26. நல்லது, அவர்கள் வேதவசனத்தை அப்படியே எழுதியிருக்கிறார்கள்; அது பவுல் ரோமருக்கு உரைத்தது. இப்பொழுது அவன் என்ன கூறுகிறான் என்றால்... நீங்கள் காணத்தக்கதாக இதை நான் சற்று மெருகேற்றட்டும். அவன், “எனக்குள் இரு நபர்கள் உள்ளனர்; ஒருவன் நான் நல்லது செய்ய வேண்டுமென்கிறான்; மற்றவன் நான் கெடுதல் செய்ய வேண்டுமென்கிறான். நான் நல்லது செய்ய முனையும் போதெல்லாம், கெடுதல் அதை தடை செய்கிறது” என்கிறான்.
27. “இன்று பிற்பகல் பேட்டிக்கு வந்திருந்த எத்தனை பேருக்கு அதே விதமான அனுபவம் உண்டாயிருந்தது. (பாருங்கள்?) அதேகாரியம்? இன்று காலையில் நான் அதைக் குறித்து சிறிது பேசினேன்.
28. உங்கள் வெளிப்புற மனிதன் ஆறு புலன்களுக்கு உட்பட்டிருக்கிறான்; உங்கள் உள்ளான மனிதன் விசுவாசம் என்னும் ஒரே புலனுக்கு உட்பட்டிருக்கிறான். இந்த விசுவாசத்துடன் அந்த ஆறு புலன்களும் ஒத்துப் போகாதிருந்தால், விசுவாசமும் அந்த ஆறு புலன்களுடன் ஒத்துப்போகாது. ஒன்று மற்றதுக்கு முரணாயிருக்கும். ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போனால் நல்லது, ஆனால் ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போகாமலிருந்தால், ஆறு புலன்களை தனியே விட்டு விடுங்கள்.
29. இப்பொழுது, இங்கு உதாரணமாக, இயேசு ஒன்றைக்கூறினார், ஒரு வாக்குத்தத்தத்தை அருளினார் என்று வைத்துக் கொள்வோம். உள்ளான மனிதன். அது உண்மை என்கிறான். ஆனால் வெளிப்புற மனிதனோ தன் அறிவை பயன்படுத்தி யோசித்து, அது உண்மையல்ல என்பானானால், வெளிப்புற மனிதனை தள்ளி விட்டு, உள்ளான மனிதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இதே காரியத்தைக் குறித்து தான் பவுல் பேசுகிறான், அவன் பாவத்துக்குக்கீழாக விற்கப்பட்டு மாம்சத்துக்குரியவனாயிருந்தான். நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கிறோம். ஆகையால் தான் நமக்குத் தொல்லைகள் நேரிடுகின்றன - நான்கைந்து முறை விவாகம் செய்தல், இது, அது, எல்லாவிதமான பாவங்கள், விபச்சாரங்கள் போன்ற நமது வாழ்க்கையில் காணப்படுபவை இவைகளின் காரணமாகவே. நாம் மாம்சத்துக் குரியவர்களாயிருக்கிறோம். அந்த பாகம் நிர்மூலமாக வேண்டும்; ஆனால் உள்ளில் நாம் ஆவிக்குரிய மனிதனாயிருக்கிறோம், உள்ளில் உள்ள ஆத்துமா. அது தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டிருக்கு மானால், அப்பொழுது நாம் தேவன், உரைத்ததை ஏற்றுக்கொண்டு, நமது வெளிப்புற சரீரத்தை விசுவாசத்தின் மூலமாய் வார்த்தைக்கு கீழ்படுத்துகிறோம்.
