64. நல்லது, சகோதரியே, இது உனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன். நான் உண்மையைக் கூறுவேன் என்று என் பேரில் நீ நம்பிக்கை வைத்துள்ளதால், அது எனக்கும் முக்கியம் வாய்ந்தது. இப்பொழுது, ஞாபகம் கொள், வேதம், “ஸ்திரீகள் விலையேறப் பெற்ற பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது தங்களை அலங்கரியாமல், அழியாத அலங்கரிப்பாகிய சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியால் அலங்கரித்துக் கொள்ளக்கடவர்கள் (இந்த வசனத்தை சற்று முன்பு மேற்கோள் காட்டினேன்). அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது" என்றுரைக்கிறது (1 தீமோ . 2:9-10; 1 பேது. 3:3-4).
65. இப்பொழுது, சகோதரியே, அதன் மூலம் இதை நான் கூற வரவில்லை, உனக்கு ஒரு ஆடை ஊசி' (pin) இருக்குமானால்.. .இப்பொழுது, இது நான் கூறுவது, கர்த்தர் அல்ல. ஒரு ஆடை ஊசியை, அல்லது உன் கணவர் உனக்கு வாங்கித் தந்த ஒரு கழுத்து மாலையை நீ அணிந்து கொள்ள விரும்பினால் - அல்லது அதைப் போன்ற ஒன்றை நீ ஏற்கனவே அணிந்திருந்தால், என்னைப் பொறுத்த வரையில், அது தவறல்ல. இது நான் கூறுவது. இதை ஞாபகம் கொள், நான் தெளிவாகக் கூறுகிறேன் , இது என் கருத்து. அது நீ அணுகும் முறையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்; அதை நீ செய்யும் விதத்தைப் பொறுத்தது. பார்? அதைச் செய்வதற்கான நோக்கம் என்னவென்பதைப் பொறுத்தது. அது உன்னை விடாப்பிடியாய் பற்றிக் கொள்கின்றது என்பதை நீ காணும்போது, அதை விட்டுவிடு. நான் நினைக்கிறேன், நீ விவாக மோதிரத்தை அணிந்திருப்பாயானால்...
66. நசரீன் மக்களே, விவாக மோதிரத்தை அணிந்துள்ள ஒரு ஸ்திரீக்கு நீங்கள் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை என்று எனக்குத் தெரியும். அந்த மனப்பான்மை அவசியமில்லை என்று நினைக்கிறேன். வேதாகம காலத்தில் அவர்கள் விவாக மோதிரங்களை அணிந்திருந்தனர், அது 'தலை மாலை' என்று அப்பொழுது அழைக்கப்பட்டது. அதை அவர்கள் தலையில் அணிந்து கொண்டிருந்தனர், அதில் ஒன்பது வெள்ளிக் காசுகள் இருந்தன. ஆனால் நான்... அவர்கள் விவாகமானவர்கள் என்பதைக் காண்பிக்க. அது சரியென்று நான் நினைக்கிறேன்.
67. ஸ்திரீகள் உடுத்து, நாணயமாக, சுத்தமாக, மாது சிரோமணியைப் போல் காணப்பட விரும்பினால், என்னைப் பொறுத்த வரையில் அதனால் ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் பெருமை கொள்ள அவ்விதம் செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தவறு செய்கின்றீர்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்தது.
68. சில காலத்துக்கு முன்பு அவர்கள் 'ஸ்காண்டில் பாவாடைகள்' என்று அழைக்கப்பட்ட பாவாடைகளை உடுத்திக் கொண்டது ஸ்திரீகளாகிய உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அவை மறுபடியும் வெளியே வருகின்றன என்று நினைக்கிறேன்... இப்பொழுது, அவைகளை 'ஸ்காண்டில்' என்பதற்கு பதிலாக 'ஸ்காண்ட்லெஸ்' என்று அழைக்கின்றனர். அந்த பெண்களும் வாலிப ஸ்திரீகளும்... வயோதிப ஸ்திரீகளும் கூட அதை உடுப்பது வழக்கம். ஏனெனில் அவர்கள் அனைவரும் இளமையாகக் காணப்பட விரும்புகின்றனர். சகோதரிகளாகிய உங்களை நான் கூறவில்லை, உலகப் பிரகாரமான ஸ்திரீகளையே குறிப்பிடுகிறேன். அவர்கள் தங்கள் பாவாடைகளை ஒவ்வொரு முறையும் ஒரு அடி உயர்த்தி வெட்டுவார்கள். அவர்கள் அழகான உள்ளாடையை அணிவார்கள். அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது, 'பின்னல்' (lace)சுருக்கம் (frill) வைத்து தைக்கப்பட்ட உள்ளாடை காணப்படும். அந்த உள்ளாடையைக் குறித்து உங்களுக்குத் தெரியும்.
