233. நிச்சயமாக, இப்பொழுது நேரடியாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டி, நிச்சயமாக! அதுதான் ஏற்ற வேளையின் செய்தி - கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மற்றும் மேய்ப்பர்களை உடையவளாய் இருக்கிறாள். அது சரியா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அதுதான் கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. ஒரு மகத்தான ஊழியம்-இந்த காலத்திற்குரிய ஊழியம், அது மிகவும் எளிமையானதாக இருக்கும்.
234. இப்பொழுது நினைவுகூருங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் கூட்டத்தில் நான்... இருந்தீர்கள்? நான் எதைக் குறித்து பிரசங்கித்தேன் என்று நினைவிருக்கிறதா? எளிமை. ஓ! அதை மறந்து விட வேண்டாம். அதைக் குறித்து மறுபடியும் எச்சரிக்க ஒரு நிமிஷம் நிறுத்தப்போகிறேன். ஏதாகிலும் ஒரு மகத்தான காரியம் நடக்கப்போவதாக தேவன் முன்னுரைக்கும்போது, மக்கள் தங்கள் ஞானத்தினால், என்ன நடக்கிறதோ அதை இழந்து போகும்வரை, வெகு தூரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் ஒரு காரியத்தை மகத்தானது என்று கூறும்போது, உலகம் அதைக் குறித்து நகைத்து, "ஓரு கூட்டம் அறிவில்லாதவர்கள்” என்றுரைக்கிறது. அது சரி.
மகத்தான உலகமும், மிக மகத்தான சபையும், "சிறுவனே, அது மகிமையானது!” என்று சொல்லும்போது, தேவன் அவர்களைப் பார்த்து, “ஒரு கூட்டம் அறிவில்லாதவர்கள்” என்று கூறுகிறார். ஆகவே, நீங்கள் விழிப்பாய் இருக்கவேண்டும்... அது ஒருவேளை அவ்விதமாகத்தான் இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. சரியாக அதே வழிதான், ஆனால் அந்த வழியில்தான் அது அமைந்திருக்கிறது.
235. கவனியுங்கள்! இங்கே மகத்தான, பரிசுத்த வைதீக சபை ஒன்று இருந்தது, “நமக்கு வார்த்தை தெரியும்; நமக்கு பள்ளிகள் உண்டு; நமக்கு வேதப்பள்ளிகள் உண்டு. நம்மிடம் மெருகேற்றப்பெற்ற மனிதர்கள் உண்டு. நூற்றுக்கணக்கான வருடங்களாக யேகோவாவுக்கு உத்தமமாய் இருந்து வந்திருக்கிறோம். நாம் தான் 'சபை' நாம் தான் ஆலோசனை சங்கம், பரிசேயர்களும், சதுசேயர்களும் மற்றும் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் சபைகளின் ஐக்கியம் நமக்குண்டு. நாம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல. சபையின் ஆலோசனை சங்கமாக நாமெல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே நாம்தான் பெரிய மனிதர்கள். நாம் அந்த வேதவாக்கியங்களை அறிந்துள்ளோம். நதிக்கரையிலே ஆட்டுத்தோல் உடையணிந்து தாடியுடன் நின்றுக்கொண்டிருக்கும் அந்த எளிமையில் உள்ள அறிவில்லாதவனைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவர்கள் அதற்கு செவிசாய்க்கமாட்டார்கள்.
236. ஆனால், வேதாகமம் மல்கியா 4ல்... அல்லது 3-ம் அதிகாரத்தில், “இதோ, நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்” என்று கூறுகிறது. இதற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யோவான்... ஓ, அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா அங்கு நின்றுக்கொண்டு, "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப் பண்ணுங்கள் என்றும். வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று" என்று கூறினான். அது சரி, "ஓ, எல்லா உயர்ந்த இடங்களெல்லாம் தாழ்த்தப்படும். இதைக்குறித்து அநேக மக்கள் பேசினார்கள்.