30. ஒரு களை விதையை நான் எடுத்துக் கொண்டு அதை எப்படி கோதுமை மணியாக என்னால் மாற்ற முடியும்? அது என்னால் கூடாத காரியம். அதைச் செய்யக்கூடிய ஒரே வழி அந்த களை விதைக்குள் கோதுமை வித்தின் சத்தை நுழைப்பதே. அப்பொழுது நீங்கள் களை விதையை விதைத்தால், அது கோதுமை மணியைக் கொடுக்கும். (அது உண்மை, பாருங்கள்?), ஏனெனில் கோதுமை வித்தின் சத்து அந்த களை விதைக்குள் புகுத்தப்பட்டது. களை விதையின் சத்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் களை விதையின் தன்மை பிசு பிசுவென்று கையில் ஒட்டுவதே. அதற்குள் இருக்கும் இந்த புது ஜீவன் தரைக்கு மேல் வளர்ந்து பெரிதாகும் வரைக்கும் அது அப்படித்தான் இருக்கும். அது வளர்ந்து மேலே வரும்போது, அது களை விதையாக இருக்காது, ஆனால் அது கோதுமை மணியாயிருக்கும். ஆனால் அது பூமியின் மேல் இருக்கும் போது பிசுபிசுத்தன்மை கொண்டதாயிருக்கும், ஆனால் உள்ளிலோ அது கோதுமையின் இயல்பைக் கொண்ட தாயிருக்கும்.
31. “ நீங்கள் இந்த வாழ்க்கையில் உள்ள வரைக்கும் பிசு பிசுத்தன்மை கொண்டவர்களாய் மாம்ச சுபாவத்தைப் பெற்றிருப்பீர்கள்; நீங்கள் உயிரோடுள்ள வரைக்கும் அது உங்களைத் தொல்லைப்படுத்திக்கொண்டேயிருக்கும். ஆனால் உள்ளிலோ நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிரோடெழும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சாயலை உடையவர்களாய் இருப்பீர்கள், எல்லா பாவமும் உங்களை விட்டுப்போயிருக்கும். பாருங்கள்? அது தான் காரியம்.
32. இதை நான் கூறட்டுமா? அது ஹாஸ்யமாக தொனிக்கக்கூடும். ஒரு சிகப்பு இந்தியன்... அவர்கள் விசித்திரமான ஜனங்கள். நான்... அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல, நமக்கு அவர்கள் விசித்திரமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சரியாகத்தான் உள்ளனர். நீங்கள் அவர்களை அறிவீர்களானால், அவர்கள் சரியாகவே உள்ளனர். ஒரு முறை ஒரு சிகப்பு இந்தியன் இரட்சிக்கப்பட்ட போது, அவனிடம் இவ்வாறு கேட்கப்பட்டது.
33. அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. பில்லி ஜெப அட்டைகளை வினியோகித்துக் கொண்டிருந்தான். அவன் வழக்கமாக ஓரிடத்தில் நின்று கொண்டு ஜெப அட்டைகளை வினியோகிப்பான், ஓடக்கூடிய ஜனங்கள் அவனிடம் ஓடிச்சென்று ஜெப அட்டைகளை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொள்வார்கள்... உடல்நிலை நன்றாயிருப்பவர்கள். உதாரணமாக தலைவலி, பல்வலியினால் அவதிப்படுபவர்கள், பாதவிரலில் சிறிது கோளாறு உள்ளவர்கள் ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர். அப்படிப்பட்டவர்கள் ஜெப வரிசையில் வரும்போது, என்னிடம் வந்தவர்கள், தலைவலியால் அவதிப்படுபவர்கள், “பாதவிரலில் ஏதோ கோளாறு உள்ளவர்கள் போன்றவர்களே... புற்று நோயால் மரித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்கள் ஜெபவரிசையில் வருவதில்லை. நான் பில்லியிடம், “நீ போய் அந்த ஜனங்களிடம் அவர்களுக்கு என்ன வியாதி என்று கேள். அவர்களுக்குப் புற்று நோய் அல்லது அவர்களைக் கொன்று போடத்தக்க, வேறெந்த பயங்கரமான வியாதியும் இல்லாவிட்டால், அவர்களுக்கு ஜெப அட்டைகளைக் கொடுக்காதே. தேவனுடைய உதவி பெறாவிட்டால் மரித்துப் போகும் நிலையிலுள்ள அப்படிப்பட்டவர்களை ஜெப வரிசையில் கொண்டு வா. மற்றவர்கள் சிறிது காத்திருக்கட்டும். அவர்கள் பிறகு வேகமான வரிசையில் வரட்டும். ஆனால் மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள்... அவர்களைக் கேள்” என்றேன்.
