்பது உண்மையே. பாருங்கள், நீங்கள் வார்த்தைக்கு கட்டப்பட்டவர்களாயிருந்தால் எந்த ஸ்தாபனமும் உங்களை அதிலிருந்து விலகச் செய்ய முடியாது. அது வார்த்தை. அதற்கு நீங்கள் கட்டப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அவ்வளவுதான். அது எப்படி நடந்து கொள்கிறதோ, அப்படியே நீங்களும் நடந்து கொள்ள வேண்டும்.
44 அவன் போக விரும்பின சில இடங்களுக்கு அவனால் செல்ல முடியவில்லை. ஏன்? பரிசுத்த ஆவி தடை செய்தார். அநேக சமயங்களில் பவுல் ஒரு இடத்துக்கு போக நினைத்து, "அங்கு பெரிய கூட்டங்கள் நடக்க ஏதுவுண்டு" என்று எண்ணின போது ஆவியானவர் அவனைப் போகவிடவில்லை என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.
பவுல் கட்டப்பட்டவன் என்பதை அது தெளிவாக எடுத்துக் காட்டி நிரூபிக்கிறதல்லவா? இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டவன் - ஆவியினால் அவருடைய வார்த்தைக்கு கொண்டு வரப்பட்டான். ஓ, அது எனக்குப் பிரியம். அவன் கட்டப்பட்டிருந்தான். அவன் கர்த்தருடைய சித்தத்தை செய்ய, அதை மாத்திரம் செய்ய, அன்பு என்னும் சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தான். அவன் கட்டப்பட்டவன். அவன் அன்பின் சங்கிலியினால் கட்டப்பட்டவன். அவன் கிறிஸ்துவினுடன் நுகத்திலே பிணைக்கப்பட்டவன். அவன் வேறு யாரோடும் நுகத்திலே பிணைக்கப்பட முடியாது அவரோடு மாத்திரமே அவன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தான். அவர் அவனை எங்கு வழி நடத்தினாரோ, அங்கு செல்ல வேண்டியவனாயிருந்தான். அவனுக்கு பாதையின் இப்பக்கமும் அப்பக்கமும் பசுமையாய் காணப்பட்ட போதிலும் அவனால் அங்கு செல்ல முடியவில்லை. தலைவரும் நுகமும் சென்ற பாதையிலேயே அவன் செல்ல வேண்டியிருந்தது.
45 ஓ, பிரன்ஹாம் கூடாரத்தினராகிய நாம் இன்றிரவு நம்முடைய சுயநலத்தையும், சொந்த குறிக்கோள்களையும் கைவிட்டு, நம்மை முழுவதும் அர்ப்பணித்து அவருடன் நுகத்தில் பிணைக்கப்பட்டு, கட்டப்பட்டவர்களாக ஆக முடிந்தால்! உலகத்திலுள்ள மற்றவர் என்ன நினைத்தாலும், என்ன செய்தாலும் நாம் அன்பின் சங்கிலினால் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் - நாம் கட்டப்பட்டவர்கள்! என் கால்கள் கிறிஸ்துவினுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், நவீன அரை நிர்வாணிகளை தெருவில் காணும்போது, அது தலையை திருப்பிக் கொள்ளும். என் இருதயம் அன்பினால் அவருடன் பிணைக்கப்பட்டுள்ளதால். இவ்வுலகத்தின் மேல் எனக்கு இனி ஒருபோதும் ஆசை இருக்க முடியாது. என் சித்தம் அவருடன் இணைக்கப்பட்டுள்ளதால், என்ன குறிக்கோள்கள் என்னவென்று எனக்கே தெரியாது. கர்த்தாவே, என்னை நீர் எங்கு நடத்தினாலும் உம்மை பின் தொடர்ந்து செல்வேன். நான் கட்டப்பட்டவனாக இருப்பேன்.
46 பவுல் சரியானபடி கட்டப்பட்டவனாக இருந்தான். அவன் தவறான எதையும் கூறவில்லை. வார்த்தையினால் நடக்க அவன் பரிசுத்த ஆவியானவரால் பயிற்சி பெற்றான். அவனுக்கு ஒரு வழியில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவனோ அவனுக்கு வேறு வழியில் பயிற்சி அளித்தார். அவன் குறிக்கோள் என்னவாயிருந்த போதிலும், அவன் கர்த்தருக்கு காத்திருக்க பரிசுத்த ஆவியால் பயிற்சி அளிக்கப்பட்டான்.
பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கப் போகிறேன் (காண்பிக்கலாம் என்று நம்புகிறேன்). ஒரு நாள் பவுலும் சீலாவும் ஒரு குறிப்பிட்ட நகரிலிருந்த தெருவின் வழியாய் வந்து கொண்டிருந்தனர். பவுல் அங்கு ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தான். அப்பொழுது பிசாசு பிடித்த ஒரு பெண் அவர்களைப் பின் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே வந்தாள். அந்த பெண்ணிலிருந்த பொல்லாத ஆவியைக் கடிந்து கொண்டு அவளை விட்டு வெளியே வரும்படி கட்டளையிட அப்போஸ்தலன் என்னும் முறையில் அவனுக்கு அதிகாரம் இருந்ததென்று பவுல் அறிந்திருந்தான். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? அவன் ஒவ்வொரு நாளும் காத்திருந்து, முடிவில் திடீரன்று பரிசுத்த ஆவியானவர் அவனிடம் பேசினார். அவன், "இது தான்அந்த நேரம்" என்று சொல்லி,
47 "அசுத்த ஆவியே, அவளை விட்டு வெளியே வா" என்று கட்டளையிட்டான்.
பாருங்கள், அவன் கர்த்தருக்குக் காத்திருக்க அறிந்திருந்தான். அங்குதான் இன்று அநேகர் வார்த்தைக்கு நிந்தையை வருவிக்கின்றனர். அவர்கள் தங்கள் சுய ஆசைகளுடன் செல்கின்றனர். அதன் விளைவாக எவ்வளவு எழுப்புதல்கள் தோல்வியடைந்துள்ளன? கர்த்தர் என்ன கூறுகிறார் என்று அறிந்து கொள்ள சுவிசேஷகன் காத்திராத காரணத்தால்,
சிலர், "இங்கு வாருங்கள்" என்று அழைத்தால் அவர்கள் உடனே அங்கு சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய சங்கம் "போங்கள்" என்று உத்தரவிடுகிறது. பரிசுத்த ஆவி அதற்கு மாறாக கூறியிருப்பார். இருப்பினும் அந்த மனிதனுக்கு மாகாண போதகர், அல்லது பேராயர் அல்லது வேறு பெரிய பதவியை அடைய வேண்டும் என்னும் ஆசை இருப்பதால் அவரை ஏதோ ஒன்று "நீ போக வேண்டும்" என்று இழுக்கிறது. இருப்பினும் அங்கு போகக் கூடாதென்று அவருக்குத் தெரியும். ஏனெனில் பரிசுத்த ஆவி "வேறிடத்துக்கு போ" என்றார். பாருங்கள், அவர் தன் ஸ்தாபனத்துடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஸ்தாபனத்துக்கு கட்டப்பட்டவராயிருக்கிறார். அவர் கிறிஸ்துவுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவார்! அவர் இயேசுவினால் கட்டப்பட்டவராவார். அப்பொழுது யார் என்ன கூறினாலும் அவரை பாதிக்காது. அது சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அவருக்கு இருக்கும். அவர் தேவனுடைய சத்தத்துக்கு மாத்திரமே செவி கொடுத்து, அதை மாத்திரமேயன்றி வேறொன்றையும் பேசமாட்டார்.
48 யாராவது ஒருவர், "ஓ, சகோ. ஜோன்ஸ், சகோ. ராபர்ட்ஸ்…'' என்பார்களானால், அல்லது நமது தேசத்திலுள்ள டாமி ஹிக்ஸ், ஓரல் ராபர்ட்ஸ், அல்லது டாமி ஆஸ்பர்ன் போன்ற பெரிய சுவிசேஷர்களிடம் யாராவது ஒருவர், "டாமி இங்கு வாருங்கள், நீங்கள் தேவனுடைய மகத்தான மனிதர்" அல்லது "ஓரல், என் மாமா அங்கு வியாதியாய் கிடக்கிறார். நீங்கள் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், அவரைச் சுகப்படுத்த உங்களிடம் வல்லமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று கூறுவாரானால்.
ஒருக்கால் பரிசுத்த ஆவி அவரிடம், "இப்பொழுது போக வேண்டாம்" என்று கூறியிருக்கக் கூடும். இருப்பினும் அந்த மனிதனிடம் அவர் கொண்டுள்ள நட்பின் நிமித்தம், அவர் அவருடன் செல்ல கடமைப்பட்டிருக்கிறார். அவர் அப்படி போகாவிட்டால், அந்த மனிதனுக்கு சத்துருவாகிவிடுகிறார். அந்த மனிதன், "அவர் இன்னார் இன்னாரிடம் சென்று அந்த பிள்ளைக்கு அல்லது அந்த பையனை சுகமாக்கினார் என்று எனக்குத் தெரியும். நான் அநேக ஆண்டுகளாக அவர் நண்பராயிருந்தும் கூட, என் வீட்டுக்கு வரமாட்டேன் என்கிறார்" என்பார். ஆனால் அவர் பரிசுத்த ஆவியினால் அங்கு போக வேண்டாம் என்று தடை செய்யப்பட்டால், அவர் போகாமலிருப்பது நல்லது - அவர் தேவனோடும் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால், அவருடைய நண்பரை அவர் நேசிக்கிறார். இருப்பினும் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டால் மாத்திரம் அங்கு செல்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் செல்வதில் ஒரு பிரயோஜனமுமில்லை. அந்த அனுபவம் எனக்கு எத்தனையோ முறை உண்டாயிருக்கிறது.