237. ஓ, “இந்த மனிதன் வரும்போது தன்னுடைய விரலை சுட்டிக்காட்டி கட்டளையிடும்போது, மலைகள் அகன்று போய்விடும், ஓ, பள்ளமான இடங்களெல்லாம் உயர்த்தப்படும். கரடுமுரடான இடங்களெல்லாம் சமமாக்கப்படும். சகோதரனே, இங்கிருக்கும் வயல்களிலெங்கும் தானியத்தை பயிர் செய்யலாம். ஓ, இந்த மனிதன் வரும்போது நாம் மகத்தான காரியங்களை செய்யப்போகிறோம்” என்று அநேகர் கூறினார்கள். பாருங்கள்?
238. தேவன் ஒரு இயந்திரக்கைப்பிடியை சுழற்றி, ஒரு தாழ்வாரத்தை கீழே இறக்கி அதிலிருக்கும் மனிதனைப் பார்த்து, "என்னுடைய மேசியாவின் மகத்தான முன் தூதனே, வெளியே வாரும்” என்று கூப்பிடுவாரென்றும், அதற்குப் பிறகு அவன் போனபிறகு அவர்கள் அதை மறுபடியும் இழுத்து, அவனுடைய ஊழியம் முடிந்தபிறகு மறுபடியும் இயந்திர கைப்பிடியை சுழற்றி அதை கீழே இறக்கி வேதப்பள்ளியின் பக்கத்தில் வைத்துவிட்டு, "நல்லது, என்னுடைய நேசக்குமாரனே, வெளியே வந்து அவர்களுக்கு அறிவியும்” என்று கூறுவார் என்றும் அவர்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? ஓ, என்னே!
239. அவன் வந்தபோது என்னென்ன நடந்தது என்பதைக் கவனித்தீர்களா? “அவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக்காத ஒருவன் இங்கிருக்கிறான் - அவனிடத்தில் ஐக்கியத்தின் அட்டைகூட இல்லை ஓ, அவனிடத்தில் எந்தவிதமான அத்தாட்சிக் கடிதமும் இல்லை. இல்லை. அவனுடைய வாழ்க்கையிலேயே ஒரு நாளாகிலும் பள்ளிக்கூடத்திற்கு சென்றதாக கூறுவதற்கும் ஒருவருமில்லை. அவனுடைய பேச்சைப் பார்த்தால் கூட அவன் பள்ளிக் கூடத்திற்கு போகாதது போலிருக்கிறது. மத சம்பந்தமான வார்த்தைகளைக்கூட அவன் பேசவில்லை. அவன், விரியன் பாம்பு, கோடாரி, வனாந்தரம், மரம் போன்ற வார்த்தைகளைத்தான் பேசினான். அந்த நாளிலோ, அல்லது இந்த நாளிலோ, அல்லது எந்த நாளிலோ இருந்த மதசங்கத்தின் அமைப்புகளுக்குரிய வார்த்தைகளையே அவன் பேசவில்லை.”
240. அவன் ஒரு அநாகரிக மனிதனாகக் காணப்பட்டான். எங்கோ இருந்த ஒரு புதரிலிருந்து வெளியே வந்தான். அவன் சவரம் செய்துக் கொள்ளாதவனும், தன் தலையின்மீது படியாமல் நின்றுக்கொண்டிருக்கும் மயிரை உடையவனாகவும் வந்தான். இரண்டு மாதத்திற்கொரு முறையோ, அல்லது மூன்று மாதத்திற்கொருமுறையோ மாத்திரம் குளித்தவனாக இருந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சரி. இரவில் அவன் “பைஜாமா” போடாதவனாய் இருந்தான். அவன் எந்த விதமான காரிலும் செல்லாதவனாகவும் இருந்தான். அவன் தன் பற்களை 'பிரஷ்ஷினால்' சுத்தம் செய்யாதவனுமாயிருந்தான் - உண்மையில் இல்லை. ஓ, இவன் எப்படிப்பட்ட மனிதனாயிருந்தான்.