அவன், “ஜெப அட்டைகளை குலுக்கி விட்டு அவர்களுக்கு வினியோகம் பண்ணு” என்றீர்கள். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றான்.
நான், “ஆனால் மற்றவர்களை விட வேகமாக முன்னால் ஓடி வர முடியும் ஜனங்கள் அட்டைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
“ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு அட்டைகள் கிடைப்பதில்லை” என்றேன்.
“சரி, நான் அப்படியே செய்கிறேன்” என்றான்.
அவன் ஜனங்களிடம் சென்ற போது, அங்கு வயோதிப சிகப்பு இந்தியன் ஒருவன் இருந்தான். அவர்கள் விசித்திர மானவர்கள். அவன் நாற்காலியில் உட்கார மறுத்து விட்டான். அவனுக்கு அவர்கள் ஒரு நாற்காலியைக் கொடுத்தனர், ஆனால் அவனோ அந்த கூடாரத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டான். அவன் ஒரு தொப்பியை அணிந்திருந்தான்; அதைக் கழற்ற மறுத்துவிட்டான். அதன் பின்பக்கத்தில் ஒரு சிறகு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான்.
பில்லி அவனிடம் நடந்து சென்று, “தலைவரே, ஜெப அட்டை வேண்டுமா?” என்று கேட்டான்.
“ஹும்” என்று அவன் பதிலளித்தான். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று பில்லி கேட்டான். அவன், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான்.
பில்லி மறுபடியும். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது,
“நான் வியாதியாயிருக்கிறேன்” என்ற பதிலே மறுபடியும் வந்தது.
34. “அவ்வளவு தான் அவனிடமிருந்து பில்லி அறிந்து கொள்ள முடிந்தது. சரி, நான் சற்று கழித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு பில்லி மற்ற ஜனங்களிடம் சென்று அவர்களை விசாரிக்கத் தொடங்கினான். ஜெப அட்டைகள் குறைந்து கொண்டே வருவதை இந்த வயோதிப சிகப்பு இந்தியன் கவனித்துக் கொண்டே வந்தான். ஒவ்வொரு முறையும் பில்லி ஜேபியிலிருந்து ஜெப அட்டை எடுக்கும் தோறும், அவை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தன. எனவே சற்று கழிந்து அந்த வயோதிப சிகப்பு இந்தியன் எழுந்து பில்லியிடம் நடந்து சென்று அவனை முதுகில் தட்டி அவன் அங்கிருப்பதை ஞாபகப்படுத்தினான். பில்லி, “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது,
“நான் வியாதியாயிருக்கிறேன்” என்று மறுபடியும் அவனிடம் பதில் வந்தது.
பில்லி, “நல்லது, உனக்கு என்ன வியாதி என்று நீ என்னிடம் கூற வேண்டும். வயிற்று வலி, தலை வலி உள்ளவர்களுக்கு ஜெப அட்டைகள் வினியோகிக்க வேண்டாம் என்று அப்பா கூறி விட்டார். அதிகமாக வியாதிப்பட்டவர்களுக்கே கொடுக்கும்படி சொன்னார். உன்னுடைய வியாதி எப்படிப்பட்டது? என்று கேட்டான்.
அவன் “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான். பில்லி அவனை உட்கார வைத்து விட்டு மற்றவர்களிடம் சென்றான்.