49 அவன் என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவி கூறும் வரைக்கும் பவுல் காத்திருந்தான். பரிசுத்த ஆவிக்காக காத்திருப்பது மிகவும் நல்லது.
ஒரு இரவு அவன் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு நடந்து சென்றபோது கால்கள் விழங்காத (ஊனமான) ஒரு மனிதனைக் கண்டான். திடீரென்று ஆவியானவர் அவனிடம் பேசினார். அவன், "நான் காண்கிறேன்" (Perceive) என்றான். எப்படி? ஒரு தீவில் அவர்களுக்கு கப்பல் சேதம் ஏற்படும் என்று அவன் கண்ட அதே விதமாக, ''நீ சுகம் பெற உனக்கு விசுவாசம் உண்டென்று காண்கிறேன். எழுந்து காலுன்றி நில். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்கினார்".
பார்த்தீர்களா - அவன் பிணைக்கப்பட்டிருந்தான். அவன் ஒரு வாரம் எழுப்புதல் கூட்டம் நடத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. பரிசுத்த ஆவி உரைக்கும் வரைக்கும் அவன் காத்திருந்தான். பாருங்கள், அவன் அதனுடன் பிணைக்கப்பட்டிருந்தான்.
50 நீங்கள், "சகோ பிரான்ஹாமே, நீங்கள் ஞாயிற்றுக் கிழமை கூறினதற்கு இப்பொழுது முரணாகக் கூறுகிறீர்களே" (இவ்வளவு காலமாக காத்திருந்ததைக் குறித்து) எனலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே என்னிடம் வழியில் பேசி "உன்னை வியாதியஸ்தர்களிடத்திற்கும் ஊனமுற்றவர்களிடத்திற்கும் அனுப்புகிறேன்" என்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது பரிசுத்த ஆவிக்கு கீழ்படிதல். நிச்சயமாக, அவர் நான் போகக் கட்டளையிடும் வரைக்கும் நான் போகவில்லை. நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்காக காத்திருந்தேன். கர்த்தர் உரைக்கிறதாவது என்பது எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் செல்லவில்லை. பாருங்கள், அதுதான் வித்தியாசத்தை உண்டாக்குகிறது.
ஆம், அவன் கர்த்தருடைய வார்த்தைக்காகக் காத்திருந்தான். தேவனுடைய கட்டளையைச் செய்யவே ஆவியானவர் அவனை வற்புறுத்தினார். அவன் அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் சிறைக் கைதியானான். நண்பர்களே, நாம் மட்டும் சிறைக் கைதியாகிவிட்டால்…
51 இங்கு உஷ்ணமாயுள்ளதென்று அறிவேன். நான் இன்னும் வேதத்திலுள்ள இரண்டு பேர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு 6 அல்லது 8 பேர்களை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஓரிரண்டு பேர்களை மாத்திரமே குறிப்பிடப் போகின்றேன்.
நாம் மோசேயை எடுத்துக் கொள்வோம். அவன் விடுவிக்கப் பிறந்தவன். அவன் விடுவிக்கப் பிறந்தவன் என்பதை அறிந்திருந்தான். மோசேயைக் குறித்து விவரிப்பதற்கு முன்பு இதைக் கூற விரும்புகிறேன். தேவன் எப்பொழுதுமே தனக்கு உண்மையாய் சேவிக்க மனதுடைய ஒருவனை தெரிந்து கொண்டு அவனை அவருக்கு கட்டப்பட்டவனாக்குகிறார். ஒரு மனிதன் தனக்குள்ள சுய ஆசை அனைத்தும், அவனுக்குள்ள அனைத்தும் - அவனுடைய ஜீவன், ஆத்துமா, சரீரம், சித்தம், சுய ஆசை அனைத்தும் - ஒப்புவித்து, வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு முற்றிலும் கட்டப்பட்டவனாகி, தேவனைச் சேவிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் கருத்துக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும். ஒருக்கால் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனம் உங்களை உயர்த்தி, நீங்கள் பிரகாசிப்பதற்கென ஒரு பெரிய பதவியைக் கொடுக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் அதனால் உங்களுக்கு என்ன நேரிடுகிறது? சில நாட்கள் கழித்து நீங்கள் தோல்வியடைந்த நிலையில் உள்ளதைக் காண்பீர்கள். தேவன் தமக்கு கட்டப்பட்ட சித்தமுள்ள ஒருவனைப் பெறும் வரைக்கும்…
52 கட்டப்பட்ட சித்தமுள்ளவர்களுக்காக தேவன் நோக்கிக் கொண்டிருக்கிறார்.அவர் எப்பொழுதுமே அதை செய்து வருகிறார். ஒரு மனிதன் எல்லாவற்றிற்கும் எதிராக கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக ஆகவேண்டும். எனவே கிறிஸ்துவைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது. அது உங்கள் தகப்பன், தாய் சகோதரன், சகோதரி, கணவன், மனைவி யாராயிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவுடன் மாத்திரமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே தேவன் உங்களை உபயோகிக்க முடியும். அதுவரைக்கும் அவர் உங்களை உபயோகிக்க முடியாது.
சில சமயங்களில் நான் வெளியே செல்லும் போது, ஜனங்களிடம் கடினமாக பேசுகிறேன். பாருங்கள், அவர்கள் எல்லாவற்றையும் அறுத்தெறிய வேண்டும் என்றே நான் முனைகிறேன். நீங்கள் எங்காவது ஓரிடத்தில் தொடங்க வேண்டும். உதாரணமாக சில சமயங்களில்… பெண்கள் தலை மயிரைக் கத்தரித்து, அவலட்சணமான உடைகளை உடுத்து, அதே சமயத்தில் கிறிஸ்தவர்களென்று கூறிக் கொள்வதற்கு விரோதமாக கூக்குரலிட வேண்டியதாயுள்ளது.
நீங்கள், "அது சிறிய காரியம்" எனலாம். நல்லது, நீங்கள் எங்காவது ஓரிடத்தில் தொடங்க வேண்டும். எனவே நீங்கள் சிறு காரியங்களில் தொடங்கி, உலகப் பிரகாரமான பார்வைகளை அறுத்தெறிந்து, கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவர்களாகி, அதன் பிறகு ஒவ்வொன்றாக அறுத்தெரிந்து முடிவில் கடைசியான காரியத்தை அறுத்தெறியுங்கள். அப்பொழுது நீங்கள் முற்றிலும் கட்டப்பட்டவர்களாகிவிடுவீர்கள். அவருடைய பிடியில் நீங்கள் வந்துவிடுவீர்கள். அவர் உங்களைத் தமது பிடியில் கொண்டிருப்பார்.
53 மோசே இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கப் பிறந்தவன் என்று அறிந்திருந்தான். மோசேக்கு இருந்த ஆசையை கவனித்தீர்களா? அவனுடைய தாய் தான் அவனுக்கு பால் கொடுக்கும் ஸ்திரீயாக இருந்தாள் என்று அவள் கூறியிருப்பாள்.
மோசே பிறந்தபோது அவனுடைய தாய், "மோசே, உனக்குத் தெரியுமா, உன் தகப்பன் அம்ராமும் நானும் எப்பொழுதுமே ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தோம். மீட்கிறவன் வருவதற்கான நேரம் வந்துவிட்டதென்று (வார்த்தையைப் பார்த்து) நாங்கள் அறிந்தபோது, 'தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் மீட்கிறவனைக் காண விரும்புகிறோம்' என்று ஜெபம் செய்தோம். ஒரு நாள் இரவு கர்த்தர் எங்களுக்கு தரிசனத்தில், நீ பிறப்பாய் என்றும், நீதான் மீட்கிறவன் என்றும் கூறினார். நாங்கள் ராஜாவின் கட்டளைகளுக்கு பயப்படவில்லை, ராஜா கூறினதற்கு நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீ மீட்கிறவனாக பிறந்திருக்கிறாய் என்று நாங்கள் அறிந்து கொண்டோம். மோசே, உன்னை நாங்கள் சரியான விதத்தில் வளர்க்க முடியாதென்று அறிந்தோம்" (அவர்கள் 400 ஆண்டுகளாக எகிப்தில் இருந்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்) "உனக்கு நாங்கள் சரியான கல்வி கொடுக்க வேண்டும். சரியான பயிற்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினோம். எனவே நான் உன்னை ஒரு சிறு நாணற் பெட்டியில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டு, நாணற் புல்லின் வழியாக மைல் கணக்காக தள்ளிக் கொண்டு வந்து பார்வோனின் அரண்மனை பக்கம் திருப்பிவிட்டேன். அங்கே பார்வோனின் குமாரத்தி… அங்கு தான் அவள் குளிக்கும் இடம் இருந்தது. உனக்கு பால்கொடுக்க ஒரு ஸ்திரீ தேவைப்படும் என்று நான் அறிந்தேன்" (அந்த காலத்தில் குழந்தைகளுக்கு பாலூட்ட பால் புட்டிகள் கிடையாது. எனவே அவர்கள் பால் கொடுக்கும் ஒருத்தியை அமர்த்த வேண்டியதாயிருந்தது). "நான் மிரியாமை அங்கு அனுப்பினேன். அவள் அங்கு நின்று கொண்டு, 'பால் கொடுப்பவள் எங்கிருக்கிறாள் என்று தெரியும்' என்று சொல்லி, என்னை அழைத்து சென்றாள். மோசே (அவள் பேசின போது கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன), தேனே, உனக்கு இப்பொழுது 16 வயதாகிவிட்டது. நீ பார்வோனின் குமாரனாகப் போகின்றாய். என்றாவது ஒருநாள் நீ ஜனங்களை விடுவித்து இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டும்" என்றாள்.
