63. இப்பொழுது, என் விலையேறப் பெற்ற நண்பரே... இப்பொழுது இந்த சகோதரன் கையொப்பமிட்டிருக்கிறார். இவரை எனக்குத் தெரியாது, ஆனால் அவர் கையொப்பமிட்டிருக்கிறார். நான் பெயர்களை அறிவிக்கப்போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை; பெயர்களை அறிவித்தால், மற்றவர்கள் அவர்களிடம் சென்று, "நல்லது. நான் இதில் அதில் உங்களுடன் இணங்க முடியாது" என்று கூறுவார்கள். பாருங்கள்? நான் எந்த ஒரு பெயரையும் அறிவிக்கமாட்டேன். பெரும்பாலான கேள்விகளில் கையொப்பமிடப்பட்டுள்ளது, ஆனால் அது நான் யாரென்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே. பாருங்கள்? இவைகளை நான் வைத்துக் கொள்ள, இங்கு வைத்து விடுகிறேன். சில கேள்விகள் நீல நிறத் தில் எழுதப்பட்டுள்ளன, சில கேள்விகள் தட்டெழுத்தில் உள்ளன, வெவ்வேறு விதங்களில்
64. இங்கு முதலாவது கேள்வி: "நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறீர்கள்?" அதை தொடர்ந்து, "தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமல் பாவங்கள் போக்கப்படக் கூடுமா, ஏனெனில் கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது, அவர்கள் அப்பொழுது ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லையே" பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் தன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும், அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வரைக்கும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்தது; ஏனெனில் வசனம் என்ன கூறுகிறதென்றால் (நான் உறுதியாக அறிந்து கொள்வதற்காக இந்த வசனங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன்). அது அப்படித்தான்... அனனியா பவுலிடம் "நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படும்" என்றான்,
65. அதன் பிறகு, "பரிசுத்த ஆவியின் அபிஷேகம்... ஒருவன் அதைப் பெற்றுக் கொண்டு, தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா?"
66. "ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த போதிலும் பரலோகத்துக்கு செல்வதை நிச்சயப்படுத்திக் கொள்ள தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?" இப்பொழுது, நான் நினைக்கிறேன்... இப்பொழுது, இந்த சகோதரனை எனக்குத் தெரியாது, இது மிகவும் நல்ல, புத்திசாலித்தனமான கேள்வி. இதை நாம் விரிவாகக் காண வேண்டும், ஏனெனில் இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பாருங்கள்?
67. இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், இந்த சகோதரன் இது தான் உண்மை என்று என்னிடம் கூறுகிறார். அல்லது அது உண்மையென்று என்னைக் கூற வைக்கிறார். (அவர் ஒருக்கால் அவ்விதம் விசுவாசிக்கக் கூடும், எனக்குத் தெரியாது). இது வார்த்தையின் பேரில் உள்ள உண்மையான விசுவாசத்துக்கு சிறிது முரணாக உள்ளதென்று நினைக்கிறேன். நான்... இந்த சகோதரன் அவ்விதம் கூறுவது போல் தோன்றுகிறது - இப்பொழுது, அதனால் பரவாயில்லை, சதோதரனே; நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும்; அது அருமையானது. இது ஒரு நல்ல கேள்வி என்று எண்ணுகிறேன். இதை நீங்கள் எழுதிக் கேட்டதற்காக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்பொழுது, பாருங்கள்? மறு ஜென்மத்துக்காக (regeneration) தண்ணீர் ஞானஸ்நானம் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை (பாருங்கள்?), ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்யும் போது, அது இரத்தத்தை அகற்றி விடுகிறது. பாருங்கள்? மறு ஜென்மம் நடந்துள்ளது என்பதைக் காண்பிக்கவே நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். பாருங்கள்? அது மறுஜென்மம் அடைந்ததற்கு வெளிப்படையான அடையாளம். முழுகாரியமே முன் குறித்தலை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பாருங்கள்? ஆனால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று நமக்குத் தெரியாது; எனவே நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம்.