69. 'டன்கர்ட்' (Dunkard) பெண் ஒருத்தி என்னிடம் வந்தாள். அவள் சற்று முன்பு தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் 'அசெம்பிளீஸ் ஆப் காட்' சபையைச் சேர்ந்தவள். இது நான் விவாகம் செய்து கொண்ட இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேய்ன் என்னுமிடத்தில் நடந்தது, அவள் என்னிடம் வந்தாள், மிகவும் அருமையான பெண். அவள், "சகோ. பிரன்ஹாமே, உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" என்றாள்.
நான், “சரி, சகோதரியே, அது என்ன?" என்று கேட்டேன்.
அவள், "ஒரு கிறிஸ்தவப் பெண் 'ஸ்காண்டில் பாவாடை' உடுத்துவது தவறென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றாள்.
நான், “சகோதரியே, அது என்னவிதமான பாவாடை என்று எனக்குத் தெரியவில்லை. 'ஸ்காண்டில் பாவாடை என்றால் என்ன?” என்று கேட்டேன். அவள் அது என்னவென்று எனக்கு விளக்கித் தந்தாள். நான்...
அவள், "அது உள்ளாடையைக் காண்பிக்கும் ஒன்று" என்றாள்.
70. “உள்ளாடையை ஏதோ ஒரு மனிதனுக்கு காண்பிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் உள்ளத்தில் என்ன உள்ளது? அவ்விதம் செய்வதற்கு ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு என்ன வேலை? ஒரு கிறிஸ்தவ பெண் அவ்வாறு செய்வதை எண்ணிப் பார்க்க முடிகிறதா?" என்று கேட்டேன்.
71. இப்பொழுது, பாருங்கள், ஒரு மனிதனுக்கு தன் உடலில் காண்பிக்க அதிகம் ஒன்றுமில்லை. அவன் அரை நிர்வாணியாய் நடந்து சென்றால், யாரும் அவதூறு பேசமாட்டார்கள். நான் ஆண்கள் சார்பில் பேசுவதாக எண்ண வேண்டாம், ஆனால் அவர்கள்... 'ஷர்ட்டைக் கழற்றிப் போட்டு, குட்டை கால்சட்டையுடன் நடந்து செல்லும் ஒரு மனிதனைப் பார்த்து எந்த விதமான பெண் கவரப்படுவாள் என்று உங்களுக்குத் தெரியும். பெரிய திடகாத்திரமுள்ள உடல், அது காண்பதற்கு அருவருப்பாய் உள்ளது. அங்குள்ள இந்த மனிதரைப் பாருங்கள். அதைக் காணும்போது ஒரு ஸ்திரீக்கு வாந்திப் பண்ணத்தான் தோன்றும். ஆனால் ஒரு ஸ்திரீயை நீங்கள் எடுத்துக் கொண்டு அவளை அந்த விதமான நிலையில் வைத்தால், அது வித்தியாசமான ஆலயம். உங்களுக்குப் புரிகிறதா? சரி.
72. நான் நினைக்கிறேன், கழுத்து மாலையைப் பொறுத்த வரையில்... நீங்கள்... நீங்கள் பத்து சென்டு அங்காடிக்கு போனதைப் போல் நிறைய ஆபரணங்களை அடுக்கிக்கொண்டு, காந்தத்தை உங்கள் மேல் கொண்டவர்களாய் செல்வீர்களானால், நான் நினைக்கிறேன், அது... அவ்விதம் கூறினதால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அவ்விதம் கூறவேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால் அது தவறு.
