193. நிச்சயமாக அவர்கள் விவாகமானவர்களே, அவர்கள் பொருத்தனை செய்து கொண்ட வரைக்கும் அவர்கள் விவாகமானவர்களே. உதாரணமாக, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக நல் விசுவாசத்துடன் வாக்கு கொடுத்திருந்தால், அவன் அந்த பெண்ணை விவாகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறான். அவன் அவளை விவாகம் செய்து கொண்டதற்கு சமானம். நாட்டின் சட்டம் - செய்கின்ற ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, நீங்கள் ஒன்றாக வாழ்வதற்கு அது உங்களுக்கு உரிமை பத்திரம் அளிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயிடம், "நான் உன்னை விவாகம் செய்து கொள்வேன், தேனே; உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்வேன், நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?" என்று கேட்டால், அவன் விவாகமானவன்.
194. உங்கள் விவாக பொருத்தனை புனிதமானது; அது தான் உங்களை விவாகம் செய்து வைக்கிறது. எந்த பிரசங்கியும், எந்த மாஜிஸ்ட்ரேட்டும் அல்லது எவருமே உங்களை விவாகம் செய்து வைக்கிறதில்லை; நீங்கள் தேவனுக்கும் இந்த மனிதனுக்கும் செய்யும் பொருத்தனையே விவாகம் செய்விக்கிறது. நீங்கள் வாக்கு கொடுக்கும் போது, உங்களுக்கு விவாகமாகி விடுகிறது.
195. பாருங்கள், நீங்கள், "சகோ. பிரன்ஹாமே, அது சரிதானா? நீங்கள் வேதத்தைக் கொண்டு மாத்திரமே பதில் சொல்வீர்கள் என்று கூறினீர்களே" எனலாம். அதைக் குறித்த வேத ஆதாரம் உங்களுக்கு வேண்டுமா? வேண்டுமானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, நமக்கு ஆறு அல்லது எட்டு நிமிடங்கள் உள்ளன. சரி.
196. யோசேப்பு. அவளுடைய புருஷன் நீதிமானாயிருந்த படியால் (அவளுடைய புருஷனாக அவன் நியமிக்கப்பட்டிருந்தான், ஆனால் அவன் ஏற்கனவே அவளுடைய புருஷன் என்று அழைக்கப்பட்டான்)... "யோசேப்பு நீதிமானாயிருந்து. அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவர்கள் கூடி வருமுன்னே, அவள், பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (பாருங்கள்?) கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே என்றான்" (மத்.1:19,20). அவனுக்கு ஏற்கனவே விவாகமாகி விட்டது. அவன் ஏற்கனவே அவளுக்கு வாக்கு கொடுத்தாகி விட்டது.
197. மற்றும்... சிறு பெண்ணே, அந்த பையனை விவாகம் செய்து கொள்வதாக நீ வாக்கு கொடுத்திருந்தால், அதை செய்ய நீ கடமைப்பட்டிருக்கிறாய். அந்த கடமைக்கு பிறகு, நீ வேறொருவனை விவாகம் செய்து கொண்டால் - இப்பொழுது முதல் அதை நீ எப்படியும் செய்வாய் நீ விபசாரத்தில் வாழ்கிறவளாயிருப்பாய். கவனி, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தாலும், அதே காரியம் தான்.
198. நீங்கள் கைக்கொள்வதாக இருந்தால் மாத்திரமே நீங்கள் வாக்கு பண்ணுங்கள், இல்லையென்றால் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். அதற்கு வேத ஆதாரம் உண்டென்பதை ஞாபகம் கொள்ளுங்கள். யோசேப்பு மரியாளை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான். அதுதான் விவாகமான நிலை என்பதாக தேவன் கூறினார்.
199. அதைக் குறித்த பழைய ஏற்பாட்டு பிரமாணத்தைப் படியுங்கள். பாருங்கள்? பழைய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி நீங்கள் ஒரு பெண்ணை மணந்து கொள்வதாக வாக்கு கொடுத்து விட்டு, வேறொருத்தியை மணந்து கொண்டால், நீங்கள் விபச்சாரம் செய்பவராகி விடுகிறீர்கள், அது உங்களை பாளயத்திலிருந்து புறம்பாக்கும். ஆம், ஐயா! ஒரு பெண்ணுக்கு நீங்கள் வாக்கு கொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும். அவள் புனிதமான சிறு பாண்டம், அது உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வர வேண்டியதாயுள்ளது. எனவே நீங்கள் அவளுக்கு வாக்கு கொடுக்கும்போது, அவளை நீங்கள் விவாகம் செய்து கொள்ள வேண்டும்.