அவனிடம் இருந்த ஜெப அட்டைகள் ஏறக்குறைய தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. சில நிமிடங்கள் கழித்து (அந்த சிகப்பு இந்தியன் அதை கவனித்துக் கொண்டேயிருந்து) அவன் மறுபடியும் “பில்லியிடம் சென்று அவனை முதுகில் தட்டினான். பில்லி அவனுடைய கையில் ஒரு ஜெப அட்டையைக் கொடுத்து “நான் வியாதியாயிருக்கிறேன்” என்று அதில் எழுது” என்றான்.
35. அவன் ஜெப வரிசையில் வந்த போது அவனுக்காக நான் ஜெபித்தேன். நான் அவனிடம், “நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன்.
அவன், “அது உண்மை” என்றான்.
நான், “தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன்,
அவன், “அது உண்மை” என்றான், நான், “நீ நல்லவனாக இருப்பாயா?!” என்று கேட்டேன். அவன், “அது உண்மை “ என்றான்.
ஒரு வாரம் கழித்து அவனை நான் சந்தித்தேன். சகோ: ஃபிரட் சாத்மனும் அப்பொழுது அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். அது கூடார கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம். அது பீனிக்ஸில் நடந்தது. வாரத்தின் முடிவில் அவனைச் சந்தித்தேன். “நீ சுகமாயிருக்கிறாயா?” என்று அவனை நான் கேட்டேன்.
அவன், “அது உண்மை” என்று பதிலளித்தான். பார்க்கப் போனால்... அங்குள்ள அந்த மிஷனரியின் பெயர் என்ன, வெள்ளை மீசை வைத்துக்கொண்டிருக்கும் அந்த முதியவர்? அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. அவர் ஒரு அருமையான முதியவர். அவருடைய மனைவி புற்று நோயிலிருந்து சுகமடைந்தாள். அவர் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, அந்த சிகப்பு இந்தியனுக்கு அந்த இரண்டு வாக்கியங்கள் மட்டுமே தெரியும். நான் அவனுக்கு, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றும் “அது உண்மை என்றும் சொல்ல கற்பித்துக் கொடுத்தேன். அது தான், பாருங்கள்” என்றார். “அது உண்மை. நான் வியாதியாயிருக்கிறேன்”.
36. அவன் ஒரு சமயம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். அவர் அவனிடம், “நீ எப்படியிருக்கிறாய்? என்று கேட்டதற்கு,
அவன், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறேன்” என்றானாம்.
அவர், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறாய் என்றால் அதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டாராம்.
அவன், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட முதற்கு எனக்குள் இரண்டு நாய்கள் உள்ளன. ஒன்று கறுப்பு நாய், மற்றது வெள்ளை நாய் அவை எப்பொழுதும் ஒன்றோடொன்று தர்க்கித்து, ஒன்றைப் பார்த்து மற்றொன்று குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன: வெள்ளை நாய் எனக்கு நன்மை செய்ய வேண்டுமென்று விரும்புகிறது, கறுப்பு நாய் எனக்குத் தீமை செய்ய நினைக்கிறது” என்றானாம்.
“நல்லது, சண்டையில் எந்த நாய் ஜெயிக்கிறது? என்று அவனைக் கேட்டதற்கு,
37. அவன், “நான் எந்த நாய்க்கு ஆகாரம் அதிகம் கொடுக்கிறேன் என்பதை அது பொறுத்தது” என்றானாம். பாருங்கள்? அது ஒரு நல்ல பதில் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிற அந்த இரு சுபாவங்களில், நீங்கள் எந்த சுபாவத்தை ஆதரிக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது - உலகப் பிரகாரமான காரியங்களில் “ஈடுபட்டிருக்கும் மாம்சத்துக்குரிய சுபாவத்தையா. அல்லது தேவனுடைய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஆவிக்குரிய சுபாவத்தையா? அது தான்.