68. மறு ஜென்மம் அடைதல் என்னும் விஷயத்தில், எனக்கு ஒருத்துவ சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டு. இந்த கேள்விகளின் ஒலி நாடாவை கேட்கும் ஒருத்துவ சகோதரரே, இது உங்கள் அலுவலகத்திலோ, அல்லது உங்கள் வீட்டிலோ, அல்லது ஒருத்துவ சகோதரரின் மத்தியிலோ கிடைக்க நேரிட்டால், என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்விஷயத்தில் நாம் கருத்து வேற்றுமை கொண்டுள்ளோம்.
69, எனக்கும் என் மனைவிக்குமிடையே கருத்து வேற்றுமை உண்டு; நிச்சயமாக எங்களுக்கு உண்டு. அவளை நேசிப்பதாக நான் அவளிடம் கூறினால், அவள் அதை நம்ப மாட்டேன் என்கிறாள். எங்களுக்கிடையே நிச்சயம் கருத்து வேற்றுமை காணப்படுகிறது, ஆனால் நாங்கள் நன்றாகத்தான் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
70. இப்பொழுது கவனியுங்கள், அவளை நான் நேசிக்கிறேன் என்பதற்கு நான் போதுமான அறிகுறிகளை அவளுக்கு காண்பிக்காமல் இருக்கக் கூடும்... நான் வெளியே சென்று பிரசங்கித்து, பின்பு வீடு திரும்பி, தூண்டிலை எடுத்துக் கொண்டு, மீன் பிடிக்கச் சென்று விடுகிறேன். பாருங்கள்? ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில் அவளை நான் நேசிக்கிறேன்; அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவ்வளவுதான்.
71. இப்பொழுது, இதை கவனிப்பீர்களானால்... நமக்கு கருத்து வேற்றுமை இருக்குமானால், அதனால் பரவாயில்லை. ஆனால் பாருங்கள். தண்ணீர் பாவங்களைப் போக்குவதில்லை; அது நல் மனச்சாட்சியை வெளிப்படுத்தும் ஒன்றாயுள்ளது.
72. இப்பொழுது, நான் நினைக்கிறேன், பவுல் அங்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதன் காரணம் என்னவெனில், வேதத்தின்படி, நாம் அதிகாரப்பூர்வமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த சம்பவத்துக்கு உங்களைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்; கள்ளன் சிலுவையில்தொங்கின போது... அவன் ஞானஸ்நானம் பெறாமலேயே மரித்தான், இருப்பினும் இயேசு அவனை அந்த நாளில் பரதீசில் சந்திப்பார் என்னும் வாக்குத்தத்தத்தை அவன் பெற்றுக் கொண்டான் - இழக்கப் பட்டோரின் இடத்தில் அல்ல! ஏனெனில் முதன் முறையாக அவனுக்கு அந்த தருணம் அளிக்கப்பட்டது.
73. கொர்நேலியுவின் வீட்டில் இருந்தவர்கள் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டபோது, அவர்களுடைய இருதயங்கள் அதே நிலையில் இருந்தன என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை உயிர்ப்பித்தார். அது அவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. ஆகையால் தான் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையில் பேசவும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் செய்கிறார். ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ள ஜனங்களின் இருதயங்களில் வார்த்தை விழுந்தது - அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் கண்ட பிறகு.
74. அது தான் இன்றைக்கு நாம் வாழும் இந்த நேரத்தில் எனக்கு புதிராக உள்ளது. அங்கு கூடியிருந்த ரோமர்களும் கிரேக்கர்களும், தரிசனம் நிச்சயமாக நிறைவேறினதை அவர்கள் கண்ட பிறகு, பரிசுத்த ஆவி அவர்களுடைய இருதயங்களில் உணர்ச்சியூட்டி, பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தார். பாருங்கள்?
75. உதாரணமாக... பாருங்கள், கொர்நேலியுவிடம், "சீமோனை அழைப்பி" என்று கூறப்பட்டது. அவன் நூற்றுக்கு அதிபதி. அவன் நூறு பேர்களுக்கு மேல் அதிகாரம் வகித்தான். அவன் ரோம் நூற்றுக்கதிபதி. அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது ஒரு தரிசனத்தைக் கண்டான். ஒரு தேவதூதன் அவனிடத்தில் வந்தான். அவன் ஒரு நல்ல மனிதன். அந்த தூதன் அவனிடம், "நீ யோப்பா பட்டினத்துக்குப் போ. அங்கே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்பவனிடத்தில் சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒருவன் தங்கியிருக்கிறான். அவன் மேல் வீட்டில்... அவனை அங்கு காண்பாய். அவன் வந்து வார்த்தையை உனக்குச் சொல்லுவான்" என்றான்.