54 மோசேயின் ஆசை அதிகமாகத் தொடங்கினது. "அம்மா, நான் படிப்பேன்! என்னால் முடிந்த எல்லாவற்றையும் படிப்பேன். நான் என்ன செய்வேன் தெரியுமா? நான் இராணுவ வீரன் ஆவதற்கு கஷ்டப்பட்டு படிப்பேன். அப்பொழுது இந்த ஜனங்களை எப்படி மீட்டு இங்கிருந்து கொண்டு போவதென்று எனக்குத் தெரியும். நான் பெரிய தளபதியாக, பேராயராக இருப்பேன். அதை எப்படி செய்வதென்று எனக்குத் தெரியும். நான் டாக்டர் பட்டங்கள் பெற்று இங்கிருந்து அவர்களை வெளியே கொண்டு செல்வேன்" என்றான்.
"கத்தோலிக்க குருவானவர் சினிக்வியைப் போல், அவருடைய புத்தகத்தை நீங்கள் படித்ததுண்டா? சரி அவர் பிராடெஸ்டெண்டுகளை அந்த மார்க்கத்திலிருந்து விடுவிக்கப் போய் அவரே பிராடெஸ்டெண்டாகிவிட்டார். எனவே இந்த சிறந்த குருவானவர் சினிக்வி, அநேக ஆண்டுகளுக்கு முன்பு, அவர் எழுதின புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும்" (ரோம சபையில் ஐம்பது ஆண்டுகள் - சார்லஸ் சினிக்வி எழுதியது - ஆசி). அவர்கள் அவரை பிதா (father) என்று அழைத்தார்கள். அவர் சகோ. சினிக்வி நாம் யாரையும் 'பிதா' என்று அழைப்பதில்லை.
அவர் பிராடெஸ்டெண்டு மார்க்கம் தவறென்று நிரூபிக்க வேதாகமத்தை படித்தார். ஆனால் அவர் தோற்றுப் போனார். அவர் வேதாகமத்தை படிக்கத் தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் அவரை ஆட்கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர்களில் ஒருவரைப் போல ஆகிவிட்டார்.
55 எனவே, இதை கவனியுங்கள்: மேசே எல்லா பயிற்சியும் பெற்றான், ஏனெனில் அவனுக்குத் தெரியும்… அவன் சாமர்த்தியசாலி, கல்வி கற்றவன், நுண்ணறிவு படைத்தவன், எனவே யாருமே… அவன் எகிப்தியருக்கும் கற்றுத் தர முடிந்தது. அவன் அவர்களுடைய மனோதத்துவ நிபுணருக்கு கற்றுத் தர முடிந்தது. இராணுவ பராக்கிரமம் என்னவென்று அவர்களுடைய தளபதிகளுக்கும் அவன் கற்றுத் தர முடிந்தது. அவன் பெரியவனாயிருந்தான், அவனுடைய மேன்மையின் காரணமாக ஜனங்கள் மோசேக்கு பயந்தனர்.
ஓ, அப்படிப்பட்ட அறிவு! என்னே, அவன் ஒரு தலைமைப் பேராயர் அல்லது போப்பாண்டவராக இருந்தான். அவன் மிகப்பெரியவன், பாராக்கிரமுள்ளவன்! அவன் இதை செய்ய பிறந்திருந்தான் என்பதை அறிந்தவனாய், தன் குறிக்கோள் நிறைவேற வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டவனாய் பயிற்சி பெற்றான்.
56 இன்றைக்கு நடப்பது போல். நான் கூற வரவில்லை. வேதாகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள்… நான் அப்படி கூறவில்லை. இங்கு மேற்கு பாகத்தில் 15 கோடி டாலர் செலவில் வேதசாஸ்திரப் பள்ளி ஒன்றைக் கட்டுகின்றனர் - பெந்தெகொஸ்தேகாரர். 15 கோடி டாலர் செலவில் பள்ளி. என்னை பொறுத்த வரையில், அது மிஷனரிமார்களுக்கு செலவிடப்பட வேண்டும்.
எப்படியானாலும் - அவர்கள் வேதாகமப் பள்ளியை விட்டு வெளிவரும் போது என்னவாயிருக்கின்றனர்? ஒரு கூட்டம் - "ரிக்கிகளாக'', நிச்சயமாக. அப்படித்தான் அவர்கள் வெளியே வருகின்றனர். அதே விதமாகத்தான் வேதாகமப் பள்ளியை விட்டு வெளிவரும் மற்றவர்களும் உள்ளனர்.
57 நாம் காண்கிறோம், மோசே தான் பெற்ற பயிற்சி அனைத்திலும், இன்றைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பெரிய பேராயர்களை உருவாக்கின பின்பு, நாம் காண்பது என்ன? நம்முடைய சுய ஆசைகளும் மோசேயின் ஆசைகளைப் போல் ஆகிவிடுகின்றன. தேவன் மோசேயை தம் கரங்களில் கொள்வதற்கு முன்பு, அவனுடைய பயிற்சி அனைத்தும் அவர் களைய வேண்டியதாயிற்று.
அவன் வெளியே போய் மீட்டான் என்பது உண்மையே… அவன் ஒரு எகிப்தியனைக் கொன்றான். அவன் அப்படி செய்த போது, தவறு செய்ததாக உணர்ந்தான். அவன் அப்படி செய்திருக்கக் கூடாது. அதுவல்ல முறை. தேவன் அவனை வனாந்திரத்தின் பின்புறத்துக்கு கொண்டு போக வேண்டியதாயிருந்தது.
நீங்கள் கவனிப்பீர்களானால், தேவன் யாருக்காக ஒரு செய்தியை வைத்திருக்கிறாரோ, அந்த ஆட்களையெல்லாம் அவர் வனாந்திரத்துக்கு கொண்டு செல்கிறார். அவர் பவுலுக்கு பயிற்சி அளிப்பதற்காக அவனை வனாந்தரத்துக்கு கொண்டு சென்று, அவன் கண்ட பெரிய தரிசனங்கள் அனைத்தும் விளக்கினார். "நீ வனாந்திரத்துக்கு போ, இந்த வனாந்தரத்துக்கு போ", அவன் அங்கு தங்கி யிருந்தபோது, என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனுக்கு முழுவதுமாக அறிவித்தார்.
58 மோசேயின் காலத்தில், அவர் அவனை வனாந்தரத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை 40 ஆண்டுகள் தங்கும்படி செய்து, அவனுடைய வேத சாஸ்திரம் அனைத்தும், சுய ஆசைகள் அனைத்தும் களைந்தார். ஓ, அவன் திரும்பி பார்த்து அவனுடைய தோல்விகளைக் காண அது எத்தகைய தருணமாயிருந்தது! இன்றிரவு நாமும் அதையே செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய சுய ஆசைகளை நாம் காணும்போது…
சுகமளிக்கும் கூட்டங்களைக் கவனித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தேவன் வியாதியஸ்தருக்கு சுகமளிக்கத் தொடங்கினாரா என்பதை பாருங்கள். சுகமளிக்கும் வரம் பெற்றவர் தங்கள் ஸ்தாபனத்தில் சேர மறுத்த காரணத்தால், அவர்கள் தங்களுக்கென சுகமளிக்கும் ஒருவரைப் பெற விழைந்தனர். நாம் என்ன செய்துவிட்டோம்?
அதை சிறிது நேரம் சிந்திப்போம். மோசே செய்த அதே காரியத்தை நாம் செய்தோம். நாம் சென்று ஏதோ ஒருவிதமான அற்புதத்தை உற்பத்தி செய்ய முயன்று, "நான் வியாதியை முகருகிறேன்", "என் கையில் இரத்தம் வடிகிறது" என்று கூறினோம் - ஒரு அற்புதத்தை உற்பத்தி செய்தல். இப்பொழுது நாம் பெற்றுள்ளது என்ன?
அவர்களில் சிலர், அதிக இறுக்கமடைந்து, அதை விட்டு விலகி குடிகாரராகவும் நரம்புதளர்ச்சி உள்ளவர்களாகவும் மாறிவிட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகள் பெந்தெகொஸ்தே குறிக்கோளிலிருந்து அகன்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்வதில் சென்றுவிட்டது.