241. இதோ அவன் வனாந்தரத்தில் தடியை ஊன்றி நடந்து வந்து, “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும், அவருக்கு பாதையைச் செவ்வைப்படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனின் சத்தமாய் இருக்கிறேன்!” என்று கூறினான்...
242. போதகர்களில் சிலர் அங்கு நின்று கொண்டு, "ஊ! உன்னிடத்தில் இருக்கிறதா... இந்த பெருங்கூட்டத்தில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம், நாங்கள் அதைச் செய்ய முடியாது. நல்லது, உன்னுடைய அடையாளச் சீட்டு எங்கே?” என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தான். அதையே அவன் பிரசங்கித்தான்.
243. அவர்கள், "ஆ, சற்று பொறுங்கள், நாங்கள் பேராயரை (Bishop) கொண்டு வருகிறோம். அவர் அதைக்குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் அங்கே செல்லுகிறோம். அதுதான் சபையின் தலைமைஸ்தலம். இதைச் சபையின் தலைவர்தான் அங்கீகரிக்க வேண்டும். இவன் தேவனிடத்தில் இருந்து வந்திருப்பானானால் இவன் நம்முடைய பேராயரை அங்கீகரிப்பான்,” என்று கூறினார்கள்.
244. அங்கு ஆசனங்களைப்போட்டு மரியாதைக்குரிய பெரியோர்களை உட்கார வைத்திருப்பார்கள்.
245. அவன், “விரியன் பாம்புக்குட்டிகளே, புல்லின்கீழ் இருக்கும் சர்ப்பங்களே” என்று கூறினான். தங்களுடைய காலர் பட்டையை உயர்த்தி போட்டுக் கொண்டிருக்கும் பரிசுத்த பிதாக்களையும் மற்றவர்களையும். “வரும் கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? உங்களுடைய நேரம் சமீபமாய் இருக்கிறது. நீங்கள் இதை சிந்திக்கவில்லையா?...” நீங்கள், "அவன் இதை சேர்ந்தவன் அல்லது அதை சேர்ந்தவன்” என்று கூறலாம். “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: நான் ஆராதிக்கும் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார்” என்றான். ஓ, என்னே!
246. இப்பொழுது, மதத்தலைவர்களைப்போல அவன் பேசாமல் அதற்கு விரோதமாகப் பேசினான். "கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது! ஆகையால் நல்ல கனி கொடாத மரமெதுவோ அது வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்! ஓ, நான் உங்களுக்கு தண்ணீரினால் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறேன். ஆனால் எனக்குப் பின்னால் அவர் வருகிறார்; சந்திரன் இரத்தம் போலாகும் மற்றும்...” ஓ! “அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர் களையையும், கோதுமையையும் தனியே பிரிப்பார்.” ஓ! என்னே ஒரு செய்தி!
247. அவர்கள் “ஊ! இந்த மனிதனா! இவன் என்ன சொல்லுகிறான்? இது - இது - இது என்ன சமயம்? ஓ, படிப்பறியாதவன். நமக்கு அங்கு ஒரு மனிதன் இருக்கின்றார். சகோதரன் ஜோன்ஸ் இருக்கிறார். இந்த நாட்களில் யாராகிலும் எழுப்பப்பட வேண்டுமானால் அது இவராகத்தான் இருக்க முடியும். பேராயர் இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும். பரிசுத்த பிதாவாகிய இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும்” என்று கூறினார்கள். ஓ, என்னே! பாருங்கள்?
தேவன் எளிமையில் மறைந்திருந்து, எளிமையில் கிரியை செய்கிறார். புரிகின்றதா?
248. ஒருநாள் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவன் “ஆமாம், அவர் உங்கள் மத்தியிலே நின்றுக் கொண்டிருக்கிறார்” என்றான். அவன்தான் அந்த முன்னோடி என்பதை அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். அவன், தான் யார் என்பதை அறிந்திருந்தான். ஆகவே தான் அவர்களை அவன் அவ்விதம் அசைத்தான். “பயப்படாதிருங்கள், தொடர்ந்து நன்மையான காரியங்களைச் செய்து முன்னேறுங்கள். இராணுவ வீரர்களாகிய நீங்கள், உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள், தீமை ஏதாகிலும் செய்திருந்தால் நற்சீர் பொருந்துங்கள்...” என்றான்.