76. நல்லது. அந்த தரிசனம் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அவன் எண்ணினான். "நான் உறங்கிய நிலையில் இருந்திருக்க முடியாது. நான் அந்த தேவதூதனை நேருக்கு நேராக கண்டேன்" என்று எண்ணினான். எனவே அவன் மிகவும் விசுவாசமுள்ள தனது போர்ச்சேவகரில் சிலரை அங்கு அனுப்பினான்.
77. அங்கே தேவன் அந்த அப்போஸ்தலனை வரிசையின் மறுபக்கத்தில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் "எழுந்திரு" என்றார். அவன் சொன்னான்... அவன் மேல் வீட்டில், இருந்து கொண்டு திருமதி பேதுரு இரவு உணவு ஆயத்தம் பண்ணுவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு மேல் வீட்டில் இருந்த போது... அவன் வனாந்தர வழியாக ஒருக்கால் நடந்து வந்த காரணத்தால் அந்த அப்போஸ்தலனுக்கு மிகவும் பசித்தது. அவன் இரவு உணவுக்கு சற்று முன்பு மேல் வீட்டில் படுத்திருப்பது வழக்கம். இப்பொழுதும் அவ்விதம் செய்வது வழக்கமாயுள்ளது. அவர்கள் ஏணியின் மேலேறி கூரைக்குச் சென்று குளிர்ச்சியான மாலை வேளையில் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.
78. இந்த அப்போஸ்தலன் உறங்கி விட்டான். அவன் உறங்கிக் கொண்டிருந்த போது, உறக்கத்தையும் கடந்து ஞானதிருஷ்டியடைந்தான். அப்பொழுது அசுத்தமான ஜீவன்கள் நிறைந்த ஒரு துப்பட்டி இறங்கி வருகிறதைக் கண்டான். அவன் "எழுந்திரு, அடித்துப் புசி" என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டான்.
அவன், "அப்படியல்ல, ஆண்டவரே, அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை" என்றான்.
79. இப்பொழுது, பாருங்கள், அங்கு ஒரு தரிசனம் உண்டானது. இப்பொழுது, கவனியுங்கள்! அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். பேதுரு வேட்டை பயணம் மேற்கொண்டு, அவன் முன்பு புசித்திராத ஏதோ ஒரு வகை மிருகத்தைக் கண்டு, அவன் அதை புசிக்க முயற்சி செய்வது போல் அது தோன்றினது. அவன், "அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை" என்றான்.
80. அவரோ, "நான் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்றார். அவர், "எழுந்திரு, மூன்று பேர் உனக்காக வாசலில் காத்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் போ" என்றார். அதே நேரத்தில் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர் (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி).
81. இப்பொழுது. பார்த்தீர்களா? விசுவாசமுள்ள அந்த போர்ச்சேவகர் இந்த மனிதனை, அந்த தரிசனத்தின்படியேகண்டபோது... அவர்கள் தேவன் தரிசனத்தில் உரைத்த அதே மனிதனுடன் திரும்பி வருகின்றனர், முன் பின் தெரியாதவன், ஒரு சிறு. அதிகம் அறிந்திராத, செம்படவன். ஆனால் அந்த சிறு கூட்டத்திற்கோ, இவனைக் கண்டு பிடித்தது மிகவும் முக்கியமான செயலாக இருந்தது. அவன் தரிசனத்தில் கண்ட அதே வீட்டுக்கு வருகிறான். கொரிநேலியு எல்லா ஜனங்களையும் வரவழைத்து அங்கு கூட்டியிருந்தான். பேதுரு, "நான் கண்ட அதே விதமாக உள்ளதே" என்றான். பின்பு பேதுரு எழுந்து நின்று, அவர்கள் எவ்விதம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்பதைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கினான். அவன் பேசிக் கொண்டிருக்கையில்...! அவர்கள் ஒரு தரிசனம் கிரமமாகவும் பரிபூரணமாகவும் நிறை வேறுகிறதைக் கண்டனர். ஒரு கூட்டம் புறஜாதி மக்கள் ஒரு தரிசனம் நிறைவேறுகிதைக் கண்டு, அவர்கள் எவ்விதம் ஜீவனைப் பெற வேண்டும் என்னும் சத்திய வசனத்தைக் கேட்டனர். அப்பொழுது அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.