பாருங்கள்,
59 நாம் என்ன செய்துவிட்டோம் என்று. நாம் ஒரு எகிப்தியனைக் கொன்றோம். அது உண்மை. நாம் முயன்று, பாடுபட்டு பணம் கொடுத்து, ஜெபக் கூட்டங்களில் இரவு முழுவதும் உழைத்தும், ஒரு சத்தத்தையும் கேட்க முடியவில்லை. எனவே நாம் ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முயன்று, அது முழுவதும் தோல்வி அடைந்துவிட்டதென்று கண்டோம். நாம் வனாந்திரத்துக்கு செல்ல வேண்டியது அவசியம். அது உண்மை. ஆம், ஐயா.
காம்ப் கூட்டங்களும் பாடுபடுதலும். அதை ஏன் விட்டுவிடக் கூடாது? அதைத் தான் நீங்கள் செய்யவேண்டும். அதை கைவிட்டுவிட வேண்டும். நாம் மோசே புரிந்த அதே செயலை செய்து கொண்டு வந்தோம். அதனால் ஒரு உபயோகமுமில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்து மோசே, அவன் தேவனுடைய வார்த்தைக்கு கட்டப்பட்டவனாக இருப்பதை அறிந்து கொண்டான்.
60 இவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைத்திருக்கும் போது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தேவன் நமக்கு உரைத்த அந்த மகத்தான கிரியைகள் வெளிப்பட்டு, நாம் மறுபடியும் பிறப்பது எப்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற சத்தியங்களை எடுத்துரைத்த பிறகும், பாருங்கள், ஜனங்கள் சத்தியத்தில் கொண்டு வரப்பட்டு அதில் நிலைத்திருப்பதற்கு பதிலாக, அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தங்கள் சொந்த ஸ்தாபன தத்துவங்களை கைக்கொள்ளத் தொடங்கினர். அது ஏற்கனவே தோல்வியடைந்த ஒன்று. அவர்கள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்து, அது உண்மையைப் போல் காணும்படி செய்கின்றனர்.
61 இத்துடன் இதை நிறுத்திக் கொள்வது நலம். நான் கூறுவதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு போதிய ஞானம் உள்ள தென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஆனால் அது என்ன விளைவித்தது என்று பாருங்கள். சற்று சிந்தித்து பாருங்கள்! இன்றிரவு நமக்கு என்ன உள்ளது? ஸ்தாபனங்களால் நிறைந்த தேசம். அவர்கள் வேத வசனங்களை மறுதலித்து, பரிசுத்த ஆவியின் ஜீவனை, மனோதத்துவத்தினால் மனதிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் (Mental telepathy) என்றழைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை அவர்கள் சபைக்குள் அனுமதிக்க மறுத்து, பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி வேத பூர்வமானது என்று நிரூபித்த சர்ப்பத்தின் வித்து, நித்திய பாதுகாப்பு போன்றவைகளை பிரசங்கிக்க அனுமதியளிப்பதில்லை.
அது தவறென்று நிரூபிக்க நான் சவாலுக்கு மேல் சவால் விட்டிருக்கிறேன். அவர்கள் எதை பெற்றுள்ளனர்? லூத்தரும் மற்றவர்களும் பெற்றிருந்ததையே, பாருங்கள்?
எகிப்தியனைக் கொன்று போடுதல். அது என்ன? ஒருக்கால் அது ஒரு மனிதனை தன் திருட்டுத்தனத்திலிருந்து திருப்பியிருக்கக் கூடும், அல்லது தன் மனைவிக்கு உண்மையாய் வாழும்படி செய்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் அவனை என்ன செய்துவிட்டீர்கள்? ''எங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொள்ளுங்கள்" என்று சொல்லி சபை அங்கத்தினனாக செய்துவிட்டீர்கள்.
62 பாருங்கள், மோசே தான் பெற்றிருந்த 40 ஆண்டுகால பயிற்சியின் விளைவாய் மரித்து நாற்றமெடுத்த ஒரே ஒரு மனிதனை மாத்திரம் சுட்டிக் காண்பிக்க முடிந்தது - மரித்து, அழுகி, நாற்றமெடுத்த ஒரே ஒரு எகிப்தியனை.
இன்றிரவும் அவ்வாறேயுள்ளது, இதுவரை நடை பெற்றுள்ள எழுப்புதல் கூட்டங்களின் (அவ்வாறு அழைக்கப்படுகின்ற) விளைவாக நாம் சுட்டிக் காட்டக் கூடிய ஒன்றே ஒன்று, எகிப்தின் இரவைக் குறித்து எவ்வாறு ஆப்பிரிக்க பழங்குடியினர் அறிய முடியவில்லையோ, அவ்வாறு தேவனை அறியாத நாற்றமெடுத்த ஒரு கூட்டம் சபை அங்கத்தினர்கள் மாத்திரமே. அவர்கள் என்ன கூறினாலும், ''எங்களால் அதை விசுவாசிக்க முடியாது", என்கின்றனர். நாம் பட்ட எல்லா பாடுகளின் விளைவாய் அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தைப் பெறுதல் என்பது மிகவும் பயங்கரமான காரியமே!
63 ஒருக்கால் நாம் பெரிய வேதாகமப் பள்ளியைப் பெற்று அதைச் சுட்டி காட்ட முடியும். ஆனால் அது மரித்த நிலையில் உள்ளது! நாம் ஒரு ஸ்தாபனத்தை சுட்டிக் காட்ட முடியும். அது மரித்த நிலையில் உள்ளது! அது நாற்றமெடுக்கின்றது! நாம் முதலில் எதை விட்டுவெளி வந்தோமோ, அதுதான் அது. நாய் தான் கக்கினதைத் தின்னவும், பன்றி சேற்றிலே புரளவும் திரும்பிச் செல்வது போன்றது அது.
ஒரே ஒரு மரித்த எகிப்தியன்…
64 அது என்னவென்று யாராகிலும் அறிந்திருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை… அதற்கென்று மோசே அழைக்கப்பட்டதை அவன் உணர்ந்திருந்தான்.
"ஜனங்களின் மேல் கொண்டிருந்த பரிதாபத்தை இழந்துவிட்டீர்களா?"
"இல்லை, ஐயா".
"பின்னே ஏன் நீங்கள் போய் அதைச் செய்ய கூடாது. நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது? நீங்கள் ஏன் மற்றவர்களுடன் கலந்து கொள்ளக் கூடாது".
மோசே அங்கு எரிகிற முட்செடியின் அனுபவத்தைப் பெற்று, ''நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். என் உடன்படிக்கையை நினைவு கூர்ந்து அவர்களை விடுவிக்க இறங்கி வந்தேன். அதற்காக உன்னை அனுப்புகிறேன்" என்னும் அந்த வார்த்தையை அது பிரகடனம் செய்யும் வரைக்கும் அவனிலிருந்த மற்றெல்லாம் களையப்பட வேண்டியதாயிருந்தது.
அதுதான்…
65 அவன் வார்த்தையை பார்த்தான், ஜனங்களின் சுய ஆசையோ அல்லது வாஞ்சையோ இல்லை. அதன் பிறகு மோசே என்னவானான்? அவன் எகிப்தியர்களை சந்திக்க விரும்பவில்லை, இந்த காரியத்தை அவன் இனி ஒருபோதும் செய்ய விரும்பவில்லை. அவன் கட்டப்பட்வனானான்! ஆமென்.
அத்தனை வருடங்களாக அவனிலிருந்தவை களையப்பட்டு, அதன் பிறகு அவன் எரிகின்ற முட்செடியில் கட்டப்பட்டவனாகிறான்… அறிவுத்திறன் கொண்ட மகத்தான மோசே. எகிப்தில் மோசே வார்த்தையிலும் செய்கையிலும் வல்லவனாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது
அந்த வல்லமையான வேத சாஸ்திர நிபுணன் எரிகிற முட் செடியின் முன்னிலையில் என்ன செய்தானென்று கவனியுங்கள். அவன் தன் இயலாமையை அறிக்கையிட்டான். அவன் தேவனுடைய உண்மையான நோக்கத்தைக் கண்டபோது, அவன் அதை செய்ய இயலாதென்று அறிக்கையிட்டான். இருப்பினும் அவன் தன்னால் பெற முடிந்த வேத சாஸ்திரம் எல்லாவற்றிலும் பயிற்சி பெற்றிருந்தான். அவன் மிகச் சிறந்த பள்ளிகளில் பயிற்சி பெற்றான். இருப்பினும் அக்கினி ஸ்தம்பம் அந்த முட்செடியில் தொங்கின போது, அவனால் என்ன செய்ய முடியும்… அவன், "என்னால் பேசவும் கூட முடியவில்லை" என்றான்.
''ஆண்டவரே, நான் போவதற்கு எம்மாத்திரம்?", "மோசே, உன்னோடு நான் பேச வேண்டும். உன் பாதரட்சைகளை கழற்றிப் போடு. நீ தரையில் விழு. உன்னோடு நான் பேசவேண்டும்''.