249. “நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இவ்விதமான காரியங்களை செய்வதை விட்டுவிடட்டுமா? நாங்கள் இதை நிறுத்தி விடட்டுமா?”
250 அவன், “நீங்கள் இருக்கிறவண்ணமாகவே முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறுங்கள்; நீங்கள் உருளைக் கிழங்கை பயிர் செய்தால், தொடர்ந்து பயிர் செய்யுங்கள். இராணுவவீரர்களே, கொடுமை செய்யாதீர்கள், நீங்கள் எவ்விதம் இருக்கிறீர்களோ அவ்விதமாகவே தொடர்ந்து செல்லுங்கள். உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”
“ரபீ, நாங்கள் என்ன செய்யவேண்டும்?”
251. “நீங்கள் இருக்கிற வண்ணமாகவே முன்னேறி செல்லுங்கள், நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியிலே இருக்கிறார்.” அவன் தன்னுடைய செய்தியின் நேரத்தை அறிந்திருந்தான். அவன் அந்த நபரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தான். அவர் அங்கிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். “ஒருவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்; நீங்கள் அவரை அறியவில்லை. நடந்துக் கொண்டிருக்கும் காரியங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்றான். “ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது” என்றான். "அவர் இங்கிருப்பார், நான் அவரை அறிந்துக் கொள்ளுவேன்.”
252. கடைசியாக ஒருநாள் அவன், "இதோ அவர் இங்கிருக்கிறார். இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” என்றான். “என்னுடைய நேரம் இப்பொழுது வந்திருக்கிறது. நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் இப்பொழுது சிறுக வேண்டும்; நான் இந்தக் காட்சியை விட்டுச் செல்ல வேண்டும். இங்கிருந்து அவர் தொடர்ந்துகொண்டு செல்லுவார்.”
"இப்பொழுது ஆயிர வருட அரசாட்சி தொடங்க வேண்டியதாய் இருக்கிறது, காலம் சமீபமாய் இருக்கிறது” என்றான். அவர் வரும் போது...
253. "அவர் எல்லோரையும் அசைத்து, கோதுமையை பதரிலிருந்து பிரித்தெடுப்பார். அவர் பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பார். அவர் தம்முடைய களத்தை நன்றாக விளக்குவார். தூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது” என்று யோவான் கூறினான். ஆனால் அவர் யார்? - அந்தச் சிறிய...
254. இப்பொழுது, அவர்கள் இவ்விதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தனர். "ஓ! மனிதனே! அவர் வரும்போது ஒருமைல் நீளத்திற்கும் மேலான ஈட்டியை அவர் பெற்றிருப்பார். அவர் பாலஸ்தீனாவில் நின்று கொண்டு, தம்முடைய வெண்மையான மேகங்களில் ஒன்றின்மீது நின்றுக் கொண்டு, இந்த எல்லா ரோமர்களையும் பொறுக்கியெடுத்து அவர்களை நரகத்தில் போட்டு விடுவார். - எல்லோரையும் அழிக்கும் வரை இவ்விதமாகச் செய்வார்.” இவ்விதமாகத்தான் அவர்கள் எல்லோரும் மேசியாவின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவ்விதமான வேளையில்தான், ஒரு சிறு ஆட்டுக்குட்டி, சாந்தமும், மனத்தாழ்மையுமாய் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தள்ளிவிட்டுக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது.
255. அவர் அவ்வளவு எளிமையாக வந்திருந்ததால் யோவானுக்கும் சந்தேகமுண்டாகி, “நீங்கள் அவரிடத்தில் போய் வருகிறவர் நீர் தானா?” என்று கேட்கும்படி அனுப்பினான். அவ்வளவாக எளிமையில் வந்திருந்ததால் அந்த தீர்க்கதரிசியும்” வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரவேண்டுமா?” என்று கேட்கும்படி ஆட்களை அனுப்பியிருந்தான்.
