87. நல்லது. இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு பெண்ணாயிருக்க வேண்டும். சகோதரியே, அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது நிச்சயமான அடையாளம் என்று நான் கருதமாட்டேன், இருப்பினும் தேவன் அவரை இரட்சிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால்... “இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று உங்களால் கூற முடியுமா?” என்று கேட்பாயானால், அதைக் குறித்து ஜாக்கிரதையாயிரு (பார்?) ஏனெனில், பார், பரிசுத்த ஆவி உன்னை ஆசீர்வதித்திருக்கக் கூடும், ஏனெனில் நீ கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டாய். பார்?
88. கிறிஸ்து பாவமுள்ள சபைக்காக சிலுவைக்குச் சென்றது போல, நீ பாவமுள்ள உன் கணவருக்காக நிற்பதற்காக இங்கு வந்தாய். பார்? நீ செய்தது ஒரு பெரிய காரியம். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், தேவன் அதை செய்வாரென்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பேன் (பார்) - தேவன் அதை செய்வாரென்று. ஏனெனில் அவர் அந்த ஆசீர்வாதத்தை கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் - அது கூடுதலாக தேவன் உனக்குக் கொடுத்த ஒன்று. அவர் உன்னை ஆசீர்வதித்ததனால், அது உனக்கு நல்லுணர்வை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
89. அது இவ்விதம் உள்ளது. உதாரணமாக, நீ சபையில் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்; அர்த்தம் உரைப்பவர் இல்லாமல், நீ சபையில் அந்நிய பாஷை பேசக் கூடாது. ஆனால் நீ அந்நிய பாஷை பேசி, அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்... ஏன், உபயோகி... நீ... நீ வீட்டிலோ அல்லது வேறெந்த இடத்திலோ ஜெபத்தில் தரித்திருக்கும் போது; அந்நிய பாஷையில் பேசலாம். ஏனெனில், “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் (1 கொரி. 14:4). அது அவனுக்கு ஆறுதலை அளிக்கிறது. பார்? அவனுக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. ஏனெனில் அவன் அங்கு நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, முதலாவதாக என்ன தெரியுமா, பரிசுத்த ஆவி அவன் அல்லது அவள் மேல் வருகிறார், அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகின்றனர். அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுடைய ஆத்துமா மகிழ்ந்து களிகூருகின்றது. பார்?
90. நீ ஏறெடுத்த ஜெபத்துக்கு தேவன் பதிலளிப்பார் என்பதற்கு அது அடையாளமல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நீ சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. அது ஒரு... அவர் உன்னை அறிந்திருக்கிறார்; அவர் உன்னோடு கூட இருக்கிறார் என்பதன் அடையாளம் அதுவே. இதற்கும் பொருந்தும் - பரிசுத்த ஆவியானவர் உனக்கு ஆசீர்வாதத்தை அருளுதல்.
91. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு. அதுவே நான் கடைசி முறையாக அந்நிய பாஷையில் பேசினது என்று நினைக்கிறேன். நான்... இது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்பொழுது நான் இல்லினாய் நகரில் இருந்தேன். சீயோன் பட்டினத்திலுள்ள ஜெப வரிசைக்கு என்னை அழைத்துச் செல்ல பில்லி வந்திருந்தான். என் இருதயத்தில் பாரம் தோன்றினது. எனவே நான் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினேன். நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, பில்லி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான், “பில்லி, என்னால் இப்பொழுது வர முடியாது என்றேன். அவன் வெளியே சென்று உட்கார்ந்து கொண்டான்.
92. நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், என் இருதயம் அதிகமாக பாரமடைந்திருந்தது. அந்த நிலையில் என்னால் சபைக்குச் செல்ல முடியவில்லை. பாருங்கள். வழக்கமாக அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அளித்து நடக்கப் போகும் ஒன்றை எனக்குக் காண்பிப்பார். ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்யவில்லை. அந்த அறையில் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ ஒருவர் கதவண்டையில் நின்று கொண்டு... அது வெளி நாட்டு மொழியைப் போல் தொனித்தது, ஜெர்மன் மொழி, டட்ச் மொழி, அப்படி ஏதோ ஒன்று. அது மிகவும் வேகமாகவும் அர்த்தம் புரியாமலும் இருந்தது. நான் மறுபடியும் கவனித்துக் கேட்டேன். நான், “நல்லது. யாரோ ஒருவர் ஜெர்மன் மொழியில் அந்த விடுதி முதலாளியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் போலும். அவர் அவருக்கு பதில் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.