66 அவனால் பேசவும் கூட முடியவில்லை. முடிவில் அவன் கட்டப்பட்டவனாக, தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாக ஆகின்றான் - பவுல் தெரிந்து கொள்ளப்பட்டது போல்.
மோசே தெரிந்து கொள்ளப்பட்ட மீட்கிறவன் ஆகின்றான். முடிவில் தேவன் தெரிந்து கொள்ளப்பட்ட தம் பிரஜையை கட்டப்பட்டவனாக்குகின்றார். ஓ, என்னே! தேவனுடைய வார்த்தை அவனைப் போகச் சொன்னபோது மாத்திரம் அவன் போனான்.
"என்னை அனுப்பினது யார் என்று சொல்லுவேன்?"
"இருக்கிறேன் என்பவர்",
"அதை எப்படி நான் செய்வேன்?"
"நான் உன்னோடு கூட இருப்பேன்"
"சரி, ஆண்டவரே, நீர் சொன்னபடியே செய்வேன். இதோ இருக்கிறேன்".
"ஓ, என்னே, அதுதான்… அவன் கட்டப்பட்டவன். அவன் கொண்டிருந்த கருத்துக்கு விரோதமாக அவன் செல்கிறான்.
அவன் இராணுவத்தை நடத்த பயிற்சி பெற்றிருந்தான். எல்லா இரதங்களும் ஒழுங்காக சென்று, ஈட்டிகளால் தாக்கி, அப்படித்தான் அதை கைப்பற்ற அவன் எண்ணம் கொண்டிருந்தான். அதுதான் அவன் பெற்றிருந்த பயிற்சி. ஆனால் அவன் கர்த்தரிடம், "நான் எதை உபயோகிக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அவர், "உன் கையில் என்ன இருக்கிறது?" என்றார்.
"ஒரு கோல்!'' சில சமயங்களில் தேவன் மனித அறிவுக்கு கேலித்தனமாய் காணப்படும் காரியங்களைச் செய்வார். அவன் கையில் ஒரு கோல் இருந்தது. தாடி தொங்கிக் கொண்டிருந்த 80 வயது கிழவன், தன் மனைவியை கழுதையின் மேல் ஏற்றி, அவள் குழந்தையை தன் இடுப்பில் வைத்து, தசைகள் தொங்கிக் கொண்டிருந்த கரத்தில் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டவனாய் நிமிர்ந்து நடந்து செல்கிறான். என்ன? (முடிவில் அவன் நங்கூரமிடப்பட்டான்).
67 அவன் கட்டப்பட்டவனானான்.
''வார்த்தை போகச் சொல்லும் போது மாத்திரம் நான் செல்கிறேன். வார்த்தை பேசும் போது மாத்திரம் நான் பேசுகிறேன்''.
"நீ எங்கே போகின்றாய்?"
"நான் ஒரு கட்டளை பெற்றிருக்கிறேன் - நான் பார்வோனின் முன்னால் நின்று, தேவன் அவனுக்கு அனுப்பின இந்த கோலைக் காண்பிக்க வேண்டும்".
"இதன் பிறகு என்ன செய்யப் போகின்றாய்?"
''அடுத்ததாக நாங்கள் செய்ய வேண்டியதை அவர் கூறுவார்".
பார்த்தீர்களா? நான் செய்ய வேண்டியது ஒன்று மாத்திரமே. என்னை அவருடைய கரங்களில் ஒப்புவித்து கட்டப்பட்டவனாக ஆகவேண்டும். உன்னைக் குறித்தோ அல்லது வேறொன்றைக் குறித்தோ எண்ண வேண்டாம். நீ கட்டப்பட்டவனாக ஆகிவிடு.
68 மோசே கட்டப்பட்டவனானான். அவனால் பேச கூட முடியவில்லையென்று அறிக்கை செய்தான். முடிவில் தேவன் அவனைத் தமது கரங்களில் கொண்டார் தேவன் போகச் சொன்னால் மாத்திரமே அவனால் போக முடிந்தது. அங்கே… அவர் வார்த்தையை அவனிடம் கூறினார். அது வார்த்தையென்று அவன் அறிந்து கொண்டான். அவன் தன்னை வார்த்தைக்கும் பரிசுத்த ஆவிக்கும் ஒப்புக் கொடுத்தான். தேவன் மோசேயை தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படுத்தினார்.
அதையே அவர் பவுலுக்கும் செய்தார். அது உங்களுக்குத் தெரியுமா? பவுலை அவர் கீழ்படுத்தினார் - கோணல் மூக்கு, கேலி செய்த யூதன். பவுல் பிஎச். டி., எல். எல். டி பட்டங்களைப் பெற்றிருந்தான். அவர், ''அவன் வார்த்தைக்காக எவ்வளவாய் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்" என்றார்.
69 பவுல் அங்கு உட்கார்ந்து கொண்ட வார்த்தையைக் கண்டு, அது இயேசுவென்று அறிந்து கொண்டான். அவன் தன் கரங்களையுயர்த்தி அவருக்கு தன்னைக் கீழ்ப்படுத்தினான். தேவனுடைய அன்பு அவனை வார்த்தைக்கு கீழ்ப்படுத்தினது. "அவன் புறஜாதிகளுக்கு முன்பாக என் நாமத்தை அறிவிப்பான்." அவன் புறப்பட்டு சென்றான்.
''மோசே, நான் உன் பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். அவர்களுக்கு நான் அளித்த வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன். அது நிறைவேறுவதற்கான நேரம் வந்துவிட்டது. என் ஜனங்கள் படும் உபத்திரவத்தைக் கண்டு என் வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தேன். உன்னைக் கீழ்ப்படுத்த நான் இறங்கி வந்தேன்.
வார்த்தை என்ன கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? "நீ அங்கு போவதற்காக உன்னைக் கீழ்ப்படுத்தினேன்.
70 என் ஜனங்களை விடுவிப்பதற்கென உன்னை வல்லமையினால் நிறைத்து அனுப்புகிறேன். உன் கையில் அந்த கோலை சாட்சியாக எடுத்துக் கொண்டு போ. ஏனெனில் அதைக் கொண்டு ஒரு அற்புதம் நடக்கக் கண்டாய் என்றார். தாவீது கவண் கல்லைக் கொண்டு அற்புதம் நடந்ததைக் கண்டதுபோல்.
அவன் தன்னை கீழ்ப்படுத்திக் கொண்டு அங்கு சென்றான். முடிவில் தேவன், தனக்கு கீழ்ப்படிந்த ஒருவனைப் பெற்றார். தேவனுடைய வார்த்தை அவனைப் போகச் சொன்னாலொழிய அவனால் போக முடியாது. இன்றைக்கு ஜனங்கள் மாத்திரம் அதையே செய்தால்!
அப்பொழுது அவன் அவருக்கு கட்டப்பட்டவனானான் - அன்பினால் கட்டப்பட்டவன். இந்த அன்பின் கயிற்றினால் அவன் தேவனுடைய நுகத்தில் பிணைக்கப்பட்டான் - எப்படி பவுல் அன்பின் கயிற்றினால் தேவனுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டானோ, அதேவிதமாக. இருவரும் ஒரே விதமான பயிற்சி பெற்றனர். இஸ்ரவேல் ஜனங்களை இராணுவ பலத்தினால் விடுவிக்க மோசே பயிற்சி பெற்றிருந்தான். பவுல் அக்காலத்தில் உலகிலிருந்த பெரிய மார்க்க சக்தியின் மேலும், ரோமருடைய கைகளிலிருந்து அவர்களை விடுத்து சுயாதீனராக்கவும் பயிற்சி பெற்றிருந்தான். கமாலியேலின் கீழ் பயிற்சி அளிக்கும் பெரிய பள்ளிகள் இருந்தன. இருவரும் வனாந்தரத்துக்கு சென்று வித்தியாசமான மனிதர்களாய் திரும்பி வந்தனர்.
இருவரும் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டனர். இருவரும் தீர்க்கதரிசிகள்! அது சரியா? இருவரும் தீர்க்கதரிசிகள், இருவரும் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து பேசப்படுவதைக் கேட்டனர். முற்றிலும் உண்மை. இருவரும் விடுவிப்பதற்கென தோன்றினர். இருவரும் வனாந்தரத்துக்கு சென்றனர். இருவரும் தங்கள் வீடுகளை விட்டு, வனாந்தரத்துக்கு சென்றனர்… தங்கள் ஜனங்களையும் எல்லாவற்றையும் விட்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளச் சென்றனர்.
இருவரும் ஒரே விதமான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனால் தேவனோ அவர்களை வேறுவிதமாக மாற்றினார். அவர்கள் முற்றிலும் கட்டப்பட்டவர்களாகி, தங்கள் விருப்பப்படி நடவாமல், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதேவிதமாக நடந்தனர். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
71 நமக்கு இன்னும் பத்து நிமிடங்கள் கிடைக்குமா… நான் வேதத்திலுள்ள இன்னும் ஒருவனைக் குறித்து வேகமாக கூறிவிடுகிறேன். அவன் என் கண் முன் இருக்கிறான். அவனுடைய பெயர் யோசேப்பு. அவன் தெரிந்து கொள்ளப்பட்ட குமாரன். அவன் இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரண முன்னடையாளமாகத் திகழ்ந்தான். அவன் தீர்க்கதரிசியாகப் பிறந்தான். அவனும் ஒரு தீர்க்கதரிசி. அவன் தரிசனங்களைக் கண்டான். அவன் சிறுவனாயிருந்தபோதே, அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து, அவனுடைய சகோதரர்கள் அவனை வணங்குவது போல் தரிசனம் கண்டான்.