82. அது இக்கூடாரத்துக்கு இக்காலை வேளையில் என்ன செய்ய வேண்டும்! வியாதியஸ்தர், அவதியுறுவோர், குருடர், செவிடர், ஊமையர் , பாவி எல்லோருமே... பல்லாயிரக் கணக்கான காரியங்களில், ஒரு முறையாவது ஒரு அணு கூட தவறினதில்லை என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! அது நமது இருதயங்களை அனல் மூட்ட வேண்டும்!
83. இப்பொழுது. இப்பொழுது, அவன் இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது பேதுரு, "நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு நாம் தண்ணீரை விலக்கலாமா? அவர்களுடைய பாவங்கள் ஏற்கனவே போய் விட்டன என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையெனில், பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்திருக்க மாட்டார்; அது முன்குறிக்கப்பட்ட ஒரு பாண்டமாய் இல்லாமல் போயிருந்தால், அவர் உள்ளே வந்திருக்கவே மாட்டார்' என்றான். அவர்கள் பின்தொடருவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருந்தான்...
84. நான் நினைக்கிறேன், பவுல் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டிய காரணம் என்னவெனில், அவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். அது உண்மை. அவன் - தேவன் அறிந்திருந்தார். ஏனெனில் அவர், "நான் அவனைத் தெரிந்து கொண்டேன்" என்று அனனியாவிடம் கூறினார். சவுல் ஒரு அறையில், கறுப்படைந்த முகத்துடனும், இருளடைந்த கண்களுடனும், அவன் மேல் முழுவதும் தூசி படிந்தவனாய் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டபோது; அவன் போகும் வழியில் அவனுக்கு பிரத்தியட்சமான அக்கினி ஸ்தம்பத்தினால் அவன் பார்வையிழந்தான், அவர், "அவன் புறஜாதிகளுக்கென்று நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்" என்றார். மூன்று நாட்கள் கழித்து தமஸ்கு நதியில் அனனியா அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவனுடைய பாவங்கள் ஏற்கனவே போக்கப்பட்டன என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் உலகத்துக்கு காண்பிக்க அவன் இதை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆகையால் தான் நாமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன், முன் குறிக்கப்பட்ட வித்து இதை கண்டு கொள்ளும், அவர்கள் மாத்திரமே இதை கண்டு கொள்வார்கள்.
85. இப்பொழுது, திரித்துவ விசுவாசத்தில் உள்ள சகோதரரே, உங்களை நான் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், என் அருமை சகோதரனே, நான் கேள்விகளுக்குத் தான் பதில் உரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உண்மையான அபிப்பிராயத்தை மாத்திரமே அறிவிக்கிறேன். இந்த ஒலிநாடா என்றாவது ஒரு நாளில் ஆப்பிரிக்காவை அடையக் கூடும். அவருடைய வருகையின் நிழல்களில் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் எல்லோருமே அதை விசுவாசிக்கிறோம்.
எனக்கு தென் ஆப்பிரிக்காவில் பல விலையுயர்ந்த நண்பர்கள் உள்ளனர் - டூப்ளெஸில், ஷோமான்ஸ், ஏகர் போன்றவர். அருமையான சகோதரர்கள். ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மற்றெல்லாரை விட சிறப்பு ஸ்தானம் வகிப்பவர் ஒருவர் எப்பொழுதும் உண்டு. அவர்கள் எல்லோரையும் நான் இந்த சகோதரனைப் போலவே அருமையாய் நேசிக்கிறேன். ஆனால் சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் என் வாழ்க்கையில் எப்பொழுதுமே சிறப்பான ஒரு ஸ்தானம் வகித்து வருகின்றனர். ஏனென்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அங்கு என் நெருங்கிய நண்பர். ஜஸ்டிஸ் டூப்ளெஸிஸ், இன்னும் பல அருமையான ஆப்ரிக்கான்ஸ் சகோதரரும் சகோதரிகளும் உள்ளனர்.
