அந்த நபர் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளார். அவர்கள் இந்த நகருக்கு வெளியே வாழ்பவர்கள்.
40, இப்பொழுது, அது நல்ல கேள்வி. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒரு நபர் பெற வேண்டிய திட்டவட்டமான அனுபவமாகும். இதை நான் ஒரு நிமிடம் தெளிவாக்கட்டும். பாருங்கள்? அநேகர் கொண்டிருக்கும் கருத்து என்னவெனில்... அது திரிக்கப்பட்டு விட்டது என்று நான் நம்புகிறேன். இங்குள்ள இந்த சபைக்கும், இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சபைக்கும் ஒருக்கால் ஒரு கேள்வி இருக்கக் கூடும். அந்நிய பாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் தொடக்க அடையாளம் என்பதை நான் விசுவாசிப்பதில்லை என்று நான் குறிப்பிடும் போது (அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை). தேவனுடைய உதவியைக் கொண்டு அது தவறென்று வேதவாயிலாக என்னால் நிரூபிக்க முடியுமென்று நான் நம்புகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் அந்நிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாகும். எத்தனை பேருக்கு அது தெரியும்? தெய்வீக சுகமளித்தலும், பரிசுத்த ஆவியின் ஒரு வரமே. இப்பொழுது 'பீட்டில்ஸ்' (Beatleas) அதை செய்கின்றனர். பாருங்கள்?
41. இந்த வரங்களில் எந்த ஒன்றையும் பிசாசினால் பாவனை செய்ய முடியும். ஆண், பெண் மந்திரவாதிகள் அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைக்க முடியும். காட்டுப் பிரதேசங்களில், அநேக முறை ஒரு மந்திரவாதி அந்நிய பாஷைகள் பேசி, மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து, அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கிறான்.
42. அரிசோனாவில் அவர்கள் 'தானிய நடனம்' (Corn dance) என்னும் அந்த பழைய கொண்டாட்ட நடனத்தைச் செய்யும் போது, இந்தியர்கள் தங்கள் தானிய விளைச்சலுக்காக மழையை அனுப்ப தெய்வத்தினிடம் வேண்டிக்கொள்ளும் போது, அவர்கள் பெரிய பாம்புகளை தங்கள் மீது சுற்றிக் கொள்கின்றனர். அவர்கள் அதை 'தானிய நடனம்' என்றழைக்கின்றனர். அவர்கள் தானியத்தின் மகரந்தக் குஞ்சத்தை எடுத்து, அவர்கள் மேல் அதை வைத்து, ஒரு மேகத்தின் உருவை உண்டாக்கிக்கொண்டு நடனமாடுகின்றனர். மந்திரவாதி வைத்தியன் தன் தலையில் கொம்புகளை, எறுமை கொம்புகளைச் சூடிக்கொண்டு வருகிறான். அவர்கள் இந்த பெரிய பாம்புகளை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு நடனமாடுகின்றனர். அந்த இடத்தில் மந்திரவாதிகளும் புகை குழாயை உபயோகித்து புகை பிடிப்பவர்களும் மற்றவர்களும் உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒரு வெள்ளையனையும் அங்கு அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் 'இரு கண் தூரப் பார்வை கண்ணாடியின் (binoculars) மூலம் அவர்களைப் பார்த்திருக்கிறேன், மட்டுமல்ல அத்தகைய நடனத்தில் கலந்து கொண்ட இந்திய நண்பர்கள் எனக்குள்ளனர். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்த தானிய நடனத்தை அவர்கள் பாம்புகளைச் சுற்றிக் கொண்டு ஆடுகின்றனர். மந்திரவாதி அங்கு வந்து தன்னை கத்திகளால் கீறிக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறான். முடிவில் அவர்கள் ஆவிக்குள்ளாகி, அந்நிய பாஷைகள் பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர்.
43. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில் உங்களை நான் ஓரிடத்துக்கு கொண்டு செல்ல முடியும். அங்கே அசுத்த ஆவியினால் இயக்கப்படுகின்ற ஒருவன் (medium) ஒரு பென்சிலை மேசையின் மேல் வைத்து, நிஷ்டையில் ஆழ்ந்து, தன் கைகளை ஆட்டுகிறான். அப்பொழுது அந்த பென்சில் நேராக நின்று, அந்நிய பாஷையில் எழுதுகிறது. அந்த மந்திரவாதி எழுந்து நின்று அது என்ன சொல்லுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பான்.
44. இப்பொழுது, அது பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல பாருங்கள்? அதை நீங்கள் நம்ப முடியாது. ஆவியின் கனியையும் நீங்கள் நம்ப முடியாது, ஏனெனில் ஆவியின் முதற்கனி அன்பு. 'கிறிஸ்தவ விஞ்ஞானிகள்' என்று அழைக்கப்படுகிறவர்கள் எனக்குத் தெரிந்த வரையில், மற்றெல்லாரைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துகின்றனர், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கின்றனர். பாருங்கள்? என்னைப் பொறுத்த வரையில், பரிசுத்த ஆவியின் ஒரே அத்தாட்சி இந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையில் உண்மையான விசுவாசம் கொண்டிருத்தலே.
45. இப்பொழுது, அந்த யூதர்கள் வருகின்றனர்; அவர்களுக்கு சீஷர்களைக் காட்டிலும் அதிக மதப்பற்று இருந்தது. அவர்கள் சீஷர்களைக் காட்டிலும் வேதத்தில் அதிகம் பயிற்சிப் பெற்ற மக்களாயிருந்தனர், ஏனெனில் சீஷர்கள் மீன் பிடிக்கிறவர்களும், சுங்கவரி வசூலிப்பவர்களும், இத்தகைய தொழில்களைச் செய்தவர்களாயிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளில் உண்மையான விசுவாசம் இருந்தது. இப்பொழுது, இதைக் கூர்ந்து கவனியுங்கள்; இதைக் காணத்தவறாதீர்கள். பாருங்கள்? தயவு, சாந்தம் என்பது போன்ற ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசு கிறிஸ்துவை விட அதிகம் பிரகாசிக்காதவர்கள் அந்த ஆசாரியர்களில் ஒருவரும் கூட இல்லை என்று நினைக்கிறேன். இயேசு தேவாலயத்துக்கு பின்னின கயிறுடன் சென்று, அவர்களைக் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய மேசைகளைக் கவிழ்த்துப் போட்டு, அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியே துரத்தினார். அது சரியா? அவர் அவர்களைக் கோபத்துடன் பார்த்ததாக வேதம் உரைக்கிறது. வேதம் அவ்வாறு உரைக்கிறது. அது முற்றிலும் உண்மை.
46. எனவே பாருங்கள், அந்த ஆசாரியர்கள் தயவுள்ள வர்களாகவும், சாந்த குணமுள்ளவர்களாகவும், மக்களைப் புரிந்து கொள்ளுகிறவர்களாகவும் இருந்தனர். ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசுவைக் காட்டிலும் அதிக கனிகளை அவர்களால் காண்பிக்க முடிந்தது. வேதசாஸ்திரம் பயிலும் விஷயத்திலும், அவர் எந்த வேதசாஸ்திரப் பள்ளியிலிருந்து வந்தாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. “இந்த மனிதன் எங்கிருந்து வந்தான்? அவனுக்கு எந்த ஐக்கியச் சீட்டு உள்ளது? அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்? அவன் எங்கிருந்து வந்தான் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் முறை தவறிப் பிறந்து முற்றிலுமாக வெளியே தள்ளப்பட்ட ஒருவன். அவனை நாங்கள் சில நிமிடங்களில் வாயடைத்து விட்டு, எங்கள் பிரமாணங்களைக் கொண்டு காண்பிக்க முடியும்... “அந்த விஷயத்தில் அவர்கள் செய்ததைச் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தது. ஏன்? ஏனெனில் அவர் அந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்பதை அவர்கள் காணத்தவறினர். இயேசு அவர்களுடைய இருதயங்களிலிருந்த சிந்தனைகளை அறிந்து, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாய் அறிவித்து, வார்த்தையை செயல்படுத்தின அந்த ஒரு வழியில் மட்டுமே அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவர் தேவனுடைய வார்த்தையின்படி தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும், வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினது.