ஆனால் கவனியுங்கள். அவன் தன்னைப் பெரியவனாகப் பாவித்துக் கொண்டான். பாருங்கள் எல்லாருமே - ஆனால் தேவன் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர் மற்றவர்களுக்கு செய்ததையே இவர்களுக்கும் செய்தார். ஏனெனில் மோசே மீட்கிறவன், பவுல் மீட்கிறவன். இப்பொழுது யோசேப்பும் மீட்கிறவன். அவன் தன் ஜனங்களை பஞ்சத்திலிருந்து இரட்சித்தான்.
72 தேவன் அவனுக்கு என்ன செய்ய வேண்டியிருந்தது? அவன் சிறையில் அடைக்க வேண்டியிருந்தது. நேராக சிறையில்.
ஆம், ஐயா அவன் சகோதரர்களால் இஸ்மவேலருக்கு விற்கப்பட்டான். அவர்கள் அவனை போத்திபாருக்கு விற்றனர். போத்திபார் அவனுக்கு சிறிது சுதந்திரம் கொடுத்திருந்தான். முதலாவதாக, என்ன தெரியுமா? அது அவனை விட்டு எடுக்கப்பட்டது. அவன் அழுது கொண்டே சிறைவாசம் செய்தான். தேவன் அதைக் களைய வேண்டியதாயிருந்தது.
இப்பொழுது இதை கவனியுங்கள். அவன் காவலில் இருந்தபோது, அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து அவனுடைய சகோதரர் அவனை வணங்குவது போல் அவன் கண்ட தரிசனம் அவன் நினைவில் எப்பொழுதும் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அது அவன் தேவனிடத்திலிருந்து பெற்ற வரம் என்றும், அது நிறைவேற வேண்டும் என்றும் அவன் அறிந்திருந்தான்.
73 அதை நாம் மனதில் கொண்டவர்களாக மாத்திரம் இருந்தால்: அதாவது தேவனுடைய வார்த்தையின்படி இந்தக் கடைசி நாட்களில் அவர் ஒரு சபையை - ஒரு கூட்டம் ஜனங்களை - பெறுவார் என்றும், அவர் செய்ய போவதாக வாக்குத்தத்தம் பண்ணினவைகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் இது நாம் வார்த்தையுடன் வாழும் நேரம் என்றும் அறிந்திருந்தால்! நம்மை அவர் கட்டப்பட்டவர்களாக ஆக்க முயன்று கொண்டிருக்கிறார், அவருடன் அடைக்கப்பட.
நாம் முன்பு பாடும் பாடல்: "நான் தேவனுடன் அடைக்கப்பட்டிருக்கிறேன், நான் தேவனுடன் அடைக்கப்பட விரும்புகிறேன்." உங்களுக்கு ஞாபகமுள்ளதா?… தேவனுடன் அடைக்கப்படுதலைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். வேறொன்றும் செய்ய முடியாது. தேவன் போகச் சொன்னால் மாத்திரம் நாம் போக முடியும். தேவன் சொன்னதை மாத்திரமே நாம் செய்ய முடியும். அப்பொழுது நாம் தேவனுடன் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமாகிறது.
74 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவன் முழுவதும் தோல்வியடைந்தான். அவன் அறிந்திருந்த அனைத்தும், அவனுக்கு புரிந்த அனைத்தும் முழு தோல்வியடைந்துவிட்டது. அது கிரியை செய்யவில்லை. அவன் சொல்வதை யாருமே கேளாத சூழ்நிலையில் அவன் வைக்கப்பட்டான். அவன் கட்டப்பட்டவனானான்.
அவிசுவாசிகள் அவனை விசுவாசிக்காத ஒரு சூழ்நிலையில் அவன் வைக்கப்பட்டான். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? அவனுடைய ஊழியம் அவமாய் போனது. ஜனங்கள் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொண்டனர். அவன் காவலில் இருந்தபோது யாருமே அவன் மேல் கவனம் செலுத்தவில்லை. அவனுடைய ஊழியத்தினால் என்ன உபயோகம்? சிறைக் கம்பிகளின் பின்னால் நின்றுகொண்டு அவன் பிரசங்கம் செய்திருக்கக் கூடும். அவர்களோ கேளாமல் அங்கிருந்து நடந்து சென்றிருப்பார்கள். பாருங்கள்? அவன் கட்டப்பட்டவனானான். அவன் சரியாகும் வரைக்கும் தேவன் அவனைக் காவலில் வைத்தார்.
மகிமை! - முழுவதும் தோல்வி.
75 முடிவில், தேவன் யோசேப்பிடம் அவன் சிறைக்குள் வந்தார். அவர் பவுலிடமும் மற்றவர்களிடமும் வந்தது போல், அவர் யோசேப்பிடம் வந்து, அவனை அங்கிருந்து வெளியே கொண்டு வர, அவர் அவனுக்கு அளித்திருந்த வரத்தை உபயோகித்தார். நிச்சயமாக. அவர் அவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர் என்ன செய்தார்? அவர் அவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தவுடனே, அவனுக்கு ராஜாவினால் அதிகாரம் அளிக்கப்பட்டது. அவன் மாறினான். அவன் யாருக்கு கீழ் அடங்கியிருந்தானோ, அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் சிறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, அவன் சொன்னதெல்லாம் நிறைவேறத் தக்கதாக, அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆமென்.
ஒரு நோக்கத்துக்காக பிறந்தான் என்று எப்பொழுதும் மனதில் கொண்டிருக்கும் கட்டப்பட்டவன் எவனும்… அவன் ராஜாவின் அருகில் உட்காரப் பிறந்தான், மற்றவர் எல்லாரும் அவர்களுடைய முழங்கால்களை முடக்கி அவனை வணங்க வேண்டும். அப்படித்தான் அவன் கண்ட தரிசனம் உரைத்தது. ஆமென்! ஆனால் தரிசனம் முழுவதுமாக நிறைவேறுவதற்கு முன்பு, அவன் சிறைவாசம்அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. ஆமென்! அதன் பிறகு அவன் ஆளுகை செய்பவனாகின்றான். அவன் சிறையை விட்டு வெளி வந்து தேவனுடைய வார்த்தைக்கு கட்டப்பட்டவனாகி, தேவன் அவன் வாயில் போடுகிறதை மாத்திரம் அவனால் கூற முடிந்தது. அப்பொழுது தேவன் அவன் மூலம் அசைவாடினார்.
76 கவனியுங்கள், பார்வோனின் சிறையை தன் விருப்பப்படி கட்ட யோசேப்புக்கு அதிகாரம் இருந்தது. "நீங்கள் இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து போ என்று சொல்ல" பார்வோனின் சிறையைக் கட்ட அவனுக்கு அதிகாரம் இருந்தது. அவர்கள் டீகன்மாராக இருந்தாலும், போதகர்களாக இருந்தாலும், மாகாணப் பிரதிநிதிகளாயிருந்தாலும், அவர்கள் யாராயிருந்தாலும், அவன் "உங்களைக் கட்டுகிறேன்" என்று சொல்லியிருந்தால், அவ்வளவு தான், அவர்கள் கட்டப்படுவார்கள். அவன் தன் சொந்த வார்த்தையை உரைத்து, தன் சித்தப்படி அதை செய்திருக்கக் கூடும். ஆமென்! தேவனுக்கு மகிமை!
ஓ, என் வாக்கை காத்துக் கொள்ள, இன்னும் மூன்று நிமிடங்கள் மாத்திரமே உள்ளது.
77 அவன் தேவனுக்கு கட்டப்பட்டவனாக ஆனான் என்று காண்கிறோம் - உலகத்துக்கு கட்டப்பட்டவனாயிருப்பதை தவிர்த்து, பவுலுக்கும் அதேவிதமாக சம்பவித்தது, மோசேக்கும் அதே விதமாக சம்பவித்தது - தன் சொந்த கருத்துக்கு கட்டப்பட்டவனாயிருப்பதை விட்டுவிட்டு தேவனுக்கு கட்டப்பட்டவனாக ஆதல். யோசேப்பு வெளியே வந்தபோது. அவன் தேவனுடைய வல்லமையைப் பெற்றிருந்தான்.
சவுல் பவுலான போது… மோசேயின் சொந்த கருத்து… அவன் அதை தேவனிடம் சமர்ப்பித்து, அது அவனை விட்டு களையப்பட்டது. அவன் கிறிஸ்துவின் வார்த்தைக்கு கட்டப்பட்டவனானான். கிறிஸ்து சொன்ன இடத்துக்கு மாத்திரம் அவனால் போக முடிந்தது… நீங்கள் "கிறிஸ்துவா"? என்று கேட்கலாம்… அவன் எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எனவே பவுல் போல் கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனானான்.