86. நல்லது. சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் எனக்கு ஏன் சிறப்பாக உள்ளனர்? அவர் வேட்டையாடுபவர் என்னும் காரணத்தினாலா? இல்லை! ஏனெனில் எனக்கு அங்கே பல அருமையான வேட்டைக்கார நண்பர் உள்ளனர். அவர் ஏன் சிறப்பாக இருக்கிறார்? ஏன்? இவையனைத்துக்கும் பின்னால் உள்ள இரகசியம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்குமானால்! எனக்குத் தெரிந்த எல்லா இரகசியங்களையும் நான் ஜனங்களிடம் கூறுவதில்லை. கர்த்தர் சிட்னி ஜாக்சனிடம் இங்கு வரும்படியாக கூறின அதே நேரத்தில் "தென் ஆப்பிரிக்காவில் சிட்னி ஜாக்சனிடம் தொடர்பு கொள்" என்று என்னிடம் ஏன் கூற வேண்டும்? சென்ற ஞாயிறன்று அவரும் அவருடைய மனைவியும், நிழலின் நேரத்தில், இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். பாருங்கள், அந்த நோக்கத்துக்கென்று முன் குறிக்கப்படுதல். பாருங்கள்?
87. நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதனால் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். உள்ளில் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதே தண்ணீர் ஞானஸ்நானம். தண்ணீருக்கு எந்த குணமும் இல்லை; அது ஒரு அடையாளம் மட்டுமே. நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன் என்றால்...
88. இப்பொழுது, அநேகர் உள்ளனர் (இதை அந்த சகோதரனுக்கு தெளிவாக்க விரும்புகிறேன்)... இரட்சிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் அநேகர் உள்ளனர்; அநேகர் இயேசுவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்; அநேகர் அந்நிய பாஷையில் பேசி, பரிசுத்த ஆவியின் எல்லாவிதமான அடையாளங்களும் பெற்று. அதே சமயத்தில் இரட்சிக்கப்படாமல் உள்ளனர். அது உண்மை. "அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து, 'கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா?' - பிரசங்கி - 'உமது நாமத்தினாலே நான் பிசாசுகளைத் துரத்தி, அநேக அற்புதங்களைச் செய்தேன் அல்லவா?' என்பார்கள். அவர், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே. என்னை விட்டு அகன்று போங்கள்' என்பேன்" (மத். 7:22-23). பாருங்கள்? எனவே இக்காரியங்கள் அனைத்தும், இருப்பினும் அது - அது - அது தேவன்; அது அவருடைய கரங்களில் உள்ளது. ஆனால் அதை நான் காணும் போது...
89. நீங்கள், "நல்லது. அப்படியானால் மறுபடியும் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ளும்படி நீங்கள் ஏன் ஜனங்களை அழைக்கிறீர்கள்?" எனலாம். ஏனெனில் நான் தொடக்கத்தில் இருந்த மாதிரியைப் பின்பற்றுகிறேன். நாம் அந்த கட்டிடத்தின் வரை படத்தை இழந்து போகக் கூடாது.
90. இப்பொழுது நாம் அப்போஸ்தலனாகிய பவுலை எடுத்துக் கொள்வோம். அவன் சில சீஷர்களை, அற்புதமான ஜனங்களைக் கண்டான். அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்று நான் நம்புகிறேன், இருப்பினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை, அவர்கள் வேறு ஞானஸ்நானம் பெற்றிருந்தனர் (அப். 19ல்) பவுல் எபேசுவின் மேல் கரை வழியாக சென்றபோது, சில சீஷர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், "நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?" என்று கேட்டான்.
அவர்கள், "எங்களுக்கு பரிசுத்த ஆவியைக் குறித்து தெரியாது, பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை" என்றார்கள்.
அவன், "அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" என்று கேட்டான்.