256. இப்பொழுது அவர் மத்தேயு 11ல் அந்தச் சீஷர்களுக்கு படிக்கும்படியாக ஒரு புஸ்தகத்தை அளிக்கவில்லை. யோவானின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து கேட்டபொழுது...
யோவான் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது “அவனுடைய கழுகின் கண்கள் திரையிடப்பட்டுவிட்டிருந்தன” என்று பெம்பர் கூறினார் என்று நினைக்கிறேன். அவன் ஆகாயத்தில் இருந்தான். ஆனால் அவனுடைய தீர்க்கதரிசனம் முடிந்தவுடன் அவன் மறுபடியும் பூமியில் விழுந்து கிடந்தான். ஏனென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். நீங்கள் பாருங்கள், இப்பொழுது அவனுடைய பெரிய செட்டைகள் அவனுக்கு அவசியப்படவில்லை. ஆகவே, அவைகளை அங்கே மடக்கி வைத்திருந்தான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவன் உயர பறந்திருந்தான்.
257. நான் ஒன்றை சொல்லட்டும். தேவன் அவனை உபயோகப்படுத்தினார். இயேசு அதை அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார். பாருங்கள்? ஆகவே, அவர்-அவர் அங்கே கூறினார், அவர் கூறினார்...
அவன் சிறையில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்துக்கொள்ள அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்படவில்லை. “இப்பொழுது ஒரு நிமிஷம் பொறுத்திருங்கள். நான் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன். நீங்கள் அதைக் கொண்டுபோய் அவன் சிறையில் இருக்கும்போது என்னிமித்தமாக எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள யோவானிடம் கூறி இதை அவனிடம் கொடுங்கள்” என்று அவர் கூறினாரா? பாருங்கள்? இல்லை, அவர் ஒருபோதும் அவ்விதம் கூறவில்லை.
258. “அவன் வெளியே வருவதற்கு முன் வேத பாண்டியத்தில் தன்னுடைய டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று இவ்விதமாக அவர் கூறவில்லை. பாருங்கள்? வேண்டுமானால் அவனும் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு ஒரு புறக்கணிக்கிறவனாக இருந்திருக்கக்கூடும்.
யோவான் ஒரு உத்தமனாக இருந்து ஒரு கேள்வியைக் கேட்டான்.
259. “கூட்டம் முடியும் வரை காத்திருந்து, என்ன நடந்ததோ அதை யோவானுக்குக் காண்பியுங்கள். அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான். என்ன நடக்கின்றது என்று நீங்கள் அவனுக்குக் கூறினால், அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான்” என்று அவர் கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 'அவனிடம் போய்… அவனிடம் கூறுங்கள். அவனிடம் இது... அவன் சிறையில் இருக்கிறான், அவன் இங்கிருக்க முடியவில்லை, நீங்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள், என்ன நடந்ததோ அதைக் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் போய்ச் சொல்லுங்கள்,” என்றார்.
அப்பொழுது அந்த சீஷர்கள் “நல்லது, ஆண்டவரே” என்று கூறினார்கள்.
260. அவர்கள் மலையைக் கடந்து சென்றார்கள். பாறையின் மீது இயேசு உட்கார்ந்துக்கொண்டு அவர்கள் கடந்து செல்லும் வரைக்கும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் - அவர்கள் மலை மீது ஏறி செல்லும் வரைக்கும்.
261. அவர் திரும்பி, சபையாரைப் பார்த்து, "யோவான் காலத்தில் யாரைப் பார்க்கப் போனீர்கள்? பாருங்கள்? எதைப் பார்க்கப் போனீர்கள்? தன்னுடைய 'காலர் பட்டையை அணிந்து' மெல்லிய வஸ்திரத்தை அணிந்திருக்கும் நன்றாகப் படித்த, மெருகேற்றப்பட்ட மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? அவ்விதமான மனிதனையா நீங்கள் காணச்சென்றீர்கள்?” “இல்லை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் குழந்தையை முத்தமிட்டு, அரசனின் அரண்மனையில் வசிக்கிறார்கள். யோவான் அவ்வண்ணம் இருக்கவில்லை.”