78 அவர்கள் மூவரும் தீர்க்கதரிசிகள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்துக்கும் அவருடைய வழிகளுக்கும் கட்டப்பட்டவர்களாவதற்கென, தங்கள் சொந்த கருத்துக்கள் அவர்களை விட்டுக் களையப்பட வேண்டியதாயிருந்தது. ஞாபகம் கொள்ளுங்கள், அவனுக்கு தன் சொந்த வார்த்தையினால் கட்டவும் தன் சொந்த வார்த்தையினால் கட்டவிழ்க்கவும் அதிகாரம் இருந்தது. அவன், "என் ராஜாவின் நாமத்தினாலே உன்னை கட்டவிழ்க்கிறேன்" என்று கூறியிருக்க முடியும். ஆமென்!
பார்வோன் யோசேப்பை தன் குமாரனாக்கிக் கொண்டான்.
79 கிறிஸ்துவும் அன்பினால் கட்டப்பட்டவர்களை தமது குமாரராக்கி கொண்டு அவருக்கிருந்த வல்லமையை அவர்களுக்களிக்கிறார். யோவான்: 14:12, "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வான்", பாருங்கள்?
கிறிஸ்துவின் அன்பினால் கட்டப்பட்டவனுக்கு ராஜாவாகிய கிறிஸ்துவினால் அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆமென். "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னப்படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்", "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்", ''நீங்கள் என்னுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால்…" ஏனெனில் அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றே. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்", "அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்", "நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்…'' (இங்கும் அங்கும் அல்ல). "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ" (அல்லது நீங்கள் உரைப்பது எதுவோ) "அது உங்களுக்குச் செய்யப்படும்'', அவன் வல்லமையைப் பெறுகிறான்.
80 கவனியுங்கள், யோசேப்பு சிறையை விட்டு வெளியே வருவதற்கு முன்பு, அவனைக் கொண்டு போய் சவரம் பண்ண வேண்டியதாயிருந்தது. அவன் ராஜாவை சந்திக்கும் முன்பு, சில காரியங்கள் அவனிலிருந்து சவரம் பண்ணப்பட வேண்டியிருந்தது.
ஓ, தேவன் சில நேரங்களில் தம்முடைய பிள்ளைகளை அப்படியே வெளியே கொண்டு போய், அவர்களுடைய சுய சித்தத்தில் சிலவற்றை சவரம் பண்ணுகிறார். அதன் மூலம், அவர்கள் விரும்புவதை அவர்கள் செய்ய முடியாது என்பதைக் காண்பிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அவர்கள் விரும்புவதை செய்வதற்கு அவர்களுக்கு சுயாதீனம் கிடையாது. அவர்கள் முழு அதிகாரத்துக்குள் வந்து கிறிஸ்துவின் அன்பின் அடிமைகளாவதற்கு முன்பு, அவர்கள் சவரம் பண்ணப்பட்டு அவர் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும். சில சமயங்களில் அப்படி செய்ய அவர் அவர்களை வனாந்தரத்துக்கு கொண்டு செல்கிறார். அவர்களை அங்கு கொண்டு சென்று, சவரம் பண்ணி, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக அங்கிருந்து கொண்டுவந்து, எந்த நோக்கத்துக்கென்று அவர்களை நியமித்திருக்கிறாரோ, அந்த நோக்கத்தை அவர்களில் நிறைவேற்றுகிறார். நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று பாருங்கள்!சகோதரனே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்.
81 மற்றெல்லா காலங்களிலும் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர் எப்பொழுதுமே ஒரு மனிதனை தெரிந்து கொண்டு அவனைத் தமக்கு கட்டப்பட்டவனாக செய்ய வேண்டியிருந்தது - அவன் தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் கைவிட வேண்டும். அவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து அவரைப் பின்பற்ற, தான் அறிந்த எல்லாவற்றையும், தான் பெற்றிருந்த பயிற்சி அனைத்தும் கைவிட வேண்டியதாயிருந்தது. அவன் மனிதனுடைய காரியங்களையும் தேவனுடைய காரியங்களையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது. அவை ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன.
நீங்கள் ஒரே நேரத்தில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்ல முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் இடது பக்கமும் வலது பக்கமும் செல்ல முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் சரியானதையும் தவறானதையும் செய்ய முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் தேவனையும் மனிதனையும் பின்பற்ற முடியாது. இல்லை, ஐயா, நீங்கள் ஒன்று தேவனைப் பின்பற்ற வேண்டும். அல்லது மனிதனைப் பின்பற்ற வேண்டும்.
நீங்கள் தேவனைப் பின்பற்ற அவருக்கு உங்களை ஒப்புவித்திருந்தால், நீங்கள் அவருக்கு கட்டப்பட்டவர்களாகிவிடுகிறீர்கள் - அந்த வார்த்தைக்கு, அந்த சித்தத்துக்கு யார் என்ன கூறின போதிலும், நீங்கள் அதற்கு கட்டப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
82 கவனியுங்கள், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். பிரசங்கத்தை முடிக்கப் போகும் கடைசி சில நிமிடங்களுக்கு முன்பு இதை பயபக்தியுடனும் மரியாதையுடனும் கூற விரும்புகிறேன். இந்தக் கடைசி நாட்களில் தேவன் செய்யப் போவதும், அவசியம் செய்ய வேண்டியதும் என்னவெனில், அறுப்புக்காக அவர் ஒரு அரிவாளை தெரிந்து கொள்ள வேண்டும், களத்தைப் போரடிக்க ஒரு கருவியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
அறுப்புக்காக செல்லும் எந்த விவசாயிக்கும் ஒரு அரிவாள் தேவை. நிச்சயமாக. தானியத்தை அடித்துப் பிரிக்க அவனுக்கு கூர்மையான கருவி ஒன்று அவசியம். அறுப்புக்கு தானியம் முதிர்ந்துவிட்டது.
தேவனே, உமது கரங்களில் எங்களை எடுத்துக் கொள்ளும். உமது அன்பின் ஊழியக்காரராக எங்களை ஆக்கிக் கொள்ளும். நாங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பாவமுள்ள, சபிக்கப்பட்ட உலகத்துக்கு, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் உணர்வைக் கொண்டு வர எங்களைக் கருவிகளாக உபயோகித்தருளும்.
என்னைப் பொறுத்தவரையில்: தேவனே, நான் கட்டப்பட்டவனாக இருக்கட்டும். என் சகோதரர் அனைவரும் என்னைப் புறக்கணித்தாலும், என் நண்பர் அனைவரும் என்னை புறக்கணித்தாலும், நான் இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கட்டப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியினால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படுத்தப்பட்டு அவர் என்னென்ன நடக்கும் என்று உரைத்திருக்கிறாரோ, அதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதைக் காண வாஞ்சிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். ஜெபம் செய்வோம்.
83 நாம் தலைவணங்கியுள்ள இந்நேரத்தில், நாம் பெரியவர்களாக வேண்டுமெனும் நம்முடைய சுய ஆசை, சுய நலம் கொண்ட எண்ணங்கள், இவைகளை நாம் ஒருபுறம் தள்ளி வைப்போமா?
இன்றிரவு இங்குள்ள சிறுவன் யாராகிலும், "நான் பெரியவனாகும்போது, நான் இப்படி, இப்படி இருப்பேன்" என்னும் சுய ஆசை கொண்டுள்ளானா? தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்க்கையில் அசைவதை நீங்கள் உணர்ந்து "இல்லை, இல்லை, என் சுய ஆசைகள் அனைத்தும் இழந்துவிட்டேன். கடந்த சில நாட்களாக பரிசுத்த ஆவி என்னுடன் பேசிக் கொண்டு வருகிறார். இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய போரடிக்கும் (threshing) கருவியாக இருக்க என்னை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன்'' என்று கூறமுடியுமா?
இங்குள்ள சிறுமி யாராயிருந்தாலும், நற்பண்புள்ள பெண்ணாக ஆகவேண்டும், அல்லது அழகான பெண்ணாக வர வேண்டும். அல்லது என்றாவது ஒரு நாள் ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்னும் எண்ணமுற்றிருந்தால், உங்கள் சுய ஆசைகள் அனைத்தையும் தேவனுடைய சமுகத்திலும் அவருடைய வார்த்தையின் சமுகத்திலும் ஒப்புக் கொடுத்து, தேவனுடைய அழைப்பை உங்கள் வாழ்க்கையில் கேட்பீர்களா? நீங்கள் யாரென்று தேவன் அறிவார்.
84 இங்கு சபையில் எங்காகிலும் ஒரு போதகரோ அல்லது ஊழியக்காரரோ இருக்க நேர்ந்தால் (நான் எப்பொழுதாவது ஒருமுறை இங்கு வருகிறேன். இன்றிரவு இங்கு உட்கார்ந்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேரைக் கூட எனக்குத் தெரியாது… ஒரு சிலர் மாத்திரமே எனக்குத் தெரியும்). அப்படி யாராவது இங்கிருக்க நேர்ந்து, "யார் என்ன கூறுனாலும் எனக்கு கவலையில்லை.