அவர்கள், "நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் தான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்" என்றார்கள். அது மிகவும் நல்ல ஒரு ஞானஸ்நானமே.
91. இந்த கண்டிப்பான அப்போஸ்தலனைக் கவனியுங்கள். அவன், "யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை தான் கொடுத்தான்" என்றான். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் அல்ல, ஏனெனில் பலியானது அப்பொழுது கொல்லப்படவில்லை, அதற்கு ஏற்ற ஞானஸ்நானம். அதைக் கேட்ட போது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்.
92. இப்பொழுது, இது என்ன செய்தது? ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள் வேதவாக்கிய சத்தியத்தைக் கண்டவுடனே, அவர்கள் சத்தியத்துக்குள் நடந்து விசுவாசிக்கேற்ற பலனைப்பெற்றுக் கொண்டனர் என்பதை இது காண்பிக்கிறது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அவர்களுக்கு ஏற்கனவே மிகுந்த களிப்பும், சத்தமிடுதலும், தேவனைத் துதித்தலும் இருந்த பிறகு இதைச் செய்தனர்.
93. வேதத்திலே, அவர்களுக்கு அங்கே ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி இருந்தான், அவனும் ஞானஸ்நானம் பெற்றிருந்தான். அவன் வேதவாக்கியங்களைக் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டு வந்தான். ஜனங்களுக்கு மிகுந்த களிப்புஉண்டாயிருந்தது. அவர்கள் அதைக் குறித்து மிகவும் களிப்புறறிருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லை. அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. பவுல் கலா. 1:8ல் "நான் உங்களுக்குப் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தை யல்லாமல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக் கடவன்" என்கிறான். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை.
94. எனவே, இக்காரியங்களை அறிந்தவர்களாய்... இதை நீங்கள் ஒருக்கால் அறியாமலிருக்கலாம், என் சகோதரரே. ஆனால் இவைகளை அறிந்திருக்கும்போது. முதலாம் அஸ்திபாரத்தின் திட்டத்தை நிறைவேற்ற நான் தேவனுக்கு கடமைப்பட்டவனாயிருக்ககிறேன். ஏனெனில் போடப்பட்ட அஸ்திபாரமேயல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. அது தான் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரம். தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். அப்போஸ்தலர் அதை நிறைவேற்றினர். கட்டிடம் முடிவு பெறும் வரைக்கும் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்.
95. இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், ஒரு மனிதன் தன் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், அவன் இரட்சிக்கப்படுகிறான் - அவனுடைய இருதயத்திலிருந்து, வெளிப்புறமான மனச்சாட்சியிலிருந்து அல்ல.
96. பாருங்கள், நீங்கள் இரட்டை தன்மையுள்ளோர் - மூன்றை ஒன்றில் அடக்கியிருக்கிறீர்கள் - ஆத்துமா, ஆவி, சரீரம். நான் நம்புவது என்னவெனில் உங்கள் வெளிப்புறமான புலன்கள் -உங்கள் ஆத்துமா - உங்கள் ஆத்துமா அல்ல, உங்கள் வெளிப்புற மனச்சாட்சி, உங்கள் புலன்கள்... வேறு விதமாகக் கூறினால், நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஐம்புலன்களினால் இயக்கப்படுகிறீர்கள்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உங்கள் பூமிக்குரிய வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன, பரலோக வீட்டுடன் தொடர்பு கொள்ள அவை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. மானிட சரீரத்தில் உண்மையில் ஆறு புலன்கள் உள்ளன, ஏனெனில் அவன் வேதத்தில் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான். அவன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான் - ஒரு மனிதன் அவ்வாறு இருக்கிறான். அவனுக்கு பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல், விசுவாசம் என்பவை உள்ளன. அவனுடைய விசுவாசமே அவன் போய் சேர வேண்டிய இடத்தை நிர்ணயிக்கிறது, அவன் எதை நோக்கிச் செல்கிறான் என்பதை.
97. விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் ருசிக்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின், கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசத்தினால், அவன் வார்த்தையை. கிரகித்துக் கொள்ளும் போது, அது அவனை ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்று (பாருங்கள்?) அதை மிகவும் உண்மையுள்ள ஒன்றாக அவனுக்குச் செய்து, அது அவன் கையில் இருக்கும் ஒன்றைப் போல் செய்து விடுகிறது. அது நிறைவேறும் என்று அவன் அறிந்து கொள்கிறான்.