93. நான் ஜெபம் பண்ணி முடித்து, நாற்காலியில் இப்படி சாய்ந்து கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அவர் பேசிக் கொண்டே போனார். நான், “ஏன் யாரும் அவருக்கு பதில் கொடுக்கவில்லை?” என்று நினைத்துக் கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். “இது விசித்திரமாயுள்ளதே” என்று எண்ணினேன்.
94. கீழே சாலையில் எடை போடும் கருவி ஒன்றிருந்தது. அங்கிருந்த ஒருவன் ஒருவனைப் பார்த்து, “ஓட்டிக் கொண்டு போ என்றும், மற்றொருவனிடம், “ஒட்டிக் கொண்டு எடைக் கருவின் மேலே வா” என்றும் கூச்சலிடும் சத்தம் கேட்டது. நான் திரும்பி அந்தப் பக்கம் பார்த்தேன். எனக்கு ஏதோ ஒரு உணர்ச்சி... பார்க்கப் போனால், நான்தான் அவ்விதம் பேசிக் கொண்டிருந்தேன். அது நான். நான் அமைதியாக இருந்தேன், எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் கட்டுக்கு மீறி பேசிக் கொண்டிருந்தேன், ஆனால் நான் பேசினது ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நான்... என் வாய் அசைந்து கொண்டிருந்தது, நான் ஏதோ ஒருவிதமான மொழியை - பேசிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் அமைதியாக இருந்தேன். சற்று கழிந்து அது நின்று போனது. அது நின்றபோது, ஒ என்னே, எனக்கு கூச்சலிட வேண்டும் போல் தோன்றினது. நான் மிகவும் சந்தோஷமாயிருந்தேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை, பாரம் என்னை விட்டு நீங்கினது.
95. எனவே நான் பில்லியைக் கூப்பிட்டு, சபைக்குச் சென்றேன். நான் சபைக்குச் சென்ற போது... அப்பொழுது திரு. பாக்ஸ்டர் கூட்டம் ஒழுங்கு செய்வதற்கு மேலாளராக பணியாற்றினார். அவர் பாடிக் கொண்டு, காத்துக் கொண்டிருந்தார். நான் அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக அந்த இடத்தை அடைந்தேன். தாமதமாகி விட்டது என்று அவரிடம் கூறினேன்.
நான் அழுது கொண்டிருப்பதை அவர் கண்டார். அவர் என்ன விஷயம்?” என்று கேட்டார்.
96. நான் “ஒன்றுமில்லை” என்றேன். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெண் அரங்கத்தின் பின்வழியாக வந்து பின்னால் உள்ள இருக்கையில் அமரவிருந்தாள். நாங்கள் என்ன நடந்ததென்று அறிந்து கொள்ள அவளிடம் கேட்ட பொழுது, அவள் இரட்டை பட்டினத்திலிருந்து (செயின்ட் பால் அல்லது மினியாபோலிஸ், அந்த இரண்டு பட்டினங்களில் ஏதோ ஒரு பட்டினத்திலிருந்து) சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தாளாம்... அவள் காச நோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர தைரியப்படவில்லை, அவளுடைய சுவாசப் பைகள் மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தது - பசையைப் போலிருந்தது. எனவே ஒரு சில சகோதரர் ஒரு பழைய ஷெவர்லே காரை எடுத்து, அதன் பின் இருக்கையை கழற்றி விட்டு, அந்த இடத்தில் எப்படியோ ஒரு கட்டிலைப் பொருத்தி - அல்லது ஒரு படுக்கையை - அவளை அதில் கிடத்தி, கூட்டத்துக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவள் வரவேண்டுமென்று விரும்பினாள்.
97. மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு விட்டனர். சாலையில் வந்து கொண்டிருந்த போது... ஒரு சிறு குலுக்கல் ஏற்பட்டாலும் அவள் இரத்தம் கக்குவாள் என்று அவர்கள் அவளிடம் கூறியிருந்தனர். அவள் அதே விதமாக இரத்தம் கக்கத் தொடங்கினாள். அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அந்த பரிசுத்தவான்கள் அவளைச் சுற்றிலும் நின்று கொண்டு அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவள் வெறும்... ஒவ்வொரு முறையும் அவள் சுவாசித்த போது, இரத்தம் கொப்பளித்துக் கொண்டு அவள் வாயின் வழியாக இப்படி வெளி வந்தது.