73. நான் முதன்முதலாக அமெரிக்காவைக் குறித்து வெட்கமடைந்து, அதற்கு விரோதமாக என்னைத் திருப்பின சம்பவம் என்னவென்றால்... ஒரு நாள் நான் ஸ்விட்சர்லாந்தில் இருந்தேன். லாசேன் என்னுமிடத்தில் நானும் சகோ. ஆர்கன் ப்ரைட்டும், ஒரு பெரிய, நல்ல 'ஸ்டீக்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்தோம். அது இவ்வளவு பெரிதாயிருந்தது, ஏறக்குறைய முக்கால் பவுண்டு எடையுள்ளதாயிருந்தது. அதன் விலை அமெரிக்க நாணயத்தில் முப்பது சென்டுகள் மட்டுமே. ஓ, நாங்கள் ராஜாக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் அங்கு செல்வோம். அங்குள்ள எல்லோருமே திராட்சரசம் குடிப்பார்கள், அது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. நான் அந்த திராட்சரசம் குடிக்க மறுத்து விட்டேன், எனவே நான் மருந்து கடைக்குச் சென்று அவர்கள் வைத்திருந்த வடி கட்டின தண்ணீர் ஒரு குப்பி வாங்கிக் கொண்டேன். நான் சென்றவிடமெல்லாம், அதை என்னுடன் கொண்டு சென்றேன். எல்லோரும், "அந்த மனிதன் தன் சொந்தரகம் திராட்சரசத்தை கூடக் கொண்டு செல்கிறார்" என்று நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனவே அதை என் கையில் பிடித்திருந்தேன். ஒரு நாள் நாங்கள் இந்த 'ஸ்டீக்'குகள் விற்கும் இடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது அமெரிக்கா அழகுராணி (Miss America)காரில் அங்கு வந்தாள். அவள் 1928ம் மாடல் ஷெவர்லே காரை ஓட்டி வந்தாள். அவள் 'பூடுல்' ரக நாய் ஒன்றை மடியில் வைத்திருந்தாள். அதையும் அவள் கடைக்குள்ளே கொண்டு வந்தாள். அவளுக்குப்போதிய... அந்த ஸ்திரீகள் இருவரும் பத்து சென்டு அங்காடியில் கிடைக்கும் நிறைய நகைகளை அணிந்திருந்தனர், பெரிய, நீண்ட, காதணிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன, முகத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்குமே ஐம்பது வயதிருக்கும், என் வயது. அவர்கள் பதினைந்து வயது பெண்களாக ஆக விரும்பினர் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவர்கள் என்ன செய்ய முயன்றனர்? அவர்கள் வாழ்க்கை சாலையில் காரோட்டிக் கொண்டு, பின்புறம் காணும் கண்ணாடி வழியாய் பார்த்து, அவர்கள் முன்பு எவ்விதம் காணப்பட்டனர் என்பதை பின் நோக்கிக் காண முயன்றனர்.
74. இப்பொழுது, கிறிஸ்தவர்களே, அப்படிச் செய்யாதே ஒரு கிறிஸ்தவன், அவன் முன்பு காணப்பட்ட விதமாக இருக்க முயல்வதில்லை; அவன் முன்பு எங்கிருந்தான் என்பதை நோக்கி பாராமல், அவன் எங்கு செல்கிறான் என்பதையே நோக்குகின்றான். பாருங்கள், பாருங்கள்? முன்பு எவ்விதம் இருந்தாய் என்பதைக் குறித்து கவனம் செலுத்தாதே; அதை நீ வாழ்ந்து முடித்து விட்டாய். அதற்கு நீ திரும்பிச் செல்லப் போவதில்லை; அது முன் காலத்து ஒன்று. காரிலுள்ள பின்புறம் காணும் கண்ணாடியின் வழியாக வாழ்க்கை சாலையில் காரோட்டிச் செல்லும் எந்த மனிதனும் விபத்துக்குள்ளாகி நாசமடைவான்; அப்படித்தான் கிறிஸ்தவ சாலையில் பயணம் செல்லும் உங்களுக்கும் நேரிடும். நீ என்னவாயிருந்தாய் என்று பின்நோக்கிப் பாராதே, நீ என்னவாய் இருக்கப்போகின்றாய் என்பதை முன்நோக்கிப் பார். பவுல், "பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்றான் (பிலி. 3:13-14).
75. அது உங்களை வெட்கத்துக்குள்ளாக்கியது. அவர்கள் இந்த சிறு, நாற்றமெடுத்த நாயை உள்ளே கொண்டு வந்து மேசையின் மேல் உட்கார வைத்தனர். அது எவரையும் வாந்தி பண்ணச்செய்யும்! அங்கு தங்கள் கைகளினால் அந்த நாயிடம் அங்கு விளையாடிக் கொண்டு, அதே கைகளை உபயோகித்து அதை தின்றனர். உணவு கொண்டு வருகிறவன் (waiter) அங்கு வந்து அவர்களிடம் ஏதோ ஒன்றைத் தன் மொழியில் உளறினான், டாக்டர் குக்கென்புல் அப்பொழுது என்னுடன் இருந்தார். அவர் சிரிக்கத் தொடங்கி, தலையைத் திருப்பிக் கொண்டார்.
நான், “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டேன்.
“அந்த 'வேய்ட்டர்' அந்த நாயை கீழே இறக்கி விடக் கூறினான். ஆனால் அங்கிருந்தவர்கள் 'அவளை விட்டு விடு. அவள் அமெரிக்க நாட்டுப் பெண்' என்றனர்” என்றார். அதாவது “அவளுக்கு இதை விட நல்லது வேறொன்றும் தெரியாது" என்னும் அர்த்தத்தில் கூறினர். பாருங்கள்?
76. நான் ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரத்திலுள்ள செயின்ட் ஆஞ்சலோ என்னுமிடத்துக்குச் சென்றிருந்த போது (இதை சிந்தித்துப் பாருங்கள்), அவர்கள் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருந்தனர்: “அமெரிக்க ஸ்திரீகளே, நீங்கள் சவ அறையில் பிரவேசிக்கும் முன்பு, இறந்தோரை கெளரவிக்க உங்கள் உடைகளை அணிந்து கொள்ளுங்கள்" கத்தோலிக்க சபை. பாருங்கள்?