98. இப்பொழுது. - தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்த இந்த கேள்விக்கும் அதே காரியம் தான். பாருங்கள்? இந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். பவுல் இந்த அறிக்கையை விடுத்தான், அதாவது, அவனுக்குப் போதிக்கப்பட்ட உபதேசமேயல்லாமல், வேறெந்த உபதேசத்தையும், எந்த மனிதனும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட போதிக்கக் கூடாது என்று. எனவே நான் பிரசங்கியாக, ஒரு ஊழியக்காரனாக, ஒரு தீர்க்கதரிசியாக, அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாக இந்த அப்போஸ்தலன் செய்த ஒன்றுக்கு முரணான ஒன்றை போதிப் பேனானால், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் கட்டளையிடாமல் போனால், நான் விசுவாசிப்பதாக உரிமை கோருபவைகளுக்கு வேதத்தின்படி ஒரு கள்ளச் சாட்சியாயிருப்பேன்.
99. எனவே மாதிரியானது கொடுக்கப்பட்டு விட்டதென்று நான் நம்புகிறேன். வேதத்தில் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். ஒரு முறையாவது யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. பாருங்கள்? யாருமே ஒருக்காலும் தெளிக்கப்படவில்லை; அவர்கள் அனைவரும் தண்ணீரில் முழுக்கப்பட்டனர்.
100. எனவே நான் நம்புவது என்னவெனில், நீங்கள் உண்மையில்... உங்கள் கேள்விக்கு, விலையேறப் பெற்ற சகோதரனே, தேவன் உங்கள் இருதயத்தை அறியும் போது... ஆயிரக்கணக்கானோர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள். நீங்கள் உலர்ந்த பாவியாய் தண்ணீருக்குள் சென்று, ஈரமுள்ள பாவியாய் வெளியே வரக்கூடும். பாருங்கள், பாருங்கள்? ஆனால் உத்தமமான, உண்மையுள்ள விசுவாசியாய், நீங்கள் எல்லா விசுவாசத்திலும், தேவனுக்கு முன்பாக நல்மனச் சாட்சியிலும் நடந்து, அதைக் காணும்போது, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகின்றீர்கள்! உள்ளில் கிருபையின் கிரியை நடந்து விட்டது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்துவதே ஞானஸ்நானம் என்று நான் விசுவாசிக்கிறேன்.
101. தேவன் பேழையைக் கட்டினது போன்று. அவர், "நோவா. அதற்குள் நீயும் உன் வீட்டாரும் உன் குடும்பத்தினரும் போங்கள்" என்று சொன்னார். அவர்கள் அதற்குள்ளே பிரவேசித்தனர். ஒரு பேழை இல்லாமல் போயிருந்தால், தேவன் நோவாவை ஒரு மரக்கட்டையின் மேல் உட்காரச் செய்திருப்பார். அல்லது தண்ணீரின் மேல் நடக்கச் செய்திருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவன் உள்ளே பிரவேசிப்பதற்காக அவன் ஒரு பேழையை உண்டாக்கச் செய்தார். அதை செய்வதற்கு அது ஒன்றே வழி. அது தேவனால் அருளப்பட்ட வழி. தேவன் ஒரு மனிதனை கிருபையினால் இரட்சிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை வெளிப்படையாக தெரிவிப்பதின் மூலம் அதற்குள் பிரவேசிப்பதே தேவனால் அருளப்பட்ட வழியாயுள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் அந்த விதமாகத்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
102. நான் மற்றவரை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அது வெறும்... அதுதான் அது என்று நான் நினைக்கிறேன். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை, அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அது காண்பிக்கிறது; அது வெளிப்படையாக தெரியப்படுத்துதல். இப்பொழுது, அது ஒரு வேளை சரியில்லாமல் இருக்கலாம், சகோதரனே. அப்படி இருக்குமானால், நல்லது, அதை வேறொரு சமயம் பார்க்கலாம், அல்லது... சரி.