98. அப்பொழுது திடீரென்று அவள் உடனே சுகமடைந்தாள். அவள் குதித்தெழுந்து களிகூர்ந்தவளாய் சபைக்கு வந்தாள். அவள் அங்கு பின்னால் இருந்து கொண்டு, சாட்சி கூறிக் கொண்டிருந்தாள்.
99. “அது எந்த மணி நேரத்தில் நடந்தது?” என்று கேட்டேன். அவள் அதை உரைத்த போது, அதே மணி நேரத்தில் தான் என் மூலமாக அந்த பேச்சு நடந்து கொண்டிருந்தது. நல்லது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீக்காக அங்கு வேண்டுதல் செய்து கொண்டிருந்தார். நான் கூறுவது விளங்குகிறதா?
100. இப்பொழுது, வேதம் அதை உரைக்கிறது. சில நேரங்களில் நாம் வார்த்தைகளை முணுமுணுக்குகிறோம்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அங்கு பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, நாம் புரிந்து கொள்ளாத காரியங்களுக்காக வேண்டுதல் செய்கிறார். பாருங்கள்?
101. அந்த ஸ்திரீ உடனே சுகமடைந்தாள். அவள் நீண்ட காலமாக எங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அவள் பரிபூரண சுகமடைந்தாள், அவள் சுகமடைந்து விட்டாள்.
102. இப்பொழுது பாருங்கள், அவை எங்குள்ளன என்று தேவன் அறிவார். அதைச் செய்ய அவருக்கு ஒரு முறை உண்டு. பாருங்கள்? அதை அவர் தமது சொந்த வழியில் செய்கிறார். அவர் என்ன செய்கிறாரோ அதற்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அந்த நிலையை நீங்கள் அடையும் போது, மூடபக்தி வைராக்கியத்தையும் சத்தியத்தையும் பிரிக்கும் குறுகிய கத்தி முனையில் நிலைத்திருப்பது கடினமான காரியம்.
103. இப்பொழுது, நீங்கள் கவனமாயிராவிடில், பிசாசு உங்களை மூடபக்தி வைராக்கியத்துக்குள் கொண்டு சென்று விடுவான், அப்பொழுது நீங்கள் உங்கள் அனுபவத்தையும் மற்றெல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யும்போது, நீங்கள் திடமான சத்தியத்தில் நிலைத்திருக்க இயலாது. வேதத்தில் கவனமாயிருந்து அதில் நிலைத்திருந்து, சாந்த குணத்தோடும் தாழ்மையோடும் இருங்கள். நீங்கள் அதில் நிலை கொண்டிருந்தால், தேவன் உங்களை பாதையின் வழியாக கல்வாரியை நோக்கி, கொண்டு சென்று கொண்டேயிருப்பார்.
104. சகோதரியே, அது உன்னுடைய விவகாரத்தைப் போன்ற ஒன்று. தேவன் உனக்கு ஆசீர்வாதத்தை அருளினார். நீ உன் விருப்பத்தை அடைவாய் என்பதற்கு அது ஒருக்கால் உறுதியான சாட்சியாக இருக்கக் கூடும். ஆனால் நான் அதன் மேல் மாத்திரம் சார்ந்திருந்து (பாருங்கள்?) “கர்த்தர் என்னிடம் கூறினார் என்று சொல்ல மாட்டேன். எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் எடுத்துரைத்த காரணம், நீ தொடர்ந்து விசுவாசிப்பதற்கு அது உன்னை உற்சாகமூட்டக் கூடும் என்பதனால் தான். என்னவாயினும், தேவன் அங்கு செய்தது - அந்த விதமாக ஆவியை உன்மேல் கொண்டு வந்தது - ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே. அது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது உன் கணவருக்காக நேர்ந்திருக்குமானால், அவர் நிச்சயமாக தேவனுடைய இராஜ்யத்துக்குள் வந்து விடுவார். அதை நான் விசுவாசிக்கிறேன்.