நான் இப்பொழுது தேவனுக்கு அடிமை. என்ன நேரிட்டாலும் நான் தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பிரசங்கிக்கப் போகிறேன். என் ஸ்தாபனம் என்னை வெளியே அனுப்பினாலும் எனக்குக் கவலையில்லை. நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன். என் சித்தமே தேவனுடைய சித்தம். தேவனுடைய சித்தமே என் சித்தம். நான் இயேசு கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். அவருடைய கிருபையினாலும், ஒத்தாசையினாலும், அதை செய்வேன்" என்று கூறு விரும்புகிறீர்களா? நாம் தலை வணங்கியிருக்கும் போது, அதை சற்று யோசித்துப் பாருங்கள்.
அந்த ஆவல் எத்தனை பேருக்கு இன்றுள்ளது? உங்கள் கரங்களையுயர்த்துவீர்களா? என் கரத்தையும் உயர்த்துகிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், இதை ஆழ்ந்து சிந்தித்து ஜெப சிந்தையில் உள்ளபோது, மெல்ல பாடுவோம்.
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே,
எல்லாவற்றையும் உமக்கே நான் ஒப்புவிக்கிறேன்.
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
(நீங்கள் உண்மையாகவே அதை கூறுகிறீர்களா? நான் கட்டப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, என்னை குயவனின் வீட்டுக்குக் கொண்டு சென்று, என்னை சுக்கு நூறாக உடைத்து, மறுபடியும் வனைவீராக).
என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே,
எல்லாவற்றையும் உமக்கே நான் ஒப்புவிக்கிறேன்.
85 பரலோகப் பிதாவே, பாடல் தொடர்ந்து வாசிக்கப்படும் போது, நான் பாடலைப் பாடுவதை நிறுத்திவிட்டு, உம்மிடம் சற்று நேரம் பேசுவது பிரயோஜனமாயிருக்கும் என்று எண்ணினேன். ஜனங்கள் "எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்" என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பிதாவே, அப்படி செய்ய இது தான் எங்களுக்களிக்கப்பட்ட கடைசி தருணம் போல் இதை செய்வார்களாக. நாங்கள் உத்தமத்துடன் வருவோமாக. நாங்கள் கர்த்தருடைய மேசையண்டையில், கழுவப்பட்ட வஸ்திரங்களுடனும், கழுவப்பட்ட ஆத்துமாக்களுடனும், கழுவப்பட்ட சித்தங்களுடனும், கழுவப்பட்ட சுய ஆசைகளுடனும் வந்து எங்களை ஒப்புவிப்போமாக.
86 தேவன், தம்முடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு எங்களை அவருடன் பிணைப்பாராக - தேவனுடைய வார்த்தையில், இன்றிரவு முதல் அந்த நுகம் எங்கள் இருதயங்களைக் குத்தி, பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களை ஆட் கொள்வாராக. "உன் சொந்த எண்ணங்களை எண்ணாதே, என் நினைவுகளை எண்ணு. என் சித்தத்தை யோசி. நான் உன்னை வழி நடத்துவேன்" என்னும் உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன்.
தேவனே, இந்த அனுபவத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்படி அருள்புரிவீராக. இங்கு வாலிபர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் - கணவனும் மனைவியும். சிலர் கணவனும் மனைவியுமாக ஆகப் போகின்றார்கள். இங்கு அவர்களைக் காட்டிலும் வயதான போதகர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, அவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர் இங்கு நானும் சகோ. நெவிலும் ஏணிப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறோம். எங்கள் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. எங்கள் அடிகள் முன்னை விட அதிக ஜாக்கிரதையாக எடுத்து வைக்கப்படுகின்றன. நாங்கள் கவனமாக அடியெடுத்து வைக்கிறோம். சரீரப்பிரகாரமாக பார்க்கும்போது, நாங்கள் முன்பு செய்தது போல அவ்வளவு உறுதியாக காலடிகளை எடுத்து வைக்க முடிவதில்லை. கர்த்தாவே, மரித்து போகக் கூடிய இந்த வாழ்க்கை மங்கிக் கொண்டு வருவதைக் காண்கிறோம். நீர் கரம் பிடிக்காமல், யாருடைய காலடிகளும் உறுதியாக இருக்க முடியாது.
87 தேவனே, எங்களை எடுத்துக் கொள்ளும் - அப்படி செய்வீரா? எங்கள் இருதயங்களையும் எங்கள் சித்தத்தையும் உமது கரங்களில் எடுத்துக் கொண்டு, இன்றிரவு நாங்கள் வார்த்தைக்கு, கிறிஸ்துவுக்கு, கட்டப்பட்டவர்களாயிருக்கும் படி செய்யும். நாங்கள் தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வோமாக. இங்குள்ள ஸ்திரீகளும், இந்த இளம் பெண்களும், இளைஞர்களும், சிறுவர்களும், சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிப்பார்களாக. அவர்கள் இயேசு கிறிஸ்துவை சேவிக்க வேண்டும் என்னும் ஆசை கொண்டிருப்பார்களாக. நாங்கள் அவருடைய தெய்வீக கிருபைக்கும் சித்தத்துக்கும் கட்டப்பட்டவர்களாக இருப்போமாக. கர்த்தாவே, இதை அருளும்.
கர்த்தாவே, இவ்வளவு தான் எனக்குச் செய்யத் தெரியும். இந்த சிறு கொச்சை வார்த்தைகளை நீர் சரியாக கோர்த்து ஜனங்களுக்குத் தருவீரென நம்புகிறேன். இங்கு உஷ்ணமாயுள்ளது. ஜனங்கள் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் கேட்க விரும்புகின்றனர். ஆனால் இங்கு உண்மையாக உஷ்ணமாயுள்ளது. அநேகர் வீடு திரும்பி நேரத்தோடே வேலைக்கு செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றனர். விதைக்கப்பட்ட வித்துக்கள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்து அவர்களை கட்டப்பட்டவர்களாகச் செய்யட்டும்.
88 அவர்கள் வீடு திரும்பி தங்கள் மனைவியிடம்… அவர்கள் பிற்பகல் அல்லது மாலையில் படுக்கையருகில் ஜெபிக்க ஆயத்தமாவதற்கு முன்பு. ஒருவருக்கொருவர், "அன்பே, நேற்றிரவு கேட்ட பிரசங்கத்தைக் குறித்தென்ன? நாம் உண்மையில் கிறிஸ்துவுக்கும் அவருடைய சித்தத்துக்கும் கட்டப்பட்டவர்களாகிவிட்டோமா, அல்லது நம்முடைய சுய சித்தத்தைக் கொண்டு கிரியை செய்கிறோமா?'' என்று கேட்கும்படி செய்யும்.
எல்லாவிடங்களிலுமுள்ள இளைஞர்களும், இளம் பெண்களும், முக்கியமாக இன்றிரவு இந்த செய்தியைக் கேட்டவர்கள், "என் சொந்த ஜீவனை வெறுத்து கட்டப்பட்டவனாக ஆக சித்தம் கொண்டிருக்கிறேனா?'' என்னும் கேள்வியை தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்வான்".
பிதாவே, அதுதான் உமக்கு கட்டப்பட்டவர்களாதல் என்று அறிந்திருக்கிறோம். எங்கள் சுய ஆசைகளையும் சுய விருப்பங்களையும் இழந்து உம்முடையதை ஏற்றுக் கொள்ளுதல். அப்பொழுது எங்களுக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். கர்த்தாவே, இதை அருளும்.
89 எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, இதை இப்பொழுது உமது கரங்களில் சமர்ப்பிப்பதே. அது கனிகளைத் தந்து கடைசி கால அறுவடைக்கு மகத்தான கருவிகளை தோன்றச் செய்வதாக. மனிதரும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும் தேவனுடைய பரிபூரண சித்தத்துக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டவர்களாகிவிட்டனர் - அவருடைய அன்புக்கு கிறிஸ்துவின் மூலமாய் தெய்வீக அன்பு என்னும் சங்கிலிகளினால் விலங்கிடப்பட்டுள்ளனர். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம்.
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே,
எல்லாவற்றையும் உமக்கே நான் ஒப்புவிக்கிறேன்.
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
நாம் கண்களை மூடி கரங்களையுயர்த்தி, மறுபடியும் அதை தெரிவிப்போம்:
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
என் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே,
எல்லாவற்றையும் உமக்கே நான் ஒப்புவிக்கிறேன்.
எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்
90 "இயேசுவின் நாமத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்" என்னும் பாடலை கூட்டத்துக்கு முடிவாக பாடுவதற்கு முன்பு, நாம் தலைவணங்குவோம். இந்த சகோதரனை நான் ஜெபம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன்… அவருடைய பெயர் மறந்துவிட்டது. இருள் அவள் மேல் வருவதைப் போல் தரிசனம் கண்டதாக சகோதரி சாட்சி சொன்னாள். அவள் சுகமடைந்தாள். ஞாபகம் கொள்ளுங்கள், அவள் திரும்பிப் பார்த்தபோது, அந்த இருள் திரை போய்விட்டது. அவளுடைய விசுவாசமே அதை செய்தது. சகோதரனே, ஜெபம் செய்து கூட்டத்தை முடிப்பீர்களா? தேவனுடைய ஆசீர்வாதங்கள் நம்மேல் தங்க வேண்டுமென்று ஜெபியுங்கள்.