47. அவர் தேவனுடைய தீர்க்கதரிசி, ஊழியக்காரன், தீர்க்கதரிசியாகிய தேவன். தேவனுடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு முன்னால் இருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. மல்கியா, எரேமியா, ஏசாயா, எலியா போன்றவர்களே தேவனுடைய தீர்க்கதரிசிகள். ஆனால் இவரோ தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா?
அவருடைய வாழ்க்கையை பாகங்களாக சித்தரித்த தீர்க்கதரிசிகள் அனைவரும், தங்கள் பாகத்தை ஏற்று நடித்தனர். ஆனால் இவருக்குள் தீர்க்கதரிசிகள் அனைவரின் பரிபூரணமும் இருந்தது. தீர்க்கதரிசிகளுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. ஆனால் இவரோ வார்த்தையும் தீர்க்கதரிசியுமானவர், அதே நபர். பாருங்கள்?
48. இப்பொழுது, இப்பொழுது, ஒரு மனிதன் அவனிருக்கும் தற்போதைய நிலையில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது. நீங்கள் அதை சரியென்று... பாருங்கள்? அவர்களில் சிலர். "நல்லது, நான் ஒரு லுத்தரன்" என்கின்றனர். நல்லது. அதற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் கழுகுகள் அந்த ஆகாரத்தை தின்பதில்லை பாருங்கள்? அது நீண்ட காலம் முன்பு நடந்த ஒன்று. அது அந்நாளின் புதிய ஆகாரம்.
"நான் ஒரு வெஸ்லியன்" அது சரிதான். ஆனால் நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்?
இப்பொழுது, அந்த ஜனங்கள், "ஆபிரகாம் எங்கள் தகப்பன்" என்றனர்.
அந்த தீர்க்கதரிசி, " இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்” என்றான் (மத். 3:9). பாருங்கள்?
"நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள்".
அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அவன் “விரியன் பாம்புக்குட்டிகளே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? 'ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்' என்று சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண, வல்லவராயிருக்கிறார்" என்றான் (மத். 3:7,9). பாருங்கள்?
49. எனவே நன்கு பயிற்சி பெற்ற வேதசாஸ்திர பண்டிதனுக்கு இதனுடன் யாதொரு தொடர்பும் இல்லை. சாந்தமும் தயவும் உள்ளவர்களாயிருப்பதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அவரை வித்தியாசமாக்கினது எது? அவர் வார்த்தை மாம்சமானவர், மோசேயின் காலத்துக்கான வார்த்தை அல்ல. மோசே அந்த காலத்தின் வார்த்தையாயிருந்தான்; நோவாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, நோவா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; எலியாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, எலியா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
50. அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறது! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வீர்களானால், அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ, அதைப் பற்றி ஒன்றுமில்லை. தேவன் இப்பொழுது உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் அத்தாட்சி,
51. இயேசு உரைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சியை அவர் யோவான் 14ம் அதிகாரத்தில் உரைத்திருக்கிறார். அவர், “இன்னும் அநேகங் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அதற்கு எனக்கு இப்பொழுது நேரமில்லை. பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது. அவர் உங்களுக்குப் போதித்து, நான் உங்களிடம் கூறினதை உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" என்றார் (யோவான் 16:12-13). உங்களால் காண முடியவில்லையா? அதுதான் அத்தாட்சி, வரப்போகிற காரியங்களை முன்கூட்டி அறிவித்து, எழுதப்பட்ட வார்த்தைக்கு தெய்வீக வியாக்கியானம் உரைப்பது. அது தீர்க்கதரிசியின் அடையாளம் அல்லவா?