262. "அப்படியானால் நீங்கள் ஏன் சென்றீர்கள்? தன்னுடைய ஊழியத்தை ஒரு ஸ்தாபனத்தோடு இணைத்துக்கொண்டு, எல்லாரோடும் கைகளைக் குலுக்கிக் கொண்டிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? ஒருத்துவக்காரர் வேண்டாம் என்று சொல்லும்போது திரித்துவக்காரரிடம் ஐக்கியம் கொள்ளுவதற்காக அவர்களிடம் செல்வதும்; திரித்துவக்காரர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது 'தேவனுடைய சபை' என்று அழைக்கப்படும் ஸ்தாபனத்திற்கோ அல்லது வேறெங்கேயோ செல்லுகிறார்கள். காற்றினால் அசையும் நாணலை போலிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்?” என்று கேட்டார். "ஓ, இல்லை! - யோவான் அவ்விதமாக இல்லை.”
263. "அப்படியென்றால் எதைப் பார்க்கச் சென்றீர்கள்? - ஒரு தீர்க்கதரிசியை” என்று அவர் கூறினார் "அதுதான் சரி என்று கூறுகிறேன், ஆனாலும் நீங்கள் அறிந்திராத ஒன்றைச் சொல்லப் போகிறேன், அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவனாக இருந்தான். அவன் மேலானவன்...” என்று அவர் கூறினார். “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வேதாகமத்தில் மல்கியா 3ல் இதோ எனக்கு முன்பாக நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று சொல்லப்பட்டிருப்பவன் இவனே” என்றார். பாருங்கள்?
264. அவர்கள் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை. சீஷர்களும் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை, பாருங்கள். அது சரி, ஓ! எளிமை- தாழ்மையுடன் இருங்கள். தேவன், மகத்துவமானதொன்றை வாக்குரைக்கும் போது - அது அவருடைய பார்வையில் மகத்துவமானதாகக் காணப்படுகிறது.
265. இப்பொழுது, நீங்கள் எப்பொழுதும் இதை மனதில் வைத்திருக்க விரும்பினால், நான் விரும்புகிறேன். இதை மனதில் வையுங்கள்! இது நடக்கும்போது, அப்பொழுது நீங்கள் இதை மாற்றிக்கொள்ளலாம். வசந்த காலத்தில் பூக்கும் சிறிய மலர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு சிறிய புல்லை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, இப்பொழுது இதைப் பிடித்துக்கொண்டு "ஏதோ எளிமையானதொன்று இதைச் செய்திருக்கிறது; சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பி இருக்கும் அந்த மூளை இந்தச் சிறிய புல்லை செய்யமுடியுமா என்பதைக் காண விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள். அதை நீங்கள் எப்பொழுதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அதன் மீது உறுதியாய் சார்ந்திருக்கலாம்; நீங்கள் அதை எப்பொழுதும் பெற்றிருக்கலாம், பாருங்கள்? புல்லின் இலை தன்னில் ஜீவன் உள்ளதாய் இருக்கிறது. அது மிகவும் எளிமையானதாகவும், தாழ்மையானதாகவும் இருக்கிறது...
266. ஒரு மனிதன் பெரிய மனிதனாக இருப்பது சரிதான்; ஆனால் அவன் தன்னை எளிமையுள்ளவனாக்கிக் கொள்வதற்கு அவ்வளவு பெரியவனாக இருப்பானென்றால், அவன் தேவனைக் காண்பான். ஆனால் அவன் எளியவனாகவில்லையென்றால் அவன் அவரைக் காணவே முடியாது. நீங்கள் எளிமையுள்ளவர்களாக வேண்டும். இப்பொழுது...