52. வேதத்தில் காணப்படும் ஞான திருஷ்டிக்காரன் (seer) முன்னறிவித்தது பிழையின்றி அப்படியே நடந்தது, யாரோ ஒருவர் அவன் மேல் கைகளை வைக்கவில்லை, அது வரம். தீர்க்கரிசி என்பவன் முன் குறிக்கப்பட்டு தீர்க்கதரிசியாயிருக்கப் பிறந்தவன். பாருங்கள்? அவனுடைய வாழ்நாள் முழுவதுமே அவன் தீர்க்கதரிசியாயிருக்கிறான், அது ஒரு உத்தியோகம். அங்கு தான் ஜனங்கள்...
53. இங்குள்ள பல கேள்விகள், “நல்லது. மணவாட்டி இதை செய்வாளா?" "இது நடக்குமா?" "சபை என்ன செய்யும்?" என்பதன் பேரில் உள்ளன. பாருங்கள்? அவர்கள் உள்ள ஸ்தானத்திலிருந்து அவர்களைப் பிரிக்க முடியாது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். சபை உபத்திரவக் காலத்தின் வழியாய் செல்கிறது. அவர்களைக் குறித்து “விருப்ப முள்ளவன் வரக்கடவன்" என்று கூறப்பட்டுள்ளது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள்.
54. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்து விதமான உத்தியோகங்கள் உண்டு. "தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகரையும், மேய்ப்பரையும், போதகரையும் ஏற்படுத்தினார் (எபே. 4:13). தேவன் அதை செய்தார். மனிதன் டீக்கன்மார் போன்றவர்களை ஏற்படுத்திக்கொள்கிறான், ஆனால் பாருங்கள், சபை சீர்பொருந்தும் பொருட்டு தேவன் சபையில் இவர்களை ஏற்படுத்துகிறார் - அதை பிரிக்க முடியாது.
55. இப்பொழுது, பரிசுத்த ஆவி வரும்போது, இந்த வார்த்தை சரியென்று உங்களுக்கு சாட்சி கொடுக்கிறது (பாருங்கள்?) - இன்றைக்கான வார்த்தை, லூத்தரின் காலத்துக்கான வார்த்தையல்ல, மோசேயின் காலத்துக்கான வார்த்தையல்ல. அது சத்தியமென்று நாம் சாட்சி பகருகிறோம், ஆனால் அது வேறொரு காலத்துக்குரியது.
56. இப்பொழுது, இயேசு இவ்வுலகிற்கு வந்து, "மோசே எல்லாரையும் எகிப்தை விட்டு வெளியே கொண்டு சென்றது போல நானும் உங்களை எங்காவது கொண்டு செல்வேன்" என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்.? அவர், "நாம் போய் ஒரு பேழையைக் கட்டுவோம். நான் தேவனாகிய கர்த்தர். நான் உலகத்தையும் அதில் உள்ளவர்களையும் மூழ்கடிக்கப் போகிறேன்" என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? அவர் வார்த்தைக்கு அப்பாற்பட்டிருப்பார்... பாருங்கள், அவர் அவ்விதம் வருவாரென்று வேதம் உரைக்கவில்லை. அப்படியானால் அவர் மேசியாவாய் இருந்திருக்க மாட்டார் அவர் எவ்வளவு தான் பேழையைக் கட்டினாலும், அவர் என்ன செய்திருந்தாலும், அவர் மேசியாவாவதற்கு தகுதியைப்பெற்றிருக்க மாட்டார். அல்லேலூயா! பார்த்தீர்களா? அது தகுதி. ஆம், ஐயா!
57. 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம் இவ்விதம் உரைக்கிறது. “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” (1 கொரி. 13:10). எனவே சிறுவர்களைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும் போது... இன்றைக்கு நமக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக உறுதிப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது. அப்பொழுது குறைவானது ஒழிந்து போம். "நான் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ, குழந்தைக் கேற்றவைகளை ஒழித்து விட்டேன்” (1 கொரி? 13:11), ஆமென்! நான் பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டால், மற்ற கேள்விகளைப் பார்க்